தான தனதன தத்தம் ...... தனதான
பாண மலரது தைக்கும் ...... படியாலே
பாவி யிளமதி கக்குங் ...... கனலாலே
நாண மழிய வுரைக்குங் ...... குயிலாலே
நானு மயலி லிளைக்குந் ...... தரமோதான்
சேணி லரிவை யணைக்குந் ...... திருமார்பா
தேவர் மகுட மணக்குங் ...... கழல்வீரா
காண அருணையில் நிற்குங் ...... கதிர்வேலா
காலன் முதுகை விரிக்கும் ...... பெருமாளே.
- பாண மலர் அது தைக்கும் படியாலே
மன்மதனது மலர்ப் பாணங்கள் தைக்கும் காரணத்திலாலும், - பாவி இள மதி கக்கும் கனலாலே
பாவி இளம் பிறை வீசுகின்ற நெருப்பாலும், - நாணம் அழிய உரைக்கும் குயிலாலே
(என்) மானத்தைக் கெடுக்கும் வகையில் கூவுகின்ற குயிலாலும், - நானும் மயலில் இளைக்கும் தரமோ தான்
நானும் காம மயக்கத்தால் இளைத்துப் போதல் நியாயமோ தான்? - சேணில் அரிவை அணைக்கும் திரு மார்பா
விண்ணுலகத்தில் இருக்கும் பெண்ணைத் (தேவயானையை) அணைக்கும் அழகிய மார்பனே, - தேவர் மகுடம் மணக்கும் கழல் வீரா
தேவர்கள் அடிபணிவதால், அவர்களுடைய மகுடங்களின் நறுமணம் வீசும் திருக் கழலை உடைய வீரனே, - காண அருணையில் நிற்கும் கதிர்வேலா
யாவரும் காணும்படி திருவண்ணா மலையில் வீற்றிருக்கும் ஒளி வீசும் வேலனே, - காலன் முதுகை விரிக்கும் பெருமாளே.
யமனுடைய முதுகு விரியும்படி அவனை விரட்டி விலக்கும் பெருமாளே.



