தானதன தானதத்த தானதன தானதத்த
தானதன தானதத்த ...... தனதான
கேதகைய பூமுடித்த மாதர்தம யாலிலுற்று
கேவலம தானஅற்ப ...... நினைவாலே
கேள்வியதி லாதிருக்கு மூழ்வினையி னால்மிகுத்த
கேடுறுக வேநினைக்கும் ...... வினையாலே
வேதனையி லேமிகுத்த பாதகனு மாயவத்தில்
மேதினியெ லாமுழற்று ...... மடியேனை
வீடுதவி யாளவெற்றி வேல்கரம தேயெடுத்து
வீறுமயில் மீதிலுற்று ...... வருவாயே
நீதிநெறி யேயழித்த தாருகனை வேரறுத்து
நீடுபுகழ் தேவரிற்கள் ...... குடியேற
நீடருளி னால்விடுத்த பாலகும ராசெழித்த
நீலநிற மால்தனக்கு ...... மருகோனே
சோதியன லாவுதித்த சோணகிரி மாமலைக்குள்
சோபைவட கோபுரத்தி ...... லுறைவோனே
சோனைமழை போலெதிர்த்த தானவர்கள் மாளவெற்றி
தோளின்மிசை வாளெடுத்த ...... பெருமாளே.
- கேதகைய பூ முடித்த மாதர் தம் மய(யா)லில் உற்று
தாழம்பூவை அணிந்துள்ள பொது மகளிர்களுடைய மோகத்தில் ஈடுபட்டு, - கேவலம் அதான அற்ப நினைவாலே கேள்வி அது
இலாதிருக்கு(ம்) ஊழ் வினையினால்
தாழ்மையான அற்ப நினைவுகளாலும், ஆராய்ச்சிக்கு இடம் தராது இருக்கும் ஊழ் வினையாலும், - மிகுத்த கேடு உறுகவே நினைக்கும் வினையாலே
மிக்க அழிவு வருதற்கே நினைக்கின்ற செயல்களாலும், - வேதனையிலே மிகுத்த பாதகனுமாய் அவத்தில் மேதினி
எ(ல்)லாம் உழற்றும் அடியேனை
வேதனையில் பட்டு, மிக்க பாதகத்துக்கு இடம் தருபவனாக, வீணாக உலக முழுமையும் அலைச்சல் உற்றுத் திரியும் அடியேனுக்கு - வீடு உதவி ஆள வெற்றி வேல் கரம் அதே எடுத்து வீறு மயில்
மீதில் உற்று வருவாயே
வீட்டின்பத்தைக் கொடுத்து உதவி, என்னை ஆட்கொள்ளும் பொருட்டு வெற்றி வேலைத் திருக் கரத்தே எடுத்து, விளங்குகின்ற மயிலின் மீது ஏறி வருவாயாக. - நீதி நெறியே அழித்த தாருகனை வேர் அறுத்து
நீதி நெறிகளை அழித்த தாரகாசுரனை வேரோடே அறுத்து, - நீடு புகழ் தேவர் இல்கள் குடி ஏற
பெரும் புகழைக் கொண்ட தேவர்கள் தத்தம் வீடுகளில் குடிபுக, - நீடு அருளினால் விடுத்த பால குமரா
பெருங் கருணையால் உதவிய இளங் குமரனே, - செழித்த நீல நிற மால் தனக்கு மருகோனே
செழிப்புள்ள நீல நிறம் உள்ள திருமாலுக்கு மருகனே, - சோதி அனலா(ய்) உதித்த சோணகிரி மா மலைக்குள்
சோபை வட கோபுரத்தில் உறைவோனே
ஜோதி நெருப்பாகத் தோன்றிய அருணாசலம் என்னும் சிறந்த மலைக்குள் அழகான வடக்குக் கோபுரத்தில் வீற்றிருப்பவனே, - சோனை மழை போல் எதிர்த்த தானவர்கள் மாள வெற்றி
தோளின் மிசை வாள் எடுத்த பெருமாளே.
விடாது பெய்யும் பெரு மழையைப் போல எதிர்த்து வந்த அசுரர்கள் இறந்து போகும்படி, வெற்றி பொருந்திய தோளின் மீது வாளாயுதத்தை எடுத்த பெருமாளே.



