திருப்புகழ் · 430தேதென வாச முற்ற (திருவருணை)

thEdhenavAsamutRa

தானன தான தத்த தானன தான தத்த
தானன தான தத்த ...... தனதான
தேதென வாச முற்ற கீதவி நோத மெச்சு
தேனளி சூழ மொய்த்த ...... மலராலே
சீறும ராவெ யிற்றி லூறிய காளம் விட்ட
சீதநி லாவெ றிக்கு ...... மனலாலே
போதனை நீதி யற்ற வேதனை வாளி தொட்ட
போர்மத ராஜ னுக்கு ...... மழியாதே
போகமெ லாநி றைத்து மோகவி டாய்மி குத்த
பூவையை நீய ணைக்க ...... வரவேணும்
மாதினை வேணி வைத்த நாதனு மோது பச்சை
மாயனு மாத ரிக்கு ...... மயில்வீரா
வானவர் சேனை முற்றும் வாழம ராப திக்குள்
வாரண மான தத்தை ...... மணவாளா
மேதினி யோர்த ழைக்க வேயரு ணாச லத்து
வீதியின் மேவி நிற்கு ...... முருகோனே
மேருவை நீறெ ழுப்பி நான்முக னார்ப தத்தில்
வேலடை யாள மிட்ட ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • தேது என வாசம் உற்ற கீத விநோத(ம்) மெச்சு தேன் அளி சூழ மொய்த்த மலராலே
    ஒளி உடையதாய், நறுமணம் கொண்டதாய், விநோதமான இசையை விரும்பும் தேனீக்கள் சூழ்ந்து மொய்ப்பதான பூக்களாலும்,
  • சீறும் அரா எயிற்றில் ஊறிய காளம் விட்ட சீத நிலா எறிக்கும் அனலாலே
    கோபித்து எழும் பாம்பின் பற்களில் ஊறிய விஷத்தைக் கக்குகின்ற குளிர்ந்த நிலா வீசும் கதிர்களின் நெருப்பாலும்,
  • போதனை நீதி அற்ற வேதனை வாளி தொட்ட போர் மத ராஜனுக்கும் அழியாதே
    தாமரைப்பூவில் வீற்றிருக்கும் நீதி* இல்லாத வேத நாயகனான பிரமனின் மீது தனது மலர் அம்புகளை ஏவிய, போரில் வல்ல மன்மத ராஜனாலும் அழிவுறாமல்,
  • போகம் எ(ல்)லா நிறைத்து மோக விடாய் மிகுத்த பூவையை நீ அணைக்க வர வேணும்
    பலவித இன்பங்களையும் நிறையத் தந்து, (உன் மீது) காதல் ஆசை மிக்குள்ள இந்தப் பெண்ணை நீ அணைக்க வர வேண்டும்.
  • மாதினை வேணி வைத்த நாதனும் ஓது பச்சை மாயனும் ஆதரிக்கும் அயில் வீரா
    கங்காதேவியை சடையில் தரித்த தலைவனான சிவபெருமானும், போற்றப்படுகின்ற மரகதப் பச்சை நிறம் கொண்ட திருமாலும் விரும்புகின்ற வேலாயுத வீரனே,
  • வானவர் சேனை முற்றும் வாழ் அமராபதிக்குள் வாரணமான தத்தை மணவாளா
    தேவர்களுடைய சேனை எல்லாம் சூழ்கின்ற இந்திரனுடைய தலைநகர் அமராவதியில் (ஐராவதம் என்னும்) யானையால் வளர்க்கப்பட்ட கிளி போன்ற தேவயானைக்கு கணவனே,
  • மேதினியோர் தழைக்கவே அருணாசலத்து வீதியின் மேவி நிற்கு(ம்) முருகோனே
    உலகத்தில் உள்ளவர்கள் செழிப்புற வாழ திருவண்ணாமலையின் தெருக்களில் விரும்பி வீற்றிருக்கும் முருகனே,
  • மேருவை நீறு எழுப்பி நான் முகனார் பதத்தில் வேல் அடையாளம் இட்ட பெருமாளே.
    மேரு மலையை பொடியாக்கி, பிரமனுடைய காலில் வேல் கொண்டு விலங்கிட்ட பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits