திருப்புகழ் 378 பரியகைப் பாசம் (திருவருணை)

தனதனத் தானனத் தனதனத் தானனத்
தனதனத் தானனத் ...... தனதான
பரியகைப்  பாசம்விட்  டெறியுமக்  காலனுட் 
பயனுயிர்ப்  போயகப்  ......  படமோகப் 
படியிலுற்  றாரெனப்  பலர்கள்பற்  றாவடற் 
படரெரிக்  கூடுவிட்  ......  டலைநீரிற் 
பிரியுமிப்  பாதகப்  பிறவியுற்  றேமிகப் 
பிணிகளுக்  கேயிளைத்  ......  துழல்நாயேன் 
பிழைபொறுத்  தாயெனப்  பழுதறுத்  தாளெனப் 
பிரியமுற்  றோதிடப்  ......  பெறுவேனோ 
கரியமெய்க்  கோலமுற்  றரியினற்  றாமரைக் 
கமைவபற்  றாசையக்  ......  கழலோர்முன் 
கலைவகுத்  தோதிவெற்  பதுதொளைத்  தோனியற் 
கடவுள்செச்  சேவல்கைக்  ......  கொடியோனென் 
றரியநற்  பாடலைத்  தெரியுமுற்  றோற்கிளைக் 
கருணையிற்  கோபுரத்  ......  துறைவோனே 
அடவியிற்  றோகைபொற்  றடமுலைக்  காசையுற் 
றயருமச்  சேவகப்  ......  பெருமாளே. 
  • பரியகைப் பாசம்விட்டெறியுமக் காலனுள்
    பருத்ததான கைக்கயிறாகிய பாசக்கயிறை விட்டு வீசும் அந்த யமனிடத்தே
  • பயனுயிர்ப் போய் அகப்பட மோக
    இந்தப் பயனுள்ள உயிர் போய் அகப்பட்டுக் கொள்ள ஆசை வைத்து,
  • படியில் உற்றாரெனப் பலர்கள்பற்றா
    பூமியில் சுற்றத்தார் எனப்படும் பலரும் என் உடலைப் பற்றிக் கொண்டு
  • அடற்படர் எரிக் கூடுவிட்டு
    பலமாகப் படர்ந்து எரியும் நெருப்பில் இந்த உடலைக் கிடத்திவிட்டு,
  • அலைநீரிற் பிரியும் இப் பாதகப் பிறவியுற்றே
    தாங்கள் அலை வீசும் நீரில் குளித்துவிட்டுப் பிரிந்து போகும், பாவத்துக்கு இடம் தருகின்ற இந்தப் பிறவியை அடைந்தே,
  • மிகப் பிணிகளுக்கே யிளைத்து உழல்நாயேன்
    மிகுந்த நோய்களால் இளைத்துத் திரிகின்ற நாயினும் கீழான எனது
  • பிழைபொறுத் தாயெனப் பழுதறுத்து ஆளென
    குற்றங்களைப் பொறுத்தவனே என்றும், என் பிழைகளைக் களைந்து ஆண்டருள்வாய் என்றும்,
  • பிரியமுற்று ஓதிடப் பெறுவேனோ
    அன்பு கொண்டு நான் உன்னை ஓதிப் புகழும் பாக்கியத்தைப் பெறுவேனோ?
  • கரியமெய்க் கோலமுற்ற அரியின்
    கரிய உடலின் நிறம் கொண்ட திருமாலின்
  • நற்றாமரைக்கு அமைவ பற்றாசை அக் கழலோர்முன்
    நல்ல தாமரையை ஒத்த கண்ணையே மலராகக் கொள்வதற்கு* ஆசை கொண்ட அந்தத் திருவடியை உடையவராம் சிவபிரானின் முன்பு
  • கலைவகுத்து ஓதி
    கலைகளின் சாரமாம் பிரணவப் பொருளை எடுத்து உபதேசித்தவன்,
  • வெற் பதுதொளைத்தோன்
    கிரெளஞ்ச மலையைத் தொளை செய்தவன்,
  • இயற் கடவுள்செச் சேவல்கைக் கொடியோனென்று
    தகுதி வாய்ந்த கடவுள், சிவந்த சேவற் கொடியைக் கையிலே கொண்டவன் என்றெல்லாம்
  • அரியநற் பாடலைத் தெரியும் உற்றோற்கிளைக்கு
    அருமையான நல்ல பாடல்களைத் தெரிந்து கூறும் அடியார்களின் கூட்டத்துக்காக
  • அருணையிற் கோபுரத்து உறைவோனே
    திருவண்ணாமலையில் கோபுரத்தில் வீற்றிருப்பவனே,
  • அடவியிற் றோகைபொற் றடமுலைக்கு ஆசையுற்று
    காட்டில் வசித்த மயில் போன்ற வள்ளியின் பெரு மார்பைத் தழுவ ஆசை கொண்டு,
  • அயரும் அச் சேவகப் பெருமாளே.
    தளர்ச்சி அடைந்த அந்தப் பராக்ரமப் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com