திருப்புகழ் · 433பாலாய் நூலாய் (திருவருணை)

pAlAinUlAi

தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
பாலாய் நூலாய் தேனாய் நீளாய்
பாகாய் வாய்சொற் ...... கொடியார்தாம்
பாடா வாடா வேடா வாலே
பாடா யீடற் ...... றிடைபீறுந்
தோலா லேகா லாலே யூனா
லேசூழ் பாசக் ...... குடில்மாசு
தோயா மாயா வோயா நோயால்
சோர்வாய் மாளக் ...... கடவேனோ
ஞாலா மேலா வேதா போதா
நாதா சோதிக் ...... கிரியோனே
ஞானா சாரா வானாள் கோனே
நானா வேதப் ...... பொருளோனே
வேலா பாலா சீலா காரா
வேளே வேடக் ...... கொடிகோவே
வீரா தாரா ஆறா தாரா
வீரா வீரப் ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • பாலாய் நூலாய் தேனாய் நீளாய் பாகாய்
    பால் போன்றதும், (இனிய தமிழ்) நூல் போன்றதும், தேன் போன்றதும், நீண்டு கம்பிப் பதமாய் வருகின்ற காய்ச்சின வெல்லம் போன்றதுமாய் இனிக்கும்
  • வாய்ச் சொல் கொடியார் தாம்
    வாய்ச் சொல்லை உடைய கொடி போன்ற விலைமாதர்கள்
  • பாடா வாடா வேள் தாவாலே பாடாய் ஈடு அற்று
    பாடியும், ஆடியும் விருப்பத்தைத் தெரிவிக்கும் வலிமையினாலே காமநோய் உற்றவனாய் என் தகுதி தொலைந்துபோய் நின்று,
  • இடை பீறும் தோலாலே காலாலே ஊனாலே சூழ் பாசக் குடில்
    வாழ்க்கையின் இடையிலேயே கிழிபட்டுப் போகும் தோலாலும், காற்றினாலும், மாமிசத்தாலும் சூழப்பட்டுள்ளதும், பற்றுகளுக்கு இடமானதுமான குடிசையாகிய இந்த உடல்
  • மாசு தோயா மாயா ஓயா நோயால் சோர்வாய் மாளக் கடவேனோ
    குற்றங்கள் தோய்ந்தும், ஒளி மழுங்கியும், முடிவில்லாத நோயினால் தளர்ச்சி உற்றும் இறந்துபடக் கடவேனோ?
  • ஞாலா மேலா வேதா போதா
    பூமியில் மேம்பட்டு நிற்பவனே, பிரமனுக்கு போதித்தவனே,
  • நாதா சோதிக் கிரியோனே
    நாதனே, ஜோதி மலையாகிய அருணாசலப் பிரானே,
  • ஞான ஆசார வான் ஆள் கோனே
    ஞான மார்க்கத்தில் முதல்வனே, வானுலகை ஆள்கின்ற தலைவனே,
  • நானா வேதப் பொருளோனே
    பல வகையான வேதங்களுக்கும் உட் பொருளானவனே,
  • வேலா பாலா சீல ஆகாரா
    வேலனே, பரமசிவ பாலனே, பரிசுத்த வடிவனே,
  • வேளே வேடக் கொடி கோவே
    செவ்வேளே, கொடி போன்ற வேடப் பெண் வள்ளியின் மணவாளனே,
  • வீர ஆதாரா ஆறு ஆதாரா
    வீரத்துக்கு ஆதாரமானவனே, மூலாதாரம் முதலிய ஆறு ஆதாரங்களுக்கும் உரியவனே,
  • வீரா வீரப் பெருமாளே.
    வீரனே, வீரமுள்ள பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits