திருப்புகழ் · 233வாரம் உற்ற (சுவாமிமலை)

தான தத்த தந்த தான தத்த தந்த
தான தத்த தந்த ...... தனதான

Nangalappa Sharanam

வார முற்ற பண்பின் மாத முற்ற நண்பி
னீடு மெய்த்து யர்ந்து ...... வயதாகி
வாலை யிற்றி ரிந்து கோல மைக்கண் மங்கை
மார்க ளுக்கி சைந்து ...... பொருள்தேடி
ஆர மிக்க பொன்க ளால மைத்த மர்ந்த
மாப ணிக்கள் விந்தை ...... யதுவான
ஆட கொப்ப மைந்த வோலை முத்த முங்கொ
டாவி மெத்த நொந்து ...... திரிவேனோ
சூர னைத்து ரந்து வேர றப்பி ளந்து
சூழ்சு ரர்க்க ணன்பு ...... செயும்வீரா
சூக ரத்தொ டம்பு தானெ டுத்து வந்த
சூத னுக்கி சைந்த ...... மருகோனே
ஏரெ திர்த்து வந்து நீர்கள் கட்டி யன்று
தானி றைக்க வந்த ...... தொருசாலி
யேமி குத்து யர்ந்த மாவ யற்கள் மிஞ்சு
மேர கத்த மர்ந்த ...... பெருமாளே.

பத உரை

  • வாரம் உற்ற பண்பின் மாதம் உற்ற நண்பின் நீடு மெய்த் துயர்ந்து வயது ஆகி
    (கணவனுக்கும் மனைவிக்கும்) அன்பு பூண்ட தன்மையில் (கருவுற்று), மாதங்கள் பல செல்ல (வளர்ந்து), அந்த அன்பினால் வளரும் உடலில் பிறந்து, வயது நிரம்பி,
  • வாலையில் திரிந்து கோல மைக் கண் மங்கைமார்களுக்கு இசைந்து பொருள் தேடி
    காளைப் பருவத்தில் திரிதலுற்று, அழகிய மை பூசிய கண்களை உடைய பெண்களிடத்தே நேசம் கொண்டு, (அவர்களுக்குக் கொடுக்கப்) பொருள் தேடி,
  • ஆரம் மிக்க பொன்களால் அமைத்து அமர்ந்த மா பணிக்கள் விந்தை அதுவான ஆடக(ம்) ஒப்ப அமைந்த ஓலை முத்தமும் கொடு ஆவி மெத்த நொந்து திரிவேனோ
    மாலைகள், நல்ல பொன்னால் செய்யப்பட்டு விளங்கும் சிறந்த ஆபரணங்கள், விசித்திரமான பொன்னால் வேலைப்பாடு அமைந்த காதணியையும், முத்துக்களையும் கொடுத்து, என் உயிர் மிகவும் நொந்து திரிவேனோ?
  • சூரனைத் துரந்து வேர் அறப் பிளந்து சூழ் சுரர்க் கண் அன்பு செ(ய்)யும் வீரா
    சூரனை விரட்டி ஓட்டி அடியோடு அவனைப் பிளந்து, சூழ்ந்துள்ள தேவர்களிடத்தே அன்பு காட்டிய வீரனே,
  • சூகரத்தொடு அம் பு தான் எடுத்து வந்த சூதனுக்கு இசைந்த மருகோனே
    பன்றியின் உருக்கொண்டு (வராக அவதாரத்தில்)* அழகிய பூமியை மேலே எடுத்து வந்த தந்திரம் வாய்ந்த திருமாலுக்கு உகந்த மருகனே,
  • ஏர் எதிர்த்து வந்து நீர்கள் கட்டி அன்று தான் இறைக்க வந்தது ஒரு சாலியே மிகுத்து உயர்ந்த மா வயற்கள் மிஞ்சும் ஏரகத்து அமர்ந்த பெருமாளே.
    ஏர் எதிர்த்து வர நீரைப் பாய்ச்சிக் கட்டி, அப்போதைக்கப்போது உழவர்கள் இறைத்ததன் பயனால் விளைந்த ஒப்பற்ற செந்நெல் பயிர்களே பெருகி உயர்ந்து வளர்ந்த சிறந்த வயல்கள் நிறைந்துள்ள சுவாமி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

குறிப்புகள் · notes

  • * திருமால் வராகாவதாரம் எடுத்த வரலாறு: இரணியாக்ஷன் என்னும் அசுரன் பூமியைப் பாய் போல் சுருட்டி எடுத்துக் கொண்டு பாதாளத்தில் மறைந்து கொண்டான். திருமால் பன்றி உருவம் கொண்டு, பாதாளத்திற்குச் சென்று, தன் கொம்பினால் அவனைக் கொன்று, பூமியைக் கொம்பினால் தாங்கி மேலே கொண்டு வந்தார்.
  • * The story of incarnation of Lord VishNu as a boar 'vaRakam': When the demon HiraNyAkshan rolled the earth as a mat and hid it in the nether world, Lord VishNu took the form of a boar and penetrated right down to the nether world. There He fought with the demon killing him with His horn with which He lifted the earth and brought it up to its original position.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout