திருப்புகழ் · 476அத்தன் அன்னை (சிதம்பரம்)

aththanannai

தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய
தத்த தன்ன தய்ய ...... தனதான
அத்த னன்னை யில்லம் வைத்த சொன்னம் வெள்ளி
அத்தை நண்ணு செல்வ ...... ருடனாகி
அத்து பண்ணு கல்வி சுற்ற மென்னு மல்ல
லற்று நின்னை வல்ல ...... படிபாடி
முத்த னென்ன வல்லை யத்த னென்ன வள்ளி
முத்த னென்ன வுள்ள ...... முணராதே
முட்ட வெண்மை யுள்ள பட்ட னெண்மை கொள்ளு
முட்ட னிங்ங னைவ ...... தொழியாதோ
தித்தி மன்னு தில்லை நிர்த்தர் கண்ணி னுள்ளு
தித்து மன்னு பிள்ளை ...... முருகோனே
சித்தி மன்னு செய்ய சத்தி துன்னு கைய
சித்ர வண்ண வல்லி ...... யலர்சூடும்
பத்த ருண்மை சொல்லு ளுற்ற செம்மல் வெள்ளி
பத்தர் கன்னி புல்லு ...... மணிமார்பா
பச்சை வன்னி யல்லி செச்சை சென்னி யுள்ள
பச்சை மஞ்ஞை வல்ல ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • அத்தன் அன்னை இல்லம் வைத்த சொன்னம் வெள்ளி அத்தை நண்ணு செல்வர் உடனாகி
    தந்தை, தாய், வீடு, வைத்துள்ள பொன், வெள்ளி, தந்தையின் சகோதரி, பொருந்திய பிள்ளைகள் இவர்களுடன் கூடியவராய்,
  • அத்து பண்ணு கல்வி சுற்றம் என்னும் அல்லல் அற்று நின்னை வல்லபடி பாடி
    செய்தொழிலால் (போதாத) வருமானம், கற்று (முடிவுறாத) கல்வி, (அல்லல் தரும்) உறவினர் என்று சொல்லப்படும் துன்பங்கள் நீங்கி, உன்னை இயன்ற வகையினால் பாடி,
  • முத்தன் என்ன வல்லை அத்தன் என்ன வள்ளி முத்தன் என்ன உள்ளம் உணராதே
    முக்தி தர வல்லவன் (நீ ஒருவனே) என்றும், திருவலம் என்னும் தலத்தின் பெருமான் என்றும், வள்ளியின் காதலன் என்றும் என்னுடைய உள்ளத்தில் நான் உணராமல்,
  • முட்ட வெண்மை உள்ள பட்டன் எண்மை கொள்ளும் முட்டன் இங்ஙன் நைவது ஒழியாதோ
    முழுமையான அறியாமை நிறைந்த புலவனும் எளிமை கொண்ட மூடனுமாகிய நான் இப்படி வருந்தி இரங்குவது நீங்காதோ?
  • தித்தி மன்னும் தில்லை நிர்த்தர் கண்ணின் உள் உதித்து மன்னு பிள்ளை முருகோனே
    தித்தி என்னும் தாள ஜதி ஒலிக்கும் தில்லையில் நடனமாடும் நடராஜரின் கண்களினின்றும் தோன்றி நிலை பெற்றுள்ள மகனாகிய முருகனே,
  • சித்தி மன்னு செய்ய சத்தி துன்னும் கைய
    பல சித்திகளுக்கு இடமாய் விளங்கும் வேலாயுதம் விளங்கும் திருக்கரத்தோனே,
  • சித்ர வண்ணவல்லி அலர் சூடும் பத்தர் உண்மை சொல் உள் உற்ற செம்மல்
    அழகிய திருவுருவம் வாய்ந்த வள்ளி மலர் சூட்டிப் பணியும், பக்தர்களுடைய மெய் பொருந்திய திருவாக்கில் விளங்கும், செம்மலே,
  • வெள் இபத்தர் கன்னி புல்லும் மணி மார்பா
    வெள்ளை யானையை (ஐராவதத்தை) உடைய இந்திரனின் பெண் (தேவயானை) தழுவும் அழகிய மார்பனே,
  • பச்சை வன்னி அல்லி செச்சை சென்னி உள்ள பச்சை மஞ்ஞை வல்ல பெருமாளே.
    பச்சை நிறமான வன்னி, அல்லி, வெட்சி இவைகளைத் தலையில் அணிந்தவனே, பச்சை நிறமுடைய மயிலைச் செலுத்த வல்ல பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits