தான தனதனன தான தனதனன
தான தனதனன ...... தனதான
சீற லசடன்வினை காரன் முறைமையிலி
தீமை புரிகபடி ...... பவநோயே
தேடு பரிசிகன நீதி நெறிமுறைமை
சீர்மை சிறிதுமிலி ...... எவரோடுங்
கூறு மொழியதுபொய் யான கொடுமையுள
கோள னறிவிலியு ...... னடிபேணாக்
கூள னெனினுமெனை நீயு னடியரொடு
கூடும் வகைமையருள் ...... புரிவாயே
மாறு படுமவுணர் மாள அமர்பொருது
வாகை யுளமவுலி ...... புனைவோனே
மாக முகடதிர வீ சு சிறைமயிலை
வாசி யெனவுடைய ...... முருகோனே
வீறு கலிசைவரு சேவ கனதிதய
மேவு மொருபெருமை ...... யுடையோனே
வீரை யுறைகுமர தீர தரபழநி
வேல இமையவர்கள் ...... பெருமாளே.
- சீற லசடன்
சீறி விழும் சினத்தை உடைய கீழ்மகன், - வினைகாரன் முறைமையிலி
தீவினைகளைச் செய்கின்றவன், ஒழுக்கம் இல்லாதவன், - தீமை புரிகபடி
பாவங்களைச் செய்கின்ற வஞ்சகன், - பவநோயே தேடு பரிசி
பிறவிநோயையே தேடுகின்ற தன்மையுடையவன், - கன நீதி நெறி முறைமை சீர்மை சிறிதுமிலி
பெருமை, நீதி, நெறி, நேர்மை, சிறப்பு என்ற நல்ல குணங்கள் ஒரு சிறிதும் இல்லாதவன், - எவரோடுங் கூறு மொழியது பொய்யான
எல்லோருடனும் பொய்யையே பேசித் திரியும் - கொடுமையுள கோளன்
கொடுமையே கொண்ட தீயவன், - அறிவிலி உன்அடிபேணாக் கூளன்
அறிவில்லாதவன், உனது திருவடிகளைப் பணியாத குப்பை போன்றவன், - எனினுமெனை நீயுன் அடியரொடு
இப்படிப்பட்டவனாக இருப்பினும் என்னை நீ உன் அடியார்களுடைய - கூடும் வகைமையருள் புரிவாயே
திருக்கூட்டத்தில் கூட்டி வைக்கும்படியான வழியைத் தந்து அருள்வாயாக. - மாறு படுமவுணர் மாள அமர்பொருது
நீதி நெறியினின்று மாறுபட்ட அசுரர்கள் மாண்டு போகப் போர் செய்து, - வாகை யுளமவுலி புனைவோனே
வெற்றியோடு கூடிய மகுடத்தைத் தரித்தவனே, - மாக முகடதிர
அண்டத்தின் உச்சி அதிரும்படியாக - வீசு சிறைமயிலை
இறக்கைகளை வீசிப் பறக்கும் மயிலை - வாசி யெனவுடைய முருகோனே
குதிரையைப் போல வாகனமாக உடைய முருகப் பெருமானே, - வீறு கலிசைவரு சேவகனது இதயம்
புகழ் பெற்ற கலிசை* என்ற ஊரில் வாழ்ந்த மன்னனது உள்ளத்தில் - மேவு மொருபெருமை யுடையோனே
வீற்றிருக்கும் ஒப்பற்ற பெருமை உடையவனே, - வீரை யுறைகுமர
வீரை* என்ற திருத்தலத்தில் வாழ்கின்ற குமார ஸ்வாமியே, - தீரதர பழநி வேல
தைரியம் உடையவனே, பழனியில் எழுந்தருளிய வேலாயுதனே, - இமையவர்கள் பெருமாளே.
தேவர்கள் வணங்கும் பெருமாளே.