திருப்புகழ் · 36ஏவினை நேர்விழி (திருச்செந்தூர்)

தானன தானன தானன தானன
தானன தானன ...... தனதானா

Thiruppugazh Anbargal

ஏவினை நேர்விழி மாதரை மேவிய
ஏதனை மூடனை ...... நெறிபேணா
ஈனனை வீணனை ஏடெழு தாமுழு
ஏழையை மோழையை ...... அகலாநீள்
மாவினை மூடிய நோய்பிணி யாளனை
வாய்மையி லாதனை ...... யிகழாதே
மாமணி நூபுர சீதள தாள்தனி
வாழ்வுற ஈவது ...... மொருநாளே
நாவலர் பாடிய நூலிசை யால்வரு
நாரத னார்புகல் ...... குறமாதை
நாடியெ கானிடை கூடிய சேவக
நாயக மாமயி ...... லுடையோனே
தேவிம நோமணி ஆயிப ராபரை
தேன்மொழி யாள்தரு ...... சிறியோனே
சேணுயர் சோலையி னீழலி லேதிகழ்
சீரலை வாய்வரு ...... பெருமாளே.

பத உரை

  • ஏவினை நேர்விழி
    அம்பினை நிகர்க்கும் கண்களை உடைய
  • மாதரை மேவிய ஏதனை
    மாதர்களை விரும்பும் கேடுகெட்டவனை,
  • மூடனை நெறி பேணா ஈனனை வீணனை
    மூடனை, ஒழுக்கம் இல்லாத இழிந்தோனை, கயவனை,
  • ஏடெழு தாமுழு ஏழையை
    படிப்பே இல்லாத முழு ஏழையை,
  • மோழையை
    மடையனை,
  • அகலா நீள் மாவினை மூடிய
    என்னைவிட்டு நீங்கா தீவினை மூடியுள்ள
  • நோய்பிணி யாளனை
    நோயும் பிணியும் கொண்டவனை,
  • வாய்மை யிலாதனை
    உண்மை இல்லாதவானை,
  • இகழாதே
    இகழ்ந்து ஒதுக்காமல்
  • மாமணி நூபுர சீதள தாள்
    சிறந்த மணிகளாலான சிலம்புள்ள உன் பாதங்களை,
  • தனி வாழ்வுற
    ஒப்பற்ற வாழ்வை (முக்தியை) யான் பெற
  • ஈவதும் ஒருநாளே
    தந்துதவும் ஒரு நாளும் எனக்கு உண்டோ?
  • நாவலர் பாடிய நூலிசையால் வரு நாரதனார்
    புலவர்கள் பாடிய நூல்களில் புகழப்பட்ட நாரத மாமுனிவர்
  • புகல் குற மாதை
    முன்பு வருணித்த குறப்பெண் வள்ளியை
  • நாடியெ கானிடை கூடிய சேவக
    விரும்பிச் சென்று காட்டிலே கூடிய வீரனே
  • நாயக மாமயில் உடையோனே
    தலைவனே சிறந்த மயில் வாகனனே
  • தேவி மநோமணி ஆயிப ராபரை
    தேவி, மனோன்மணி, அன்னை, பராபரை,
  • தேன்மொழி யாள்தரு சிறியோனே
    தேன் மொழியாள் உமையின் சிறுமகனே
  • சேணுயர் சோலையின்
    விண்வரை உயர்ந்த சோலைகளின்
  • நீழலி லேதிகழ்
    நிழலினிலே வளங்கும்
  • சீரலை வாய் வரு பெருமாளே.
    திருச்செந்தூரில் அமர்ந்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout