திருப்புகழ் · 418கோடு ஆன மடவார்கள் (திருவருணை)

kOduAnamadavArgaL

தானான தனதான ...... தனதான
கோடான மடவார்கள் ...... முலைமீதே
கூர்வேலை யிணையான ...... விழியூடே
ஊடாடி யவரோடு ...... முழலாதே
ஊராகத் திகழ்பாத ...... மருள்வாயே
நீடாழி சுழல்தேசம் ...... வலமாக
நீடோடி மயில்மீது ...... வருவோனே
சூடான தொருசோதி ...... மலைமேவு
சோணாடு புகழ்தேவர் ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • கோடு ஆன மடவார்கள் முலை மீதே
    விலைமாதர்களின் மலை போன்ற மார்பகங்களிலும்,
  • கூர் வேலை இணையான விழி ஊடே
    கூரிய வேலுக்குச் சமமான கண்களிலும்,
  • ஊடாடி அவரோடும் உழலாதே ஊராகத் திகழ் பாதம் அருள்வாயே
    ஈடுபட்டுப் பழகினவனாக அவர்களுடன் திரியாமலே, (எனக்குச் சொந்த) ஊர் போல் இருப்பிடமாக விளங்கும் உன் திருவடியைத் தந்து அருள் புரிவாயாக.
  • நீடு ஆழி சுழல் தேசம் வலமாக நீடு ஓடி மயில் மீது வருவோனே
    விரிந்த கடல் சூழ்ந்த உலகை வலமாக முழுதும் ஓடி, மயிலின் மேல் பறந்து வந்தவனே,
  • சூடானது ஒரு சோதி மலை மேவு சோணாடு புகழ் தேவர் பெருமாளே.
    நெருப்பான ஒரு ஜோதி மலையில், திருவண்ணாமலையில், வீற்றிருக்கும், சோழ நாட்டார் புகழும், தேவர்களின் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits