திருப்புகழ் 414 கீத விநோத மெச்சு (திருவருணை)

தான தனான தத்த ...... தனதான
தான தனான தத்த ...... தனதான
கீத  விநோத  மெச்சு  ......  குரலாலே 
கீறு  மையார்  முடித்த  ......  குழலாலே 
நீதி  யிலாத  ழித்து  ......  முழலாதே 
நீமயி  லேறி  யுற்று  ......  வரவேணும் 
சூதமர்  சூர  ருட்க  ......  பொருசூரா 
சோண  கிரீயி  லுற்ற  ......  குமரேசா 
ஆதியர்  காதொ  ருச்சொ  ......  லருள்வோனே 
ஆனை  முகார்க  னிட்ட  ......  பெருமாளே. 
  • கீத விநோத மெச்சு குரலாலே
    (மாதரின்) ராக ஜாலங்கள் காட்டக்கூடிய மெச்சத்தக்க குரலின் இனிமையிலும்,
  • கீறு மையார் முடித்த குழலாலே
    வகிடு எடுத்த, கரிய நிறமுள்ள, வாரி முடிக்கப்பட்ட கூந்தலினாலும்,
  • நீதி யிலாதழித்தும் உழலாதே
    மயங்கி நீதியற்ற அக்ரமங்களைச் செய்து நான் திரியாதிருக்க,
  • நீமயி லேறி யுற்று வரவேணும்
    நீ மயில் மீது ஏறி மனது வைத்து வரவேண்டுகிறேன்.
  • சூதமர் சூரர் உட்க பொருசூரா
    சூதான எண்ணங்கள் நிறைந்த சூரர்கள் பயப்படும்படி போர் செய்த சூரனே,
  • சோண கிரீயி லுற்ற குமரேசா
    (சோணகிரி) திருவண்ணாமலையில் வாழும் குமரேசனே,
  • ஆதியர்காது ஒருச்சொல் அருள்வோனே
    ஆதிதேவர் சிவனது காதில் ஒப்பற்ற பிரணவச்சொல்லை ஓதியவனே,
  • ஆனைமுகார் கனிட்ட பெருமாளே.
    யானைமுகக் கணபதிக்கு கனிஷ்ட (தம்பியான) பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com