திருப்புகழ் 260 கிரி உலாவிய (திருத்தணிகை)

தனன தானன தனதன தனதன
தனன தானன தனதன தனதன
தனன தானன தனதன தனதன ...... தனதான
கிரியு  லாவிய  முலைமிசை  துகிலிடு 
கபட  நாடக  விரகிக  ளசடிகள் 
கெடுவி  யாதிக  ளடைவுடை  யுடலினர்  ......  விரகாலே 
க்ருபையி  னாரொடு  மணமிசை  நழுவிகள் 
முழுது  நாறிக  ளிதமொழி  வசனிகள் 
கிடையின்  மேல்மன  முருகிட  தழுவிகள்  ......  பொருளாலே 
பரிவி  லாமயல்  கொடுசமர்  புரிபவர் 
அதிக  மாவொரு  பொருள்தரு  பவரொடு 
பழைய  பேரென  இதமுற  அணைபவர்  ......  விழியாலே 
பகழி  போல்விடு  வினைகவர்  திருடிகள் 
தமையெ  ணாவகை  யுறுகதி  பெரும்வகை 
பகர  மாமயில்  மிசைவர  நினைவது  ......  மொருநாளே 
அரிய  ராதிபர்  மலரய  னிமையவர் 
நிலைபெ  றாதிடர்  படவுடன்  முடுகியெ 
அசுரர்  தூள்பட  அயில்தொடு  மறுமுக  ......  இளையோனே 
அரிய  கானக  முறைகுற  மகளிட 
கணவ  னாகிய  அறிவுள  விதரண 
அமரர்  நாயக  சரவண  பவதிற  ......  லுடையோனே 
தரும  நீதியர்  மறையுளர்  பொறையுளர் 
சரிவு  றாநிலை  பெறுதவ  முடையவர் 
தளர்வி  லாமன  முடையவ  ரறிவினர்  ......  பரராஜர் 
சகல  லோகமு  முடையவர்  நினைபவர் 
பரவு  தாமரை  மலரடி  யினிதுற 
தணிகை  மாமலை  மணிமுடி  யழகியல்  ......  பெருமாளே. 
  • கிரி உலாவிய முலை மிசை துகில் இடு கபட நாடக விரகிகள் அசடிகள்
    மலை போன்ற மார்பின் மேல் ஆடையை அணிந்துள்ள கபட நாடகம் ஆடும் தந்திரக்காரிகள், முட்டாள்கள்,
  • கெடு வியாதிகள் அடைவுடை உடலினர்
    கெட்ட நோய்களை இடம் கொண்டுள்ள தேகத்தை உடையவர்கள்,
  • விரகாலே க்ருபையினார் ஒடு மணம் மிசை நழுவிகள்
    வெகு சாமர்த்தியமாக, (தங்கள் மீது) அன்பு வைத்தவர்களோடு மணம் செய்து கொள்வதாகக் கூறி பிறகு நழுவி விடுபவர்கள்,
  • முழுது நாறிகள் இத மொழி வசனிகள்
    முழுதும் துர் நாற்றம் வீசுபவர்கள், இன்பம் உண்டாகும்படி பேசுபவர்கள்,
  • கிடையின் மேல் மனம் உருகிட தழுவிகள்
    படுக்கையின் மீது ஆடவர் மனம் உருகும்படி தழுபவர்கள்,
  • பொருளாலே பரிவு இ(ல்)லா மயல் கொடு சமர் புரிபவர்
    பொருள் காரணமாக அன்பு கலவாத ஆசையுடன் சண்டை செய்பவர்கள்,
  • அதிகமா(க) ஒரு பொருள் தருபவரொடு பழைய பேர் என இதம் உற அணைபவர்
    அதிகமாக ஒரு பொருளைக் கொடுப்பவர்களிடம் (அவர்களோடு) பழைய உறவினர் போல இன்பம் பிறக்க அணைபவர்கள்,
  • விழியாலே பகழி போல் விடு வினை கவர் திருடிகள்
    கண்களால் அம்பு செலுத்துவது போல காரியத்தை வெல்லும் திருடிகள்,
  • தமை எ(ண்)ணா வகை அறு கதி பெறும் வகை
    (அத்தகைய) விலைமாதர்களை நான் எண்ணாதபடிக்கு, அடைய வேண்டிய நற் கதியைப் பெறும் வழியை,
  • பகர மா மயில் மிசை வர நினைவதும் ஒரு நாளே
    எனக்கு நீ போதிக்க, சிறந்த மயில் மேல் வர நீ நினைக்கும்படியான ஒரு நாள் உண்டாகுமோ?
  • அரி அர(ன்) அதிபர் மலர் அயன் இமையவர் நிலை பெறாது இடர் பட
    திருமால், ருத்திரன் என்னும் மேலோர், தாமரை மலரின் மேல் இருக்கும் பிரமன், தேவர்கள் (தத்தம் தொழிலில்) நிலை பெற ஒட்டாமல் துன்பப்பட,
  • உடன் முடுகியே அசுரர் தூள்பட அயில் தொடும் அறு முக இளையோனே
    உடனே விரைந்து சென்று, அசுரர்கள் தூளாகுமாறு வேலாயுதத்தைச் செலுத்திய ஆறு முக இளையோனே,
  • அரிய கானகம் உறை குற மகளிட கணவனாகிய அறிவு உள விதரண
    அருமையான வள்ளி மலைக் காட்டில் உறைகின்ற குறமகள் வள்ளி நாயகியின் கணவனாகிய, அறிவுள்ள தயாள குணம் படைத்தவனே,
  • அமரர் நாயக சரவணபவ திறல் உடையோனே
    தேவர்களின் தலைவனே, சரவணபவனே, வெற்றியை உடையவனே,
  • தரும நீதியர் மறை உளர் பொறை உளர் சரிவு உறா நிலை பெறு தவம் உடையவர்
    தரும நீதி வாய்ந்தவர்களும், வேதம் கற்றவர்களும், பொறுமை உடையவர்களும், தவறுதல் இல்லாத நிலைத்த வகையில் தவம் புரிபவர்களும்,
  • தளர்வு இலா மனம் உடையவர் அறிவினர் பர ராஜர்
    சோர்வு இல்லாத மனத்தை உடையவர்களும், அறிஞர்களும், மேலான அரசர்களும்,
  • சகல லோகமும் உடையவர் நினைபவர் பரவு தாமரை மலர் அடி இனிது உற
    எல்லா உலகங்களுக்கும் அதிபர்களும், உன்னை நினைந்து போற்றுபவர்களும் தொழும் தாமரைமலர் போன்ற திருவடி இனிது பொருந்த
  • தணிகை மாமலை மணிமுடி அழகியல் பெருமாளே.
    திருத்தணி மாமலையின் அழகிய உச்சியில் அழகு விளங்க வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com