திருப்புகழ் · 413காரும் மருவும் (திருவருணை)

kArummaruvum

தானதன தந்ததன தானதன தந்ததன
தானதன தந்ததன ...... தந்த தனதான
காருமரு வும்பெருகு சோலைமரு வுங்கொடிய
காகளம டங்கவுமு ...... ழங்கு மதனாலே
காலடர வம்பமளி மேலடர வந்துபொரு
காமன்விடு விஞ்சுகணை ...... அஞ்சு மலராலே
ஊருமுல கும்பழைய பேருகம்வி ளைந்ததென
ஓரிரவு வந்தெனது ...... சிந்தை யழியாதே
ஊடியிரு கொங்கைமிசை கூடிவரி வண்டினமு
லாவியக டம்பமலர் ...... தந்த ருளுவாயே
ஆருமர வும்பிறையு நீருமணி யுஞ்சடைய
ராதிபர வும்படிநி ...... னைந்த குருநாதா
ஆறுமுக முங்குரவு மேறுமயி லுங்குறவி
யாளுமுர முந்திருவும் ...... அன்பு முடையோனே
மேருமலை யும்பெரிய சூருமலை யுங்கரிய
வேலையலை யும்பகையும் ...... அஞ்ச விடும்வேலா
மேதினியி றைஞ்சுமரு ணாபுரிவி ளங்குதிரு
வீதியிலெ ழுந்தருளி ...... நின்ற பெருமாளே.

பத உரை · word meanings

  • காரும் மருவும் பெருகு சோலை மருவும் கொடிய காகளம் அடங்கவும் முழங்கும் அதனாலே
    மேகமும், மருக்கொழுந்தின் வாசனையும் பெருகி எழும் சோலையில் உள்ள பொல்லாத குயிலாகிய எக்காளம் இடைவிடாமல் ஒலிக்கின்ற அந்தக் காரணத்தாலும்,
  • கால் அடர வம்பு அமளி மேல் அடர
    தென்றல் காற்று நெருங்கி வாசனை ஏற்றியுள்ள படுக்கையின் மேல் வேகமாக வீசுவதாலும்,
  • வந்து பொரு காமன் விடு விஞ்சு கணை அஞ்சு மலராலே
    போருக்கு எழுந்த மன்மதன் செலுத்துவதால் மேலே படுகின்ற பாணங்களாகிய ஐந்து மலர்களாலும்,
  • ஊரும் உலகும் பழைய பேர் உகம் விளைந்தது என
    ஊராரும் உலகத்தாரும் பழைய பெரிய யுகாந்த பிரளய காலம் வந்தது போல் (எனனைப் பற்றிய வசை) ஆரவாரம் செய்வதாலும்,
  • ஓர் இரவு வந்து எனது சிந்தை அழியாதே ஊடி இரு கொங்கை மிசை கூடி
    (நீ என் மீது மனம் இரங்கி) ஓர் இராப் பொழுதேனும் வந்து என் மனம் நைந்து அழியாதபடி, மாறி மாறிப் பிணங்கியும் எனது மார்பகங்களின் மீது கூடி இணங்கியும்,
  • வரி வண்டு இனம் உலாவிய கடம்ப மலர் தந்து அருளுவாயே
    இசைப் பாட்டுகளைப் பாடும் வண்டின் கூட்டங்கள் உலவுகின்ற கடப்ப மலர் மாலையைத் தந்து அருள்வாயாக.
  • ஆரும் அரவும் பிறையும் நீரும் அணியும் சடையர்
    ஆத்தி மலரையும், பாம்பையும், பிறைச் சந்திரனையும், கங்கையையும் அணிந்துள்ள சடையராகிய
  • ஆதி பரவும்படி நினைந்த குரு நாதா
    ஆதி மூர்த்தியான சிவ பெருமான் தியானித்த குருநாதனே,
  • ஆறு முகமும் குரவும் ஏறு மயிலும் குறவி ஆளும் உரமும் திருவும் அன்பும் உடையோனே
    ஆறு முகங்களும், குராமலரும், வாகனமாகிய மயிலும், குறத்தியாகிய வள்ளி அணைந்து ஆட்சி கொள்ளும் மார்பும், (ஞானச்) செல்வமும், அன்பும் உடையவனே,
  • மேரு மலையும் பெரிய சூரும் மலையும் கரிய வேலை அலையும் பகையும் அஞ்ச விடும் வேலா
    மேரு மலையும், பெரிய சூரனும், கிரெளஞ்ச மலையும், கரிய அலை கடலும், பகைவர்களும் பயப்படும்படி செலுத்திய வேலாயுதனே,
  • மேதினி இறைஞ்சும் அருணாபுரி விளங்கும் திரு வீதியில் எழுந்தருளி நின்ற பெருமாளே.
    உலகம் வணங்கும் திருவண்ணாமலையில் திகழ்கின்ற திரு வீதியில் எழுந்தருளியுள்ள பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits