திருப்புகழ் 158 சீ உதிரம் எங்கும் (பழநி)

தானதன தந்த தானதன தந்த
தானதன தந்த தானதன தந்த
தானதன தந்த தானதன தந்த தனதான
சீயுதிர  மெங்கு  மேய்புழுநி  ரம்பு 
மாயமல  பிண்ட  நோயிடுகு  ரம்பை 
தீநரிகள்  கங்கு  காகமிவை  தின்ப  ......  தொழியாதே 
தீதுளகு  ணங்க  ளேபெருகு  தொந்த 
மாயையில்வ  ளர்ந்த  தோல்தசையெ  லும்பு 
சேரிடுந  ரம்பு  தானிவைபொ  திந்து  ......  நிலைகாணா 
ஆயதுந  மன்கை  போகவுயி  ரந்த 
நாழிகையில்  விஞ்ச  ஊசிடுமி  டும்பை 
யாகியவு  டம்பு  பேணிநிலை  யென்று  ......  மடவார்பால் 
ஆசையைவி  ரும்பி  யேவிரக  சிங்கி 
தானுமிக  வந்து  மேவிடம  யங்கு 
மாழ்துயர்வி  ழுந்து  மாளுமெனை  யன்பு  ......  புரிவாயே 
மாயைவல  கஞ்ச  னால்விடவெ  குண்டு 
பார்முழுது  மண்ட  கோளமுந  டுங்க 
வாய்பிளறி  நின்று  மேகநிகர்  தன்கை  ......  யதனாலே 
வாரியுற  அண்டி  வீறொடுமு  ழங்கு 
நீரைநுகர்  கின்ற  கோபமொடெ  திர்ந்த 
வாரண  இரண்டு  கோடொடிய  வென்ற  ......  நெடியோனாம் 
வேயினிசை  கொண்டு  கோநிரைபு  ரந்து 
மேயல்புரி  செங்கண்  மால்மருக  துங்க 
வேலகிர  வுஞ்ச  மால்வரையி  டிந்து  ......  பொடியாக 
வேலைவிடு  கந்த  காவிரிவி  ளங்கு 
கார்கலிசை  வந்த  சேவகன்வ  ணங்க 
வீரைநகர்  வந்து  வாழ்பழநி  யண்டர்  ......  பெருமாளே. 
  • சீ(ழ்) உதிரம் எங்கும் ஏய் புழு நிரம்பும்
    சீழும் இரத்தமும் எங்கும் பொருந்தி, புழுக்கள் நிறைந்த,
  • மாய மல பிண்டம் நோய் இடு குரம்பை
    நிலை இல்லாத மலங்கள் நிறைந்த, நோய்களுக்கு இருப்பிடமாகிய (இந்த) உடலை,
  • தீ நரிகள் கங்கு காகம் இவை தின்பது ஒழியாதே
    நெருப்பும், நரிகளும், கழுகுகளும், காகங்களும் ஆகிய இவை உண்ணுவது நீங்காதோ?
  • தீது உள குணங்களே பெருகு தொந்த
    தீமையான குணங்களே வளர்கின்ற பந்தபாசம்
  • மாயையில் வளர்ந்த தோல் தசை எலும்பு சேரிடு
    மாயையில் வளர்ந்த தோல், சதை, எலும்பு சேர்ந்துள்ள
  • நரம்பு தான் இவை பொதிந்து நிலை காணா
    நரம்பு ஆகிய இவைகளும் நிறைந்து நிலை காண முடியாத
  • ஆயது நமன் கை போக உயிர் அந்த நாழிகையில்
    இப்படியான இந்த உடம்பு, யமன் கையில் உயிர் போனவுடன், அந்த நேரத்தில்
  • விஞ்ச ஊசிடும் இடும்பை ஆகிய உடம்பு பேணி
    மிகவும் கெட்டுப் போகும் துன்பம் நிறைந்த இவ்வுடலை விரும்பி,
  • நிலை என்று மடவார் பால் ஆசையை விரும்பியே
    அது நிலையானது என்று கருதி மாதர்களிடத்தே காமப் பற்றை வைத்து,
  • விரக சிங்கி தானும் மிக வந்து மேவிட மயங்கும்
    காம விஷம் மிகுதியாகச் சேர்வதால் மயக்கம் கொண்டு
  • ஆழ் துயர் விழுந்து மாளும் எனை அன்பு புரிவாயே
    ஆழ்ந்த துன்பக் கடலில் விழுந்து மடிகின்ற என் மீது அன்பு புரிந்தருளுக.
  • மாயை வல கஞ்சனால் விட வெகுண்டு
    மாயையில் வல்லவனாகிய கம்சனால் விடப்பட்டு கோபத்துடன் வந்து,
  • பார் முழுதும் அண்ட கோளமும் நடுங்க
    உலகம் முழுவதும், அண்ட கோளங்களும் நடுங்கும்படியாக
  • வாய் பிளறி நின்று
    வாய்விட்டு சத்தம் செய்துகொண்டு வந்து பயங்கரமாக நின்று,
  • மேக நிகர் தன் கை அதனாலே
    மேகம் போன்ற கருமையான தனது தும்பிக்கையால்
  • வாரி உற அண்டி வீறொடு முழங்கு
    எல்லாவற்றையும் வாரும்படியாக நெருங்கி கர்வத்துடன் முழக்கம் புரிந்து,
  • நீரை நுகர்கின்ற கோபமொடு எதிர்ந்த
    நீரை உண்ணும் கோபத்தோடு எதிர்த்து வந்த
  • வாரண இரண்டு கோடு ஓடிய வென்ற நெடியோனாம்
    (குவலயா பீடம் என்னும்) யானையின் இரண்டு கொம்புகளையும் ஒடித்து வென்ற நீண்ட வடிவை உடையவனும்,
  • வேயின் இசை கொண்டு கோ நிரை புரந்து
    புல்லாங்குழலின் இன்னிசையைக் கொண்டு பசுக் கூட்டங்களைக் காத்து
  • மேயல் புரி செம் கண் மால் மருக
    மேயவிட்ட சிவந்த கண்களை உடையவனும் ஆகிய திருமாலின் மருகனே,
  • துங்கவேல கிரவுஞ்ச மால் வரை இடிந்து பொடியாக
    பரிசுத்தமான வேலனே, கிரவுஞ்சம் என்ற பெரிய மலை இடிந்து பொடியாகும்படி,
  • வேலை விடு கந்த
    வேலைச் செலுத்திய கந்தவேளே,
  • காவிரி விளங்கு கார் கலிசை வந்த சேவகன் வணங்க
    காவிரி ஆற்றின் செழிப்புள்ள நகரமான நீர் சூழ்ந்த கலிசை என்ற ஊரில் வாழ்கின்ற வீரன்* உன்னைத் துதிக்க
  • வீரை நகர் வந்து வாழ் பழநி அண்டர் பெருமாளே.
    வீரை நகரில் எழுந்தருளியுள்ள பழனிப் பெருமாளே, தேவர்கள் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com