தனத்த தத்தனத் தந்த தாத்தன ...... தந்ததான
தனத்த தத்தனத் தந்த தாத்தன ...... தந்ததான
கனைத்த திர்க்குமிப் பொங்கு கார்க்கட ...... லொன்றினாலே
கறுத்த றச்சிவத் தங்கி வாய்த்தெழு ...... திங்களாலே
தனிக்க ருப்புவிற் கொண்டு வீழ்த்தச ...... ரங்களாலே
தகைத்தொ ருத்தியெய்த் திங்கு யாக்கைச ...... ழங்கலாமோ
தினைப்பு னத்தினைப் பண்டு காத்தம ...... டந்தைகேள்வா
திருத்த ணிப்பதிக் குன்றின் மேற்றிகழ் ...... கந்தவேளே
பனைக்க ரக்கயத் தண்டர் போற்றிய ...... மங்கைபாகா
படைத்த ளித்தழிக் குந்த்ரி மூர்த்திகள் ...... தம்பிரானே.
- கனைத்து அதிர்க்கும் இப் பொங்கு கார்க்கடல் ஒன்றினாலே
ஒலித்து அதிர்கின்ற இந்தப் பொங்கும் கரிய கடல் ஒன்றினாலும், - கறுத்து அறச்சிவத்து அங்கி வாய்த்தெழு திங்களாலே
கோபித்து மிகச் சிவந்து போய் நெருப்பின் சூட்டினைப் பூண்டுகொண்டு உதித்த சந்திரனாலே, - தனிக்கருப்பு விற் கொண்டு வீழ்த்த சரங்களாலே
ஒப்பற்ற கரும்பு வில்லினை ஏந்தி மன்மதன் செலுத்திய மலர்ச் சரங்களாலே, - தகைத்து ஒருத்தி எய்த்து இங்கு யாக்கை சழங்கலாமோ
வாட்டத்தால் தனித்த ஒருத்தியாம் இந்தத் தலைவி இளைப்புற்று இங்கு உடல் தளரலாமோ? - தினைப்புனத்தினைப் பண்டு காத்த
தினைப் புனத்தில் உள்ள பயிரை முன்னாள் காவல் செய்த - மடந்தைகேள்வா
வள்ளியின் கணவனே, - திருத்த ணிப்பதிக் குன்றின் மேல்
திருத்தணித் தலத்தின் மலை மீது - திகழ் கந்தவேளே
விளங்குகின்ற கந்தக் கடவுளே, - பனைக்க ரக்கயத்து அண்டர் போற்றிய
பனைமரம் போன்று பருத்த தும்பிக்கையை உடைய வெள்ளை யானைக்கு (ஐராவதம்) உரிய தேவர்கள் போற்றுகின்ற - மங்கைபாகா
மங்கையாகிய தேவயானையின் பக்கத்தில் இருப்பவனே, - படைத்து அளித்து அழிக் கும்
ஆக்கி அளித்து அகற்றும் முத்தொழில்களையும் செய்யும் - த்ரி மூர்த்திகள் தம்பிரானே.
மும்மூர்த்திகளின் தலைவனான பெருமாளே.