தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம்
தனதனந் தத்தத் தத்தன தத்தம் ...... தனதான
அரியயன் புட்பிக் கக்குழு மிக்கொண்
டமரர்வந் திக்கத் தட்டுரு வச்சென்
றவுணரங் கத்தைக் குத்திமு றித்தங் ...... கொருகோடி
அலகைநின் றொத்தித் தித்திய றுத்தும்
பலவியங் கொட்டச் சக்கடி கற்றந்
தரியுடன் பற்றிக் குச்சரி மெச்சும் ...... படிபாடிப்
பரிமுகங் கக்கச் செக்கண்வி ழித்தும்
பவுரிகொண் டெட்டுத் திக்கையு டைத்தும்
படுகளம் புக்குத் தொக்குந டிக்கும் ...... படிமோதிப்
படைபொருஞ் சத்திப் பத்மநி னைத்துஞ்
சரவணன் கச்சிப் பொற்பனெ னப்பின்
பரவியுஞ் சித்தத் துக்குவ ரத்தொண் ...... டடைவேனோ
பெரியதண் செச்சைக் கச்சணி வெற்பும்
சிறியவஞ் சிக்கொத் தெய்த்தநு சுப்பும்
ப்ரிதியொழிந் தொக்கக் கைக்கிளை துத்தங் ...... குரலாதி
பிரிவில்கண் டிக்கப் பட்டவு ருட்டும்
கமுகமுஞ் சிற்பச் சித்ரமு ருக்கும்
பிரதியண் டத்தைப் பெற்றருள் சிற்றுந் ...... தியும்நீலக்
கரியகொண் டற்கொப் பித்தக துப்புந்
திலதமுஞ் செப்பொற் பட்டமு முத்தின்
கனவடங் கட்டப் பட்டக ழுத்துந் ...... திருவான
கருணையுஞ் சுத்தப் பச்சைவ னப்புங்
கருதுமன் பர்க்குச் சித்திய ளிக்குங்
கவுரியம் பைக்குப் புத்ரஎ வர்க்கும் ...... பெருமாளே.
- அரி அயன் புட்பிக்கக் குழுமிக் கொண்டு அமரர் வந்திக்க
திருமாலும் பிரமனும் தங்கள் மலர்வாய் திறந்து தமது குறைகளை எடுத்துக் கூற, ஒன்று சேர்ந்த தேவர்கள் வணங்கி நிற்க, - தட்டு உருவச் சென்று அவுணர் அங்கத்தைக் குத்தி முறித்து
ஊடுருவச் சென்று (உனது வேல்) அசுரர்களுடைய உடல்களைக் குத்தியும், முறித்தும், - அங்கு ஒரு கோடி அலகை நின்று ஒத்தித் தித்தி அறுத்தும்
அப்போது அவ்விடத்தில் ஒரு கோடி பேய்கள் நின்று தாளம் போட்டு (தாம்) தித்தி என்ற தாள ஜதியைக் கூட்டியும், - பல இயம் கொட்டச் சக்கடி கற்று
பல விதமான இசைக் கருவிகளை முழக்கி பரிகாசம் பேசியும், - அந்தரியுடன் பற்றிக் குச்சரி மெச்சும்படி பாடி
துர்க்கையுடன் சேர்ந்து குச்சரி என்னும் ஒரு பண்ணை (குர்ஜரி என்ற ராகத்தை) மெச்சி வியக்கும்படி பாடியும், - பரி முகம் கக்கச் செக்கண் விழித்தும்
வடவா முகாக்கினி போல் தீயை வெளிப்படுத்தி சிவந்த கண்களை விழித்தும், - பவுரி கொண்டு எட்டுத் திக்கை உடைத்தும்
மண்டலமாய் ஆடும் கூத்து வகையை ஆடி எட்டு திசைகளையும் அதிர்ச்சியுறச் செய்தும், - படு களம் புக்குத் தொக்கு நடிக்கும்படி மோதி
போர்க்களத்தில் நுழைந்து ஒன்று சேர்ந்து நடனம் செய்யவும், (அசுரர்களைத்) தாக்கி, - படை பொரும் சத்திப் பத்ம நினைத்தும்
எவ்விதமான படைகளையும் பொருது வெற்றி பெற வல்ல சக்தி வேலை ஏந்தும் தாமரை போன்ற திருக்கரங்களை தியானித்தும், - சரவணன் கச்சி பொற்பன் எனப் பின் பரவியும்
சரவணன் என்றும் காஞ்சி நகரில் வாழும் அழகன் என்றும் பின்பு பலவாறு போற்றியும் - சித்தத்துக்கு வரத் தொண்டு அடைவேனோ
(அத்தகைய பக்தி) என் மனதில் உதிக்கும்படி, தொண்டு செய்யும் பேற்றை நான் அடைவேனோ? - பெரிய தண் செச்சைக் கச்சு அணி வெற்பும்
பெரிய, குளிர்ந்த குங்குமக் குழம்பு கொண்ட கச்சை அணிந்த மலை போன்ற மார்பும், - சிறிய வஞ்சிக் கொத்து எய்த்த நுசுப்பும்
சிறிய வஞ்சிக் கொடி போன்று இளைத்த இடையும், - ப்ரிதி ஒழிந்து ஒக்கக் கைக்கிளை துத்தம் குரல் ஆதி பிரிவில்
கண்டு இக்கப்பட்ட உருட்டும் கமுகமும்
விருப்பம் முழுதும் ஒழிந்து ஓர் இசையில் தான் அதிக விருப்பம் என்று இல்லாமல் எல்லா இசை வகைகளையும், கைக்கிளை, துத்தம்* முதலான இசைப் பிரிவுகளில் பகிர்க்கப்பட்ட, புரளும் குரலிசையும், ஸ்வர பேதமும், - சிற்பச் சித்ரம் உருக்கும் பிரதி அண்டத்தைப் பெற்று அருள்
சிற்று உந்தியும்
சிற்ப நூல்களில் சொல்லப்பட்ட அழகிய உருக்கமான நுண்கலையும், (இந்த ப்ரபஞ்சத்தின்) ஒவ்வொரு அண்டத்தையும் பெற்றருளியதுமான சிறிய வயிறும், - நீலக் கரிய கொண்டற்கு ஒப்பித்த கதுப்பும்
இருண்ட கறுத்த மேகத்துக்கு நிகரான கூந்தலும், - திலகமும் செம் பொன் பட்டமும் முத்தின் கன வடம்
கட்டப்பட்ட கழுத்தும்
நெற்றிப் பொட்டும், செம் பொன் பட்டமும், முத்தின் சிறந்த மாலை கட்டப்பட்ட கழுத்தும், - திருவான கருணையும் சுத்தப் பச்சை வனப்பும்
தெய்வத் தன்மை வாய்ந்த கருணையும், சுத்தமான பச்சை நிற அழகும் உள்ளவளும், - கருதும் அன்பர்க்குச் சித்தி அளிக்கும் கவுரி அம்பைக்கு புத்ர
எவர்க்கும் பெருமாளே.
தியானிக்கும் அடியார்களுக்கு வீடு பேற்றை அளிக்கும் அம்பிகையுமான கெளரி (பார்வதி) தேவிக்கு மகனே, எல்லார்க்கும் பெருமாளே.



