திருப்புகழ் 234 வார்குழலை (சுவாமிமலை)

தானன தத்தன தத்தன தத்தன
தானன தத்தன தத்தன தத்தன
தானன தத்தன தத்தன தத்தன ...... தந்ததான
வார்குழ  லைச்சொரு  கிக்கரு  விற்குழை 
காதொடி  ணைத்தசை  யக்கதிர்  பற்கொடு 
வாயிதழ்  பொற்கம  லர்க்குமி  ழொத்துள  ......  துண்டக்ரீவ 
வார்கமு  கிற்புய  நற்கழை  பொற்குவ 
டாடிள  நிர்ச்சுரர்  பொற்குட  மொத்திணை 
மார்பழ  கிற்பொறி  முத்தொளிர்  சித்திர  ......  ரம்பைமாதர் 
காருறும்  வித்திடை  யிற்கத  லித்தொடை 
சேரல்குல்  நற்பிர  சத்தட  முட்கொடு 
கால்மறை  யத்துவ  ளச்செறி  பொற்கலை  ......  யொண்குலாவக் 
கார்குயி  லைக்குர  லைக்கொடு  நற்றெரு 
மீதில்நெ  ளித்துந  கைத்துந  டிப்பவர் 
காமனு  கப்பம  ளிச்சுழல்  குத்திரர்  ......  சந்தமாமோ 
சூரர்ப  தைக்கர  வுட்கிநெ  ளித்துய 
ராழியி  ரைப்பநி  ணக்குட  லைக்கழு 
சூழந  ரிக்கெரு  டக்கொடி  பற்பல  ......  சங்கமாகச் 
சூழ்கிரி  யைக்கைத  டித்தும  லைத்திகை 
யானையு  ழற்றிந  டுக்கிம  தப்பொறி 
சோரந  கைத்தயி  லைக்கொடு  விட்டருள்  ......  செங்கைவேலா 
ஏரணி  நற்குழ  லைக்கக  னச்சசி 
மோகினி  யைப்புணர்  சித்தொரு  அற்புத 
வேடமு  தச்சொரு  பத்தகு  றத்திம  ......  ணங்கொள்வோனே 
ஏரக  வெற்பெனு  மற்புத  மிக்கசு 
வாமிம  லைப்பதி  நிற்குமி  லக்ஷண 
ராஜத  லக்ஷண  லக்ஷுமி  பெற்றருள்  ......  தம்பிரானே. 
  • வார் குழலைச் சொருகிக் கரு வில் குழை காதொடு இணைத்து அசையக் கதிர் பல் கொ(ண்)டு வாய் இதழ் பொற்க மலர்க் குமிழ் ஒத்து உளதுண்ட
    நீண்ட கூந்தலை சொருகி, பெரிய பிரகாசம் பொருந்திய குண்டலங்கள் அணிந்துள்ள காதுடன் பொருந்தி அசையும்படி விட்டும், ஒளி வீசும் பற்கள் கொண்டும், வாய் இதழ் அழகு செய்ய குமிழ மலர் போன்ற மூக்கைக் கொண்டும்,
  • க்ரீவ வார் கமுகில் நல் கழை பொன் குவடு ஆடு இள நிர்ச் சுரர் பொன் குடம் ஒத்த இணை மார்பு அழகில் பொறி முத்து ஒளிர் சித்திர ரம்பை மாதர்
    கழுத்தாகிய நீண்ட கமுகு கொண்டும், புயங்களாகிய பசிய மூங்கில் கொண்டும், பொன் மலை போன்றும், ஆடும் இள நீர் போன்றும், தேவர்களின் (அமுதம் கொண்ட) அழகிய குடம் போன்றும் விளங்கும் இரண்டு மார்பகங்கள் கொண்டும், மார்பில் அழகான தேமலுடன், முத்து மாலை கொண்டும் ஒளி வீசும் அழகிய ரம்பை போன்ற விலைமாதர்கள்.
