திருப்புகழ் 161 சுருளளக பார (பழநி)

தனதனன தான தந்த தனதனன தான தந்த
தனதனன தான தந்த ...... தனதான
சுருளளக  பார  கொங்கை  மகளிர்வச  மாயி  சைந்து 
சுரதக்ரியை  யால்வி  ளங்கு  ......  மதனூலே 
சுருதியென  வேநி  னைந்து  அறிவிலிக  ளோடி  ணங்கு 
தொழிலுடைய  யானு  மிங்கு  ......  னடியார்போல் 
அருமறைக  ளேநி  னைந்து  மநுநெறியி  லேந  டந்து 
அறிவையறி  வால  றிந்து  ......  நிறைவாகி 
அகிலபுவ  னாதி  யெங்கும்  வெளியுறமெய்ஞ்  ஞான  இன்ப 
அமுதையொழி  யாத  ருந்த  ......  அருள்வாயே 
பருதிமகன்  வாசல்  மந்த்ரி  அநுமனொடு  நேர்ப  ணிந்து 
பரிதகழை  யாமுன்  வந்து  ......  பரிவாலே 
பரவியவி  பீஷ  ணன்பொன்  மகுடமுடி  சூட  நின்ற 
படைஞரொடி  ராவ  ணன்ற  ......  னுறவோடே 
எரிபுகுத  மாறி  லண்டர்  குடிபுகுத  மாறு  கொண்ட 
ரகுபதியி  ராம  சந்த்ரன்  ......  மருகோனே 
இளையகுற  மாது  பங்க  பழநிமலை  நாத  கந்த 
இமையவள்த  னால்ம  கிழ்ந்த  ......  பெருமாளே. 
  • சுருள் அளக பார கொங்கை மகளிர் வசமாய் இசைந்து
    சுருண்டுள்ள கூந்தல் கொண்டையையும், பெருத்த மார்பகங்களையும் உடைய விலைமாதர்களின் வசமாக மனம் ஈடுபட்டு,
  • சுரத க்ரியையால் விளங்கும் மதன் நூலே
    காம லீலைகளை எல்லாம் விளக்கும் மன்மத சாத்திரத்தையே
  • சுருதி எனவே நினைந்து அறிவிலிகளோடு இணங்கு தொழிலுடைய யானும்
    வேதம் என்று எண்ணி, அறிவில்லாதவருடன் நட்புக் கொள்ளும் செய்கைகளை உடைய நானும்,
  • இங்கு உன் அடியார் போல் அரு மறைகள் ஓதி நினைந்து மநு நெறியிலே நடந்து
    இங்கு உன்னுடைய அடியார்களைப் போல் அருமையான வேதங்களையே உண்மையான நூலாகக் கருதி, மநு தர்ம சாஸ்திர வழியிலே நடந்து,
  • அறிவை அறிவால் அறிந்து நிறைவாகி
    அறிவு இன்னது என்பதை உள் அறிவுகொண்டு அறிந்து, பூரண ஞானம் பெற்று,
  • அகில புவன(ம்) ஆதி எங்கும் வெளி உற
    எல்லா உலகங்களிலும் உள்ள தலங்கள் யாவையும் சுத்த ஞான வெளியாகவே கண்டு,
  • மெய் ஞான இன்ப அமுதை ஒழியாது அருந்த அருள்வாயே
    மெய்ஞ்ஞான இன்ப அமுதத்தை ஓய்வின்றிப் பருக அருள் செய்வாயாக.
  • பருதி மகன் வாசல் மந்த்ரி அனுமனொடு நேர் பணிந்து
    சூரியனுடைய மகனான சுக்ரீவனின் அரண்மனை வாயில் மந்திரியாகிய அனுமானுடைய உதவியுடன் நேராகப் பணிந்து
  • பரி(வு) தக அழையா முன் வந்து பரிவாலே பரவிய விபீஷணன்
    (ஸ்ரீராமர்) தன்னை அன்புடனும் தகைவுடனும் அழைப்பதற்கு முன்னமேயே தானே பணிவுடன் சென்று, பக்தியுடன் சரணாகதி அடைந்த விபீஷணன்
  • பொன் மகுட முடி சூட நின்று
    பொன் மகுடம் முடியில் சூட்டப்பட்டு நிற்க,
  • படைஞரொடு இராவணன் தன் உறவோடே எரி புகுத
    இராவணன் தன் உறவினர்களுடனும் படைகளுடனும் இறந்து நெருப்பிற்கு இரையாகி மடிய,
  • மாறு இல் அண்டர் குடி புகுத
    பக்தி மாறுதல் சிறிதும் இல்லாத தேவர்கள் இந்திர லோகத்தில் குடி புகுந்து மீண்டும் வாழவும்,
  • மாறு கொண்ட ரகுபதி இராம சந்த்ரன் மருகோனே
    இராவணனிடம் பகை கொண்ட, ரகு குலத்தில் வந்த தலைவனான இராமச் சந்திர மூர்த்தியின் மருகனே,
  • இளைய குற மாது பங்க பழநி மலை நாத கந்த
    இளைய குறப் பெண்ணாகிய வள்ளியின் பங்கனே, பழநிமலை நாதனே, கந்தனே,
  • இமையவள் த(ன்)னால் மகிழ்ந்த பெருமாளே.
    இமவான் மகளான பார்வதி மகிழ்கின்ற பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com