தானந்த தனன தான தானந்த தனன தான
தானந்த தனன தான ...... தனதான
ஞானங்கொள் பொறிகள் கூடி வானிந்து கதிரி லாத
நாடண்டி நமசி வாய ...... வரையேறி
நாவின்ப ரசம தான ஆநந்த அருவி பாய
நாதங்க ளொடுகு லாவி ...... விளையாடி
ஊனங்க ளுயிர்கள் மோக நானென்ப தறிவி லாம
லோமங்கி யுருவ மாகி ...... யிருவோரும்
ஓரந்த மருவி ஞான மாவிஞ்சை முதுகி னேறி
லோகங்கள் வலம தாட ...... அருள்தாராய்
தேனங்கொ ளிதழி தாகி தாரிந்து சலில வேணி
சீரங்க னெனது தாதை ...... ஒருமாது
சேர்பஞ்ச வடிவி மோகி யோகங்கொள் மவுன ஜோதி
சேர்பங்கி னமல நாத ...... னருள்பாலா
கானங்கள் வரைகள் தீவு ஓதங்கள் பொடிய நீல
காடந்த மயிலி லேறு ...... முருகோனே
காமன்கை மலர்கள் நாண வேடம்பெ ணமளி சேர்வை
காணெங்கள் பழநி மேவு ...... பெருமாளே.
- ஞானங்கொள் பொறிகள் கூடி
ஞான இந்திரியங்கள் யாவும் ஒருமுகமாகக் கூடி, - வானிந்து கதிரிலாத நாடு அண்டி
வானில் சந்திரன் சூரியன் இன்றியே ஒளி வீசும் உலகத்தை அடைந்து, - நமசி வாய வரையேறி
நமசிவாய என்ற பஞ்சாட்சர மலையின் மீது ஏறி, - நாவின்ப ரசமதான ஆநந்த அருவி பாய
நாவுக்குப் பேரின்ப இனிமையைத் தரும் ஆனந்த அருவி பாய, - நாதங்களொடு குலாவி விளையாடி
அந்தச் சிவயோக சமாதியில் உள்ள நாதங்களோடு கலந்து விளையாடல் புரிந்து, - ஊனங்க ளுயிர்கள் மோக
ஊன் பொதிந்த உடம்புடன் கூடிய உயிர்களை மயங்கச் செய்யும் தன்மையும், - நானென்பது அறிவி லாமல் ஓம் அங்கி யுருவ மாகி
நான் என்ற அறிவே அற்றுப் போய், ப்ரணவ ஜோதி வடிவமாகி, - இருவோரும் ஓரந்த மருவி
ஜீவாத்மாவாகிய யானும் பரமாத்மாவாகிய நீயும் ஒரே வடிவமாகி, - ஞான மா விஞ்சை முதுகினேறி
மெய்ஞ்ஞான வித்தையாகிய குதிரையின் முதுகில் ஏறி, - லோகங்கள் வலம தாட அருள்தாராய்
உலகம் முழுதும் வலமாக பவனி வரும் பெருவாழ்வை அருள்வாயாக. - தேனங்கொள் இதழி
தேனை உடையதும் அழகியதும் ஆன கொன்றை மலரையும், - தாகி தார் இந்து சலில வேணி
ஆத்தி மலர் மாலையையும், நிலவையும், கங்கையையும் ஜடாமுடியில் அணிந்தவரும், - சீர் அங்கன் எனது தாதை
சிறந்த திருமேனியை உடையவரும், எனது தந்தையாரும், - ஒருமாது சேர்பஞ்ச வடிவி
ஒப்பற்ற பெண்ணரசி, பஞ்ச* சக்திகளின் கலவையான வடிவழகி, - மோகி யோகங்கொள் மவுன ஜோதி
சிவத்தின் காதலி, சிவயோகத்தில் மேவிய மெளன நிலையுடையார் காணும் ஜோதி வடிவினாள் ஆகிய உமா தேவியார் - சேர்பங்கின் அமல நாதன் அருள்பாலா
சேர்ந்திருக்கிற இடது பாகத்தை உடையவருமான, தூய்மையே உருவான தனிப் பெரும் தலைவராம் சிவபெருமான் பெற்றருளிய திருக்குமாரனே, - கானங்கள் வரைகள் தீவு ஓதங்கள் பொடிய
காடுகளும் மலைகளும் தீவுகளும் கடல்களும் பொடியாக - நீல காடு அந்த மயிலிலேறு முருகோனே
காட்டில் நீல நிறத்தோடுள்ள அழகிய மயிலில் ஏறும் முருகனே, - காமன்கை மலர்கள் நாண
மன்மதனுடைய கரத்தில் உள்ள மலர்க் கணைகள் மயக்கும் ஆற்றலின்றி நாண, - வேடம்பெண் அமளி சேர்வைகாண்
வேடர் குலப் பெண் வள்ளியுடன் மலர் மஞ்சத்தில் இணைந்திருக்கும் - எங்கள் பழநி மேவு பெருமாளே.
எமது பழநி மலையின் எழுந்தருளிய பெருமாளே.