தனத்தன தானம் தனத்தன தானம்
தனத்தன தானம் ...... தனதான
வினைக்கின மாகுந் தனத்தினர் வேளம்
பினுக்கெதி ராகும் ...... விழிமாதர்
மிகப்பல மானந் தனிற்புகு தாவெஞ்
சமத்திடை போய்வெந் ...... துயர்மூழ்கிக்
கனத்தவி சாரம் பிறப்படி தோயுங்
கருக்குழி தோறுங் ...... கவிழாதே
கலைப்புல வோர்பண் படைத்திட வோதுங்
கழற்புக ழோதுங் ...... கலைதாராய்
புனத்திடை போய்வெஞ் சிலைக்குற வோர்வஞ்
சியைப்புணர் வாகம் ...... புயவேளே
பொருப்பிரு கூறும் படக்கடல் தானும்
பொருக்கெழ வானும் ...... புகைமூளச்
சினத்தொடு சூரன் கனத்திணி மார்பந்
திறக்கம ராடுந் ...... திறல்வேலா
திருப்புக ழோதுங் கருத்தினர் சேருந்
திருத்தணி மேவும் ...... பெருமாளே.
- வினைக்கு இனமாகும் தனத்தினர் வேள் அம்பினுக்கு எதிர்
ஆகும் விழி மாதர்
வினையைப் பெருக்குவதற்குக் காரணமான மார்பினை உடையவர்கள், மன்மதனுடைய அம்புக்கு ஒப்பாகும் கண்களை உடையவர்களாகிய விலைமாதர்கள் (மீது வைத்த ஆசையால்), - மிகப் பல மானம் தனில் புகுதா
மிகப் பலவான அவமானச் செயல்களில் நுழைந்து, - வெம் சமத்திடை போய் வெம் துயர் மூழ்கி
விரும்பிய காமரசப் போர்களிலே ஈடுபட்டு, கொடிய துன்பங்களில் முழுகி அநுபவித்து, - கனத்த விசாரம் பிறப்பு அடி தோயும் கருக் குழி தோறும்
கவிழாதே
தாங்கமுடியாத கவலை அடைந்து, பிறவிக்கு வழி வகுக்கும் கருக்குழிக்குள் மீண்டும் நான் குப்புற விழுந்திடாதபடி, - கலைப் புலவோர் பண் படைத்திட ஓதும் கழல் புகழ் ஓதும்
கலை தாராய்
கலைவல்லமை வாய்ந்த புலவர்கள் இசையுடன் சீராக ஓதுகின்ற உனது திருவடிகளின் புகழை ஓதும்படியான கலை ஞானத்தைத் தந்தருள்க. - புனத்து இடை போய் வெம் சிலை குறவோர் வஞ்சியைப்
புணர் வாகம் புய வேளே
தினைப் புனத்துக்குப் போய், கொடிய வில்லேந்திய குறவர்களின் கொடி போன்ற வள்ளியைச் சேர்ந்த அழகிய புயங்களை உடையவனே, - பொருப்பு இரு கூறும் பட கடல் தானும் பொருக்கு எழ
வானும் புகை மூள
கிரெளஞ்ச மலை இரண்டு கூறாகும்படியும், கடலும் வற்றி போய்க் காய்ந்திடவும், வானமும் புகை மூண்டிடவும், - சினத்தோடு சூரன் கனத்(த) தி(ண்)ணி(ய) மார்பம் திறக்க
அமர் ஆடும் திறல் வேலா
கோபத்துடன், சூரனுடைய கனத்த, திண்ணிய மார்பு பிளவுபடும்படியாகவும் போர் செய்த வீர வேலாயுதனே, - திருப்புகழ் ஓதும் கருத்தினர் சேரும் திருத்தணி மேவும்
பெருமாளே.
திருப்புகழ் ஓதும்* கருத்துள்ள அடியார்கள் கூடுகின்ற திருத்தணிகையில் வீற்றிருக்கும் பெருமாளே.