  • கார் உறும் வித்து இடையில் கதலித் தொடை சேர் அல்குல் நல் பிரசம் தடம் உள் கொடு கால் மறையத் துவளச் செறி பொன் கலை ஒண் குலாவ
    கார்மேகத்தில் காணப்படும் மின்னல் போன்ற இடையும், வாழைத் தண்டு போன்ற தொடையும், (அங்கு) சேர்ந்துள்ள பெண்குறியாகிய தேன் பொதிந்துள்ள இடமும் உள்ளிருக்க, உள்ளங்கால் அளவும் மறையும்படி தொங்கி நெருங்கும் அழகிய புடைவை நன்கு விளங்க,
  • கார் குயிலைக் குரலைக் கொ(ண்)டு நல் தெரு மீதில் நெளித்து நகைத்து நடிப்பவர் காமன் உகப்ப அமளிச் சுழல் குத்திரர் சந்தம் ஆமோ
    கரிய குயிலின் குரல் போன்ற குரலுடன், அழகிய தெருவீதியில் உடலை நெளித்தும், நகை புரிந்தும் நடிப்பவர்கள். மன்மதன் மகிழும்படி படுக்கையில் புரளுகின்ற வஞ்சகர்கள் ஆகிய பொது மாதர்களின் அழகில் ஈடுபடுதல் ஆகுமோ?
  • சூரர் பதைக்க அர உட்கி நெளித்து உயர் ஆழி இரைப்ப நிணக் குடலைக் கழு சூழ் நரிக் கெருடக் கொடி பற்பல சங்கமாகச் சூழ் கிரியைக் கை தடித்து
    அசுரர்கள் பதைக்கவும் ஆதிசேஷன் பயந்து நெளியவும், பெரிய கடல் ஓலமிட்டு ஒலிக்கவும், மாமிசக் குடலை கழுகுகள் சூழவும், நரிகளும், கருடன்களும், காக்கைகளும் பல கூட்டமாய் நெருங்கவும், (வஞ்சனை எண்ணம் கொண்ட) கிரவுஞ்ச மலையின் ஆற்றலை அழித்து,
  • மலைத் திகை யானை உழற்றி நடுக்கி மதப் பொறி சோர நகைத்து அயிலைக் கொ(ண்)டு விட்டு அருள் செம் கை வேலா
    (எட்டுத் திக்கில் உள்ள) மலைகளையும் யானைகளையும் அலையுண்ணச் செய்து நடுங்க வைத்து, அவைகளின் மதம் பூண்ட அறிவு குலையும் வண்ணம் நகைத்து, வேலைக் கொண்டு செலுத்தி அருள் செய்த செங்கை வேலனே,
  • ஏர் அணி நல் குழலைக் ககனச் சசி மோகினியை புணர்ச்சி சித்த ஒரு அற்புத வேட அமுதச் சொருபத்த குறத்தி மணம் கொள்வோனே
    அழகுள்ள சிறந்த கூந்தலை உடையவளும் விண்ணுலகத்தில் உள்ள இந்திராணி பெற்ற பேரழகியுமாகிய தேவயானையைச் சேர்ந்த சித்தனே*, ஒப்பற்ற அற்புதமான வேடர் குலத்தில் உதித்த அமுத சொரூபியான குறமகள் வள்ளியை மணம் கொண்டவனே,
  • ஏரக(ம்) வெற்பு எ(ன்)னும் அற்புத மிக்க சுவாமி மலைப் பதி நிற்கும் இலக்ஷண
    திருவேரக மலை என்னும் அற்புதம் மிகுந்த சுவாமி மலைப் பதியாகிய தலத்தில் நிற்கும் அழகனே,
  • ராஜத லக்ஷண லக்ஷுமி பெற்று அருள் தம்பிரானே.
    லக்ஷ்மி போன்ற ராஜத** குணம் படைத்த பார்வதி பெற்றருளிய தம்பிரானே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com