திருப்புகழ் · 282புருவ நெறித்து (திருத்தணிகை)

puruvaneRiththu

தனதன தத்தத் தனதன தத்தத்
தனதன தத்தத் ...... தனதான
புருவநெ றித்துக் குறுவெயர் வுற்றுப்
புளகித வட்டத் ...... தனமானார்
பொருவிழி யிற்பட் டவரொடு கட்டிப்
புரளும சட்டுப் ...... புலையேனைக்
கருவிழி யுற்றுக் குருமொழி யற்றுக்
கதிதனை விட்டிட் ...... டிடுதீயக்
கயவனை வெற்றிப் புகழ்திகழ் பத்மக்
கழல்கள்து திக்கக் ...... கருதாதோ
செருவசு ரப்பொய்க் குலமது கெட்டுத்
திரைகட லுட்கப் ...... பொரும்வேலா
தினைவன முற்றுக் குறவர் மடப்பைக்
கொடிதன வெற்பைப் ...... புணர்மார்பா
பெருகிய நித்தச் சிறுபறை கொட்டிப்
பெரிகைமு ழக்கப் ...... புவிமீதே
ப்ரபலமுள் சுத்தத் தணிமலை யுற்றுப்
ப்ரியமிகு சொக்கப் ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • புருவம் நெறித்துக் குறு வெயர்வு உற்றுப் புளகித வட்டத் தன மானார்
    புருவத்தை நெறித்து, சிறு வியர்வை உற்று, புளகிதம் கொண்ட வட்ட வடிவமான மார்பகத்தை உடைய (பொது) மாதர்களின்
  • பொரு விழியில் பட்டவரொடு கட்டிப் புரளும் அசட்டுப் புலையேனை
    பூசலிடும் கண்களில் அகப்பட்டு அவர்களுடன் (படுக்கையில்) கட்டிப் புரளுகின்ற அசடனாகிய இழிந்த எனக்கு,
  • கரு வழி உற்றுக் குரு மொழி அற்றுக் கதி தனை விட்டிட்டிடு தீயக் கயவனை வெற்றிப் புகழ் திகழ் பத்மக் கழல்கள் துதிக்கக் கருதாதோ
    கருவில் விழும் வழியிலே பொருந்தி, குருவின் வார்த்தைகளைக் கைவிட்டு, நற்கதி அடைதலை விட்டு விலகி, கொடிய கீழ் மகனான எனக்கு, (உனது) வெற்றியும், புகழும் விளங்குகின்ற திருவடித் தாமரைகளைத் துதிக்கும் எண்ணம் தோன்றக் கூடாதோ?
  • செரு(ம்) அசுரப் பொய்க் குலம் அது கெட்டுத் திரை கடல் உட்கப் பொரும் வேலா
    போர் செய்யும் அசுரர்களுடய பொய்யான வாழ்க்கைக் குலம் அழியவும், அலை வீசும் கடல் அஞ்சவும் சண்டை செய்த வேலனே,
  • தினை வனம் உற்றுக் குறவர் மடப் பைங்கொடி தன வெற்பைப் புணர் மார்பா
    வள்ளி மலையில் இருந்த தினைப் புனத்துக்குச் சென்று, குறவர் குலத்தில் தோன்றிய பைங்கொடியாகிய வள்ளியின் மார்பாகிய மலையைத் தழுவிய மார்பனே,
  • பெருகிய நித்தச் சிறு பறை கொட்டிப் பெரிகை முழக்கப் புவி மீதே ப்ரபலம் உள் சுத்தத் தணி மலை உற்று ப்ரியம் மிகு சொக்கப் பெருமாளே.
    பெருகி ஒலிக்கின்ற சிறிய பறை நாள் தோறும் கொட்டி முழக்க, பேரிகை முழக்க, பூமியில் புகழ் உடைய, பரிசுத்தமான திருத்தணிகை மலையில் வீற்றிருந்து, (அம்மலையின்) மீது விருப்பம் கொண்டு, அழகு வாய்ந்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits