திருப்புகழ் · 200வேய் இசைந்து (பழநி)

தான தந்தன தான தந்தன
தான தந்தன தான தந்தன
தான தந்தன தான தந்தன ...... தனதான

Thiruppugazh Anbargal

வேயி சைந்தெழு தோள்கள் தங்கிய
மாதர் கொங்கையி லேமு யங்கிட
வீணி லுஞ்சில பாத கஞ்செய ...... அவமேதான்
வீறு கொண்டுட னேவ ருந்தியு
மேயு லைந்தவ மேதி ரிந்துள
மேக வன்றறி வேக லங்கிட ...... வெகுதூரம்
போய லைந்துழ லாகி நொந்துபின்
வாடி நைந்தென தாவி வெம்பியெ
பூத லந்தனி லேம யங்கிய ...... மதிபோகப்
போது கங்கையி னீர்சொ ரிந்திரு
பாத பங்கய மேவ ணங்கியெ
பூசை யுஞ்சில வேபு ரிந்திட ...... அருள்வாயே
தீயி சைந்தெழ வேயி லங்கையில்
ராவ ணன்சிர மேய ரிந்தவர்
சேனை யுஞ்செல மாள வென்றவன் ...... மருகோனே
தேச மெங்கணு மேபு ரந்திடு
சூர்ம டிந்திட வேலின் வென்றவ
தேவர் தம்பதி யாள அன்புசெய் ...... திடுவோனே
ஆயி சுந்தரி நீலி பிங்கலை
போக அந்தரி சூலி குண்டலி
ஆதி யம்பிகை வேத தந்திரி ...... யிடமாகும்
ஆல முண்டர னாரி றைஞ்சவொர்
போத கந்தனை யேயு கந்தருள்
ஆவி னன்குடி மீதி லங்கிய ...... பெருமாளே.

பத உரை

  • வேய் இசைந்து எழு தோள்கள் தங்கிய
    மூங்கிலுக்கு ஒத்ததாய் எழுந்துள்ள தோள்களைக் கொண்ட
  • மாதர் கொங்கையிலே முயங்கிட
    விலைமாதர்களின் மார்பகங்களைத் தழுவ வேண்டி,
  • வீணிலும் சில பாதகம் செய அவமே தான்
    வீணாக சில பாதகச் செயல்களைச் செய்ய பயனொன்றும் இல்லாமல்
  • வீறு கொண்டு உடனே வருந்தியுமே
    செருக்கு அடைந்து மனம் வருந்தியும்,
  • உலைந்து அவமே திரிந்து உள்ளமே கவன்று
    நிலை குலைந்து, வீணாகத் திரிந்து நெஞ்சம் கவலை கொண்டும்,
  • அறிவே கலங்கிட வெகு தூரம் போய் அலைந்து உழலாகி நொந்து
    அறிவு கலங்கி வெகு தூரம் போய் அலைந்து உழன்று நொந்தும்,
  • பின் வாடி நைந்து எனது ஆவி வெம்பியே
    பின்னர் உடல் வாட்டமுற்று நிலை கெட்டு என் ஆவி கொதித்து வாடியும்,
  • பூதலம் தனிலே மயங்கிய மதி போக
    இப் பூமியில் ஆசை மயக்கம் கொண்ட புத்தி என்னை விட்டு விலகிப் போகவும்,
  • போது கங்கையின் நீர் சொரிந்து
    மலரையும், கங்கை நீரையும் நிரம்பப் பெய்து
  • இருபாத பங்கயமே வணங்கியே
    உனது இரண்டு தாமரைத் திருவடிகளை வணங்கியே
  • பூசையும் சிலவே புரிந்திட அருள்வாயே
    சில பூஜைகளையும் செய்ய அருள் புரிவாயாக.
  • தீ இசைந்து எழவே இலங்கையில்
    நெருப்புப் பற்றி எழும்படி இலங்கையில்
  • ராவணன் சிரமே அரிந்து அவர் சேனையும் செல மாள
    இராவணனுடைய தலைகளை அரிந்து, அவனுடைய சேனைகள் தொலைந்து அழியும்படியாக
  • வென்றவன் மருகோனே
    வென்ற இராமனின் மருகோனே,
  • தேசம் எங்கணுமே புரந்திடு
    எல்லா நாடுகளையும் ஆண்டு வந்த
  • சூர் மடிந்திட வேலின் வென்றவ
    சூரன் இறந்து போகும்படியாக வேல் கொண்டு வென்றவனே,
  • தேவர் தம் பதி ஆள அன்பு செய்திடுவோனே
    தேவர்கள் தம் ஊரை ஆளும்படி அருள் புரிந்தவனே,
  • ஆயி சுந்தரி நீலி பிங்கலை
    அனைவருக்கும் தாய், அழகி, பச்சை நிறமுடையவள், பொன்னிறமும் படைத்தவள்,
  • போக அந்தரி சூலி குண்டலி
    உயிர்களுக்குப் போகத்தை ஊட்டும் ஓளி வடிவினள், திரிசூலம் ஏந்தியவள், சுத்த மாயையாகிய சக்தி,
  • ஆதி அம்பிகை வேத தந்திரி இடமாகும்
    ஆதி முதல்வி, அம்பிகை, வேதத் தலைவி (ஆகிய பார்வதி) இடப்பாகத்தில் அமரும்,
  • ஆலம் உண்ட அரனார் இறைஞ்ச
    ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் வணங்கி வேண்ட,
  • ஓர் போதகம் தனையே உகந்து அருள்
    ஒப்பற்ற ஞான உபதேசத்தை மகிழ்ந்து அருளிய (பெருமாளே),
  • ஆவினன்குடி மீது இலங்கிய பெருமாளே.
    திருவாவினன்குடி என்னும் தலத்தில் விளங்குகின்ற பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout