திருப்புகழ் 331 அற்றைக் கற்றை (காஞ்சீபுரம்)

தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
தத்தத் தத்தத் ...... தனதான
அற்றைக்  கற்றைக்  கொப்பித்  தொப்பித் 
தத்தத்  தத்தத்  ......  தருவோர்தாள் 
அர்ச்சித்  திச்சித்  தக்கத்  தக்கத் 
தொக்குத்  திக்குக்  ......  குடில்பேணிச் 
செற்றைப்  புற்சொற்  கற்றுக்  கற்றுச் 
செத்துச்  செத்துப்  ......  பிறவாதே 
செப்பச்  செப்பப்  பச்சைப்  பச்சைச் 
செச்சைச்  செச்சைக்  ......  கழல்தாராய் 
துற்றுப்  பிற்புக்  குற்றக்  கொக்கைத் 
துட்கத்  திட்கப்  ......  பொரும்வேலா 
சுத்தப்  பத்திச்  சித்ரச்  சொர்க்கச் 
சொர்க்கத்  தத்தைக்  ......  கினியோனே 
கற்றைப்  பொற்றைப்  பற்றக்  குத்திக் 
கத்தக்  கத்தக்  ......  களைவோனே 
கற்புச்  சத்திப்  பொற்புச்  சத்திக் 
கச்சிச்  சொக்கப்  ......  பெருமாளே. 
  • அற்றைக்கு அற்றைக்கு ஒப்பித்து ஒப்பித்து
    அன்றைக்கு அன்றைக்கு (நாள் தோறும்) அலங்கரித்து, அலங்கரித்து,
  • அத்தத்து அத்தம் தருவோர் தாள் அர்ச்சித்து இச்சித்து
    தாம் பெற்ற பொருளுக்குத் தக்க மறு உதவியைக் கொடுப்பவர்களாகிய விலை மகளிர்களுடைய பாதங்களைப் போற்றியும், விரும்பியும்,
  • அக்கத்து அக்கம் திக்குத் தொக்குக் குடில் பேணி
    கண்ணுக்குக் கண்ணாய் பாதுகாத்தும், இந்த உலகின் திக்குகள் தோறும் சென்று கூடி, என் உடலைப் போற்றி வளர்த்து,
  • செற்றைப் புன் சொல் கற்றுக் கற்று
    நிரம்ப இழிவான சொற்களை மேலும் மேலும் கற்று,
  • செத்துச் செத்துப் பிறவாதே
    இறந்துபட்டு இறந்துபட்டுப் பல பிறவிகளை அடையா வண்ணம்
  • செப்பச் செப்ப பச்சைப் பச்சை
    மேலும் மேலும் சொல்லித் துதிக்க, உனது மிகக் குளிர்ச்சி பொருந்திய
  • செச்சைச் செச்சைக் கழல் தாராய்
    சிவந்த வெட்சி மலரணிந்த திருவடியைத் தந்து அருளுக.
  • துற்றுப் பின் புக்கு உற்றக் கொக்கை
    நெருங்கிப் பின் தொடர்ந்து, கடலில் இருந்த மாமரமாகிய சூரனை
  • துட்கத் திட்கப் பொரும் வேலா
    பயப்பட்டு திடுக்கிடும்படி சண்டை செய்த வேலனே,
  • சுத்தப் பத்திச் சித்ரச் சொர்க்க
    பரிசுத்தமான, பேரன்புடைய, அழகிய மார்பினை உடைய
  • சொர்க்கத் தத்தைக்கு இனியோனே
    விண்ணுலகக் கிளியான தேவயானைக்கு இனிமையானவனே,
  • கற்றைப் பொற்றைப் பற்றக் குத்தி
    திரண்ட மலையாகிய கிரெளஞ்சத்தை தாக்கிக் குத்தி,
  • கத்தக் கத்த களைவோனே
    (அம் மலை அரக்கன்) கூச்சலிட்டு அழ அழித்துத் தொலைத்தவனே,
  • கற்புச் சத்தி பொற்புச் சத்தி
    கற்புக்கு அணிகலமாம் தேவி பார்வதி அளித்த அழகிய சக்திவேலை ஏந்தும் பெருமாளே,
  • கச்சிச் சொக்கப் பெருமாளே.
    காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் அழகிய பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com