திருப்புகழ் 279 பகல் இராவினும் (திருத்தணிகை)

தனன தானனம் தனன தானனம்
தனன தானனம் ...... தனதான
பகலி  ராவினுங்  கருவி  யாலனம் 
பருகி  யாவிகொண்  ......  டுடல்பேணிப் 
பழைய  வேதமும்  புதிய  நூல்களும் 
பலபு  ராணமுஞ்  ......  சிலவோதி 
அகல  நீளமென்  றளவு  கூறரும் 
பொருளி  லேயமைந்  ......  தடைவோரை 
அசடர்  மூகரென்  றவல  மேமொழிந் 
தறிவி  லேனழிந்  ......  திடலாமோ 
சகல  லோகமும்  புகல  நாடொறுஞ் 
சறுகி  லாதசெங்  ......  கழுநீருந் 
தளவு  நீபமும்  புனையு  மார்பதென் 
தணிகை  மேவுசெங்  ......  கதிர்வேலா 
சிகர  பூதரந்  தகர  நான்முகன் 
சிறுகு  வாசவன்  ......  சிறைமீளத் 
திமிர  சாகரங்  கதற  மாமரஞ் 
சிதற  வேல்விடும்  ......  பெருமாளே. 
  • பகலி ராவினுங் கருவி யால்
    பகலிலும் இரவிலும் இந்த உடம்பு என்ற கருவியால்
  • அ(ன்)னம் பருகி யாவிகொண்டு
    சோறு உண்டு உயிரைப் பாதுகாத்து
  • உடல்பேணி
    இவ்வுடம்பை விரும்பி வளர்த்த யான்,
  • பழைய வேதமும் புதிய நூல்களும்
    பழமையான வேத நூல்களையும் புதுமையான நூல்களையும்
  • பலபுராணமுஞ் சிலவோதி
    பலவகையான புராணங்களையும் ஒரு சிலவற்றை ஓதி உணர்ந்து,
  • அகல நீளமென்று அளவு கூறரும்
    இத்தனை அகலம் இத்தனை நீளம் என்று அளக்க முடியாத
  • பொருளிலே அமைந்து அடைவோரை
    பேரின்பப் பொருளிலே மனத்தை வைத்து அமைதியுறும் ஆன்றோரை,
  • அசடர் மூகரென்று அவலமே மொழிந்து
    மூடர், ஊமையர் என்றெல்லாம் வீண் வார்த்தைகளால் அவமதித்து
  • அறிவிலேன் அழிந்திடலாமோ
    அறிவிலியாகிய அடியேன் அழிந்து போகலாமா?
  • சகல லோகமும் புகல
    எல்லா உலகங்களும் போற்றிப் புகழும்படி,
  • நாடொறும் சறுகிலாத
    தினந்தோறும் தவறாமல் மலர்கின்ற
  • செங்கழுநீரும் தளவு நீபமும்
    செங்கழுநீர் மலரும், முல்லையும், கடப்ப மலரும்
  • புனையு மார்ப
    தரிக்கின்ற மார்பனே,
  • தென் தணிகை மேவு செங்கதிர்வேலா
    அழகிய திருத்தணிகையில் வாழ்கின்ற செவ்வொளி வீசும் வேலாயுதா,
  • சிகர பூதரந் தகர
    சிகரங்களைக் கொண்ட கிரெளஞ்ச மலை பொடிப்பொடியாக,
  • நான்முகன் சிறுகு வாசவன்
    பிரம்மாவும், மேல்நிலையிலிருந்து தாழ்ந்த இந்திரனும்
  • சிறைமீள
    சூரனது சிறைச்சாலையிலிருந்து மீட்சி பெற,
  • திமிர சாகரங் கதற
    இருண்ட கடல் கொந்தளித்து அலை ஓசை மிக,
  • மாமரஞ் சிதற
    மாமரமாக மாய உருக்கொண்ட சூரனது உடல் பிளவுபட,
  • வேல்விடும் பெருமாளே.
    வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com