தனதன தனந்த தான தனதன தனந்த தான
தனதன தனந்த தான ...... தனதான
மலரணை ததும்ப மேக குழல்முடி சரிந்து வீழ
மணபரி மளங்கள் வேர்வை ...... யதனோடே
வழிபட இடங்க ணாட பிறைநுதல் புரண்டு மாழ்க
வனைகலை நெகிழ்ந்து போக ...... இளநீரின்
முலையிணை ததும்ப நூலின் வகிரிடை சுழன்று வாட
முகமுகமொ டொன்ற பாய ...... லதனூடே
முதுமயல் கலந்து மூழ்கி மகிழ்கினும் அலங்க லாடு
முடிவடிவொ டங்கை வேலு ...... மறவேனே
சிலைநுத லிளம்பெண் மோகி சடையழ கியெந்தை பாதி
திகழ்மர கதம்பொன் மேனி ...... யுமைபாலா
சிறுநகை புரிந்து சூரர் கிரிகட லெரிந்து போக
திகழயி லெறிந்த ஞான ......முருகோனே
கொலைமிக பயின்ற வேடர் மகள்வளி மணந்த தோள
குணவலர் கடம்ப மாலை ...... யணிமார்பா
கொடிமின லடைந்த சோதி மழகதிர் தவழ்ந்த ஞான
குலகிரி மகிழ்ந்து மேவு ...... பெருமாளே.
- மலர் அணை ததும்ப மேக குழல் முடி சரிந்து வீழ மண
பரிமளங்கள் வேர்வை அதனோடே வழி பட
மலர்ப் படுக்கை அசைந்து கலைய, மேகம் போன்ற கரிய கூந்தலின் முடி சரிந்து விழ, நறு மணங்கள் வேர்வையுடன் ஒன்றுபட, - இடம் கண் ஆட பிறை நுதல் புரண்டு மாழ்க வனை கலை
நெகிழ்ந்து போக இள நீரின் முலை இணை ததும்ப நூலின்
வகிர் இடை சுழன்று வாட
விசாலமான கண்கள் அசைய, பிறை போலும் நெற்றி புரண்டு குங்குமம் கலைய, அலங்காரமாய் அணிந்த ஆடை நெகிழ்ந்து போக, இளநீர் போன்ற மார்பகங்கள் இரண்டும் அசைய, நூலின் பிளவு போன்ற நுண்ணிய இடை சுழன்று வாட்டம் கொள்ள, - முக(ம்) முகமோடு ஒன்ற பாயல் அதனூடே முது மயல்
கலந்து மூழ்கி மகிழ்கினும்
முகம் முகத்தோடு பொருந்த, படுக்கை அணையில் பெரிய மோகச் செயலில் கலந்து முழுகி (நான்) இன்புற்று இருந்தாலும், - அலங்கல் ஆடு முடி வடிவொடு அம் கை வேலும் மறவேனே
மாலைகள் அசையும் திருமுடி முதலான உனது வடிவத்தையும் அழகிய திருக்கரத்தில் உள்ள வேலாயுதத்தையும் மறக்க மாட்டேன். - சிலை நுதல் இளம் பெண் மோகி சடை அழகி எந்தை பாதி
திகழ் மரகதம் பொன் மேனி உமை பாலா
வில் போன்ற நெற்றியை உடைய இளம் பெண், ஆசையைத் தருபவள், அழகிய சடையை உடையவள், என் தந்தையாகிய சிவபெருமானின் இடது பாகத்தில் விளங்கும் மரகதம் போல் பச்சை நிறத்து அழகிய உருவினளாகிய உமா தேவியின் குழந்தையே, - சிறு நகை புரிந்து சூரர் கிரி கடல் எரிந்து போக திகழ் அயில்
எறிந்த ஞான முருகோனே
புன்னகை செய்து, சூரனும், மலையும், கடலும் எரிந்து போக, கையிலே திகழ்ந்த வேலை எறிந்த ஞான முருகனே, - கொலை மிக பயின்ற வேடர் மகள் வ(ள்)ளி மணந்த தோள
குண அலர் கடம்ப மாலை அணி மார்பா
கொலைத் தொழிலை நன்றாகப் பயின்றிருந்த வேடர்கள் பெண்ணாகிய வள்ளி மணந்த தோளனே, நற் குணனே, கடப்ப மலர் மாலையை அணிந்த மார்பனே, - கொடி மி(ன்)னல் அடைந்த சோதி மழ கதிர் தவழ்ந்த ஞான
குல கிரி மகிழ்ந்து மேவு பெருமாளே.
மின்னல் கொடி போன்ற ஜோதியே, காலைக் கதிர் போல ஒளிவீசும் ஞானியே, (பழமுதிர்) சோலை மலையில் மகிழ்ந்து வீற்றிருக்கும் பெருமாளே.