திருப்புகழ் · 281பழமை செப்பிய (திருத்தணிகை)

pazhamaiseppiya

தனன தத்தன தத்தன தத்தன
தனன தத்தன தத்தன தத்தன
தனன தத்தன தத்தன தத்தன ...... தனதான
பழமை செப்பிய ழைத்தித மித்துடன்
முறைம சக்கிய ணைத்துந கக்குறி
படஅ ழுத்திமு கத்தைமு கத்துற ...... வுறவாடிப்
பதறி யெச்சிலை யிட்டும ருத்திடு
விரவு குத்திர வித்தைவி ளைப்பவர்
பலவி தத்திலு மற்பரெ னச்சொலு ...... மடமாதர்
அழிதொ ழிற்குவி ருப்பொடு நத்திய
அசட னைப்பழி யுற்றஅ வத்தனை
அடைவு கெட்டபு ரட்டனை முட்டனை ...... அடியேனை
அகில சத்தியு மெட்டுறு சித்தியு
மெளிதெ னப்பெரு வெட்டவெ ளிப்படு
மருண பொற்பத முற்றிட வைப்பது ...... மொருநாளே
குழிவி ழிப்பெரு நெட்டல கைத்திரள்
கரண மிட்டுந டித்தமி தப்படு
குலிலி யிட்டக ளத்திலெ திர்த்திடு ...... மொருசூரன்
குருதி கக்கிய திர்த்துவி ழப்பொரு
நிசிச ரப்படை பொட்டெழ விக்ரம
குலிச சத்தியை விட்டருள் கெர்ச்சித ...... மயில்வீரா
தழையு டுத்தகு றத்திப தத்துணை
வருடி வட்டமு கத்தில தக்குறி
தடவி வெற்றிக தித்தமு லைக்குவ ...... டதன்மீதே
தரள பொற்பணி கச்சுவி சித்திரு
குழைதி ருத்திய ருத்திமி குத்திடு
தணிம லைச்சிக ரத்திடை யுற்றருள் ...... பெருமாளே.

பத உரை · word meanings

  • பழமை செப்பி அழைத்து இத மித்துடன் முறை மசக்கி அணைத்து
    பழைய உறவை எடுத்துக் கூறி அழைத்து, இன்பமும் பொய்யும் கலந்து முறையே மயங்கச் செய்து அணைத்து,
  • நகக் குறி பட அழுத்தி முகத்தை முகத்து உறவாடிபதறி எச்சிலை இட்டு மருத்து இடு
    நகக்குறி உடலில் பட அழுத்தி, முகத்தை முகத்தோடு வைத்து உறவாடி, அவசரமாக எச்சில் கூடிய மருந்தை ஊட்டி,
  • விரவு குத்திர வித்தை விளைப்பவர் பல விதத்திலும் அற்பர் எனச் சொல்லும் மட மாதர்
    வஞ்சகம் கலந்த தந்திரச் செயல்களைச் செய்பவர்கள், பல வகைகளிலும் அற்பர் என்று சொல்லத் தக்க அறிவில்லாத விலைமாதர்களுடன்
  • அழி தொழிற்கு விருப்பொடு நத்திய அசடனைப் பழி உற்ற அவத்தனை அடைவு கெட்ட புரட்டனை முட்டனை அடியேனை
    அழிந்து போகும் தொழில்களில் விருப்பத்துடன் ஆசைப்படும் முட்டாளை, பழிக்கு ஆளான வீணனை, தகுதி இல்லாத பொய்யனை, மூடனாகிய அடியேனை
  • அகில சத்தியும் எட்டுறு சித்தியும் எளிது எனப் பெரு வெட்டவெளிப்படும் அருண பொன் பதம் உற்றிட வைப்பதும் ஒரு நாளே
    சகல சக்தியும், அஷ்டமா* சித்திகளும் எளிதில் கிட்டும்படி, பெரிய வெட்ட வெளியில் தோன்றும் உனது சிவந்த அழகிய திருவடிகளை நான் சேரும்படியாக வைக்கும் ஒரு நாள் எனக்குக் கிடைக்குமா?
  • குழி விழிப் பெரு நெட்டு அலகைத் திரள் கரணம் இட்டு நடித்து அமிதப்படு குலிலி இட்ட களத்தில் எதிர்த்திடும் ஒரு சூரன்
    குழிந்த விழிகளைக் கொண்ட, பெரிது நீண்ட பேய்க் கூட்டங்கள் கூத்துடன் நடனமாடி, அளவில்லாத வீராவேச ஒலி செய்த போர்க்களத்தில், எதிர்த்து வந்த ஒப்பற்ற சூரன்
  • குருதி கக்கி அதிர்த்து விழப் பொரு நிசிசரப் படை பொட்டு எழ விக்ரம குலிச சத்தியை விட்டு அருள் கெர்ச்சித மயில் வீரா
    ரத்தத்தைக் கக்கி அதிர்ச்சியுடன் விழும்படி போர் செய்தும், அசுரர் சேனைகள் பொடிபட்டு அழியவும், (இந்திரனது) வலிமை பொருந்திய வஜ்ராயுதம் போன்ற வேலாயுதத்தைச் செலுத்திய தீரனே, பேரொலி செய்யும் மயில் வீரனே,
  • தழை உடுத்த குறத்தி பதத் துணை வருடி வட்ட முக(த்து) திலதக் குறி தடவி வெற்றி கதித்த முலைக் குவடு அதன் மீதே
    தழைகளை உடையாகக் கொண்ட குறவள்ளியின் திருவடிகள் இரண்டை வருடியும், வட்டமாக உள்ள முகத்தில் பொட்டு அடையாளத்தை வைத்தும், வெளித்தோன்றும் மலை போன்ற மார்பகங்களின் மேல்,
  • தரள பொன் பணி கச்சு விசித்து இரு குழை திருத்தி அருத்தி மிகுத்திடு தணி மலைச் சிகரத்திடை உற்று அருள் பெருமாளே.
    முத்தாலாகிய அழகிய ஆபரணங்களை, கச்சை அணிவித்தும், இரண்டு குண்டலங்களையும் செவிகளில் இடம் பெற வைத்தும், காதல் பெருகும் பெருமாளே, தணிகை மலை உச்சியில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

credits