திருப்புகழ் 308 ஈனமிகுத்துள பிறவி (ஆறு திருப்பதி)

தானதனத் தனதனன ...... தனதான
தானதனத் தனதனன ...... தனதான
ஈனமிகுத்  துளபிறவி  ......  யணுகாதே 
யானுமுனக்  கடிமையென  ......  வகையாக 
ஞானஅருட்  டனையருளி  ......  வினைதீர 
நாணமகற்  றியகருணை  ......  புரிவாயே 
தானதவத்  தினின்மிகுதி  ......  பெறுவோனே 
சாரதியுத்  தமிதுணைவ  ......  முருகோனே 
ஆனதிருப்  பதிகமரு  ......  ளிளையோனே 
ஆறுதிருப்  பதியில்வளர்  ......  பெருமாளே. 
  • ஈனமிகுத்துள பிறவி யணுகாதே
    இழிவு மிகுந்துள்ள பிறப்பு மீண்டும் என்னை அணுகாதபடி,
  • யானுமுனக்கு அடிமையென வகையாக
    நானும் உனக்கு அடிமையாகும் பாக்கியத்தைப் பெற
  • ஞானஅருள் தனையருளி
    மெய்ஞ்ஞான அருளைப் புரிந்து,
  • வினைதீர
    அடியேனது வினைகள் அறவே நீங்க,
  • நாணம் அகற்றிய கருணை புரிவாயே
    (வள்ளியிடம் வெட்கத்தை விட்டு வலியச் சென்று ஆட்கொண்டது போல) நாணத்தை நீக்கி நீயே வந்து கருணை புரிவாயாக.
  • தானதவத்தினின்மிகுதி பெறுவோனே
    அடியார்களின் தானத்திலும் தவத்திலும் மேன்மையான பகுதியைப் பெறுபவனே,
  • சாரதியுத்தமி துணைவ முருகோனே
    சரஸ்வதி தேவியாம் உத்தமியின் சகோதரனே*, முருகனே,
  • ஆனதிருப் பதிகம் அருள் இளையோனே
    திருஞானசம்பந்தராக வந்து பல தேவாரத் திருப்பதிகங்களை அருளிச் செய்த இளம்பூரணனே,
  • ஆறுதிருப்பதியில் வளர் பெருமாளே.
    ஆறு படை வீட்டுத்** திருத்தலங்களில் வளர்கின்ற பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com