திருப்புகழ் 328 கறுக்கப் பற்று (காஞ்சீபுரம்)

தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத்
தனத்தத்தத் தனத்தத்தத் ...... தனதான
கறுக்கப்பற்  றுவர்ப்பிட்டுச்  சிரித்துச்சற்  றுறுக்கிக்கட் 
பிறக்கிட்டுப்  படக்கற்பித்  ......  திளைஞோர்தங் 
கழுத்தைச்சிக்  கெனக்கட்டித்  தனச்செப்புப்  படக்குத்திட் 
டுருக்கிக்கற்  பழிக்கப்பொற்  ......  பெழுகாதல் 
புறப்பட்டுக்  களிக்கக்கற்  புரத்தைப்பிட்  டரக்கிப்பொற் 
பணிக்கட்டிற்  புறத்துற்றுப்  ......  புணர்மாதர் 
பொருத்தத்தைத்  தவிர்த்துச்சற்  றிரக்ஷித்துப்  புரப்பப்பொற் 
பதத்தைப்பெற்  றிருக்கைக்குப்  ......  பெருவேனோ 
திறற்கொக்கைப்  படக்குத்திச்  செருக்கிக்கொக்  கரித்துச்சக் 
கரிக்குப்புத்  திரற்குற்றுத்  ......  தளைபூணச் 
சினத்துப்பொற்  பொருப்பைப்பொட்  டெழுத்தித்திக்  கரித்துப்புத் 
திரத்தத்திற்  சிரித்துற்றுப்  ......  பலபேய்கள் 
பறிக்கப்பச்  சிறைச்சிக்கட்  கறிக்குப்பைச்  சிரச்சிக்குப் 
பரப்பொய்க்கட்  டறப்புக்குப்  ......  பொருதோனே 
பணிச்செச்சைத்  தொடைச்சித்ரப்  புயத்துக்ரப்  படைச்சத்திப் 
படைக்கச்சிப்  பதிச்சொக்கப்  ......  பெருமாளே. 
  • கறுக்கப் பல் துவர்ப்பு இட்டுச் சிரித்துச் சற்று உறுக்கிக் கண் பிறக்கிட்டுப்படக் கண் பித்தி
    பற்கள் கறை ஏறும்படி (பாக்கு வெற்றிலையின்) சிவப்பு நிறம் ஏறச் செய்தும், சிறிது நகைத்தும், கொஞ்சம் அதட்டியும், கண்களைப் பின் சுழல்வது போலச் செய்து முறைத்து விழித்தும்,
  • இளைஞோர் தம் கழுத்தைச் சிக்கெனக் கட்டித் தனச்செப்புப் படக் குத்திட்டு
    இளைஞர்களுடைய கழுத்தை அழுந்தக் கட்டிக் கொண்டு, சிமிழை ஒத்த மார்பகங்கள் படும்படி இறுக அணைத்து,
  • உருக்கிக் கற்பு அழிக்கப் பொற்பு எழு காதல் புறப்பட்டுக் களிக்க
    (அதனால்) மனதை உருக்கி, கற்பு மனநிலை அழிபட, மிகுதியாக எழுகின்ற காம ஆசை தோன்றி இன்பத்தைத் தர,
  • கற்புரத்தைப் பிட்டு அரக்கிப் பொன் பணிக் கட்டில் புறத்து உற்றுப் புணர் மாதர் பொருத்தத்தைத் தவிர்த்து
    கற்பூரத்தைப் பொடி செய்து தேய்த்து அழகாக அலங்கரிக்கப்பட்ட கட்டிலின் மேல் சேர்ந்து கூடுகின்ற விலைமாதர்களின் இணக்கத்தை நீக்கி,
  • சற்று ரக்ஷித்துப் புரப்பப் பொன் பதத்தைப் பெற்று இருக்கைக்குப் பெறுவேனோ
    சிறிதேனும் (அடியேனைக்) காப்பாற்ற, உனது அழகிய திருவடியை அடையக்கூடிய பாக்கியத்தைப் பெறுவேனோ?
  • திறல் கொக்கைப் படக் குத்திச் செருக்கிக் கொக்கரித்துச் சக்கரிக்குப் புத்திரற்கு உற்றுத் தளை பூண சினத்து
    வலிமை வாய்ந்த மாமரமாகி நின்ற சூரனை அழிக்கும்படி குத்தியும், பெருமிதத்துடன் கர்ச்சித்து, சக்கரம் ஏந்திய திருமாலின் மகனாகிய பிரமனுக்குப் பொருந்த விலங்கை மாட்டிக் கோபித்தும்,
  • பொன் பொருப்பைப் பொட்டு எழுத்தித் திக்கரித்து
    பொன் மலையாகிய கிரெளஞ்சத்தை பொடி எழும்படி நொறுக்கியும், அதை நிந்தித்தும்,
  • புத்(து) இரத்தத்தில் சிரித்து உற்றுப் பல பேய்கள் பச்(சை) இறைச்சிக் கண் கறிக் குப்பை பறிக்க
    (போர்க்களத்தில்) புதிய ரத்தத்தில் சிரிப்புடன் அளைந்து பல பேய்கள் பச்சை மாமிசங்களில் கடித்துத் தின்பதற்குரிய குவியல்களைப் பிடுங்க,
  • சிரச் சிக்குப் பரப்பு ஒய்க் கட்டறப் புக்குப் பொருதோனே
    (உண்ணக் கிடைக்குமோ என்றிருந்த பேய்களுக்கு) மிகுந்த பசியும் ஆத்திரமும் வேகத்தில் அடியோடு நீங்க, யுத்த களத்திற்குப் புகுந்து சண்டை செய்தவனே,
  • பணிச் செச்சைத் தொடைச் சித்ரப் புயத்து உக்ரப் படைச் சத்திப் படைக் கச்சிப்பதிச் சொக்கப் பெருமாளே.
    ஆபரணமாக வெட்சி மாலையை அணிந்த அழகிய புயத்தில் உக்ரமான ஆயுதமாகிய சக்தி வேற் படையைத் தாங்கி, காஞ்சீபுரத்தில் வீற்றிருக்கும் அழகிய பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com