திருப்புகழ் 132 கருகி அகன்று (பழநி)

தனதன தந்த தனதன தந்த
தனதன தந்த ...... தனதான
கருகிய  கன்று  வரிசெறி  கண்கள் 
கயல்நிக  ரென்று  ......  துதிபேசிக் 
கலைசுரு  ளொன்று  மிடைபடு  கின்ற 
கடிவிட  முண்டு  ......  பலநாளும் 
விரகுறு  சண்ட  வினையுடல்  கொண்டு 
விதிவழி  நின்று  ......  தளராதே 
விரைகமழ்  தொங்கல்  மருவிய  துங்க 
விதபத  மென்று  ......  பெறுவேனோ 
முருகக  டம்ப  குறமகள்  பங்க 
முறையென  அண்டர்  ......  முறைபேச 
முதுதிரை  யொன்ற  வருதிறல்  வஞ்ச 
முரணசுர்  வென்ற  ......  வடிவேலா 
பரிமள  இன்ப  மரகத  துங்க 
பகடித  வென்றி  ......  மயில்வீரா 
பறிதலை  குண்டர்  கழுநிரை  கண்டு 
பழநிய  மர்ந்த  ......  பெருமாளே. 
  • கருகி அகன்று வரி செறி கண்கள் கயல் நிகர் என்று துதி பேசி
    கருமை நிறம் படைத்து அகன்று, ரேகைகள் நிறைந்த கண்கள் கயல் மீன்களுக்கு ஒப்பானது என்று புகழ்ச்சிப் பேச்சுக்களைப் பேசி,
  • கலை சுருள் ஒன்று(ம்) மிடைபடுகின்ற கடி விடம் உண்டு
    (விலைமாதரின்) புடவையின் சுருளின் இடையில் அகப்பட்டு, கொடுமையான வாயூறல் என்னும் விஷத்தை உண்டு அனுபவித்து,
  • பல நாளும் விரகு உறு சண்ட வினை உடல் கொண்டு விதி வழி நின்று தளராதே
    பல நாட்கள் வஞ்சனையைச் செய்யும் கொடிய வினையாலாகிய உடம்பைச் சுமந்து, விதி போகின்ற வழியே நின்று நான் தளர்ந்து விடாமல்,
  • விரை கமழ் தொங்கல் மருவிய துங்க இத பதம் என்று பெறுவேனோ
    வாசனை வீசுகின்ற மாலைகள் பொருந்திய பரிசுத்தமான, நன்மை செய்யும் திருவடியை என்று பெறுவேனோ?
  • முருக கடம்ப குறமகள் பங்க முறை என அண்டர் முறை பேச
    முருகனே, கடம்பனே, குற மகள் வள்ளியின் பங்கனே என்று ஓலம் செய்து தேவர்கள் முறையிட,
  • முது திரை ஒன்ற வரு திறல் வஞ்ச முரண் அசுர் வென்ற வடிவேலா
    பழைய கடல் போல பரந்து வருகின்ற, வலிமையும் வஞ்சகமும் கொண்ட பகைவர்களாகிய அசுரர்களை வெற்றி கொண்ட வடிவேலனே,
  • பரிமள இன்ப மரகத துங்க பகடு இதம் வென்றி மயில் வீரா
    நறுமணம் போல் இன்பத்தைத் தருவதும், பச்சை நிறமானதும், பரிசுத்தமானதும், வலிமையும் நன்மையும் உடையதும் ஆகிய, வெற்றி கொண்ட மயில் மீது அமர்ந்த வீரனே,
  • பறி தலை குண்டர் கழு நிரை கண்டு பழநி அமர்ந்த பெருமாளே.
    தலை மயிரைப் பறிக்கின்ற இழிந்தோராகிய சமணர்களை (திருஞானசம்பந்தராக வந்து) கழு ஏறச் செய்து, பழனி மலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com