திருப்புகழ் · 334தத்தித் தத்தி (காஞ்சீபுரம்)

thaththiththaththi

தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
தத்தத் தத்தத் ...... தனதான
தத்தித் தத்திச் சட்டப் பட்டுச்
சத்தப் படுமைக் ...... கடலாலே
சர்ப்பத் தத்திற் பட்டுக் கெட்டுத்
தட்டுப் படுமப் ...... பிறையாலே
சித்தத் துக்குப் பித்துற் றுச்சச்
சித்ரக் கொடியுற் ...... றழியாதே
செப்பக் கொற்றச் சிற்பப் பத்திச்
செச்சைத் தொடையைத் ...... தரவேணும்
கொத்துத் திக்குப் பத்துட் புக்குக்
குத்திக் கிரியைப் ...... பொரும்வேலா
கொச்சைப் பொச்சைப் பொற்பிற் பச்சைக்
கொச்சைக் குறவிக் ...... கினியோனே
சுத்தப் பத்தத் தர்க்குச் சித்தத்
துக்கத் தையொழித் ...... திடும்வீரா
சொர்க்கத் துக்கொப் புற்றக் கச்சிச்
சொக்கப் பதியிற் ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • தத்தித் தத்திச் சட்டப்பட்டுச் சத்தப்படு மைக் கடலாலே
    அலைகள் தாவித் தாவிச் சென்று ஓர் ஒழுங்கு முறையில் ஒலி செய்கின்ற கரிய நிறக் கடலாலும்,
  • சர்ப்பத் தத்தில் பட்டுக் கெட்டுத் தட்டுப்படும் அப் பிறையாலே
    (கிரகணத்தின் போது ராகு கேது எனப்படும்) பாம்பால் பிடி படுதல் என்னும் ஆபத்தில் அகப்பட்டு, கெடுதல் உற்று தடை படுகின்ற அந்தச் சந்திரனாலும்,
  • சித்தத்துக்குப் பித்து உற்று உச்சச் சித்ரக் கொடி உற்று அழியாதே
    மனதில் மோக வெறி கொண்டு, அதன் அதிகமான நிலையை இந்த அழகிய கொடி போன்ற பெண் அடைந்து அழிந்து போகாமல்,
  • செப்பக் கொற்ற(ம்) சிற்ப(ம்) பத்திச் செச்சைத் தொடையைத் தர வேணும்
    (உனது) செவ்வையானதும், வீரத்துக்கு அறிகுறியானதும், தொழில் திறம் காட்டுவதும், வரிசையாக அமைந்துள்ளதுமான வெட்சி மாலையைத் தந்தருள வேண்டும்.
  • கொத்துத் திக்குப் பத்துள் புக்கு குத்திக் கிரியைப் பொரும் வேலா
    நிறைந்துள்ள பத்துத் திக்குகளிலும் புகுந்து, வேலால் குத்தி, கிரெளஞ்ச மலையைப் போரில் வென்ற வேலனே,
  • கொச்சைப் பொச்சைப் பொற்பில் பச்சைக் கொச்சைக் குறவிக்கு இனியோனே
    மிழற்றும் பேச்சைப் பேசுபவளும், காடு மலைகளில் இருப்பவளும், அழகிய பச்சை நிறம் கொண்டவளும் ஆகிய குறப் பெண் வள்ளிக்கு இனியவனே,
  • சுத்தப் பத்த அத்தர்க்குச் சித்த துக்கத்தை ஒழித்திடும் வீரா
    பரிசுத்தமான, பக்தியில் உயர்ந்த அன்பர்களுக்கு மனதில் உள்ள துயரங்களை ஒழிக்கும் வீரனே,
  • சொர்க்கத்துக்கு ஒப்பு உற்றக் கச்சிச் சொக்கப் பதியில் பெருமாளே.
    தேவ உலகுக்கு ஒப்பான கச்சி எனப்படும் அழகிய நகரில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits