திருப்புகழ் 131 கரியிணை கோடென (பழநி)

தனதனத் தானனத் தனதனத் தானனத்
தனதனத் தானனத் ...... தனதான
கரியிணைக்  கோடெனத்  தனமசைத்  தாடிநற் 
கயல்விழிப்  பார்வையிற்  ......  பொருள்பேசிக் 
கலையிழுத்  தேகுலுக்  கெனநகைத்  தேமயற் 
கலதியிட்  டேயழைத்  ......  தணையூடே 
செருமிவித்  தாரசிற்  றிடைதுடித்  தாடமற் 
றிறமளித்  தேபொருட்  ......  பறிமாதர் 
செயலிழுக்  காமலிக்  கலியுகத்  தேபுகழ்ச் 
சிவபதத்  தேபதித்  ......  தருள்வாயே 
திரிபுரக்  கோலவெற்  பழல்கொளச்  சீர்நகைச் 
சிறிதருட்  டேவருட்  ......  புதல்வோனே 
திரைகடற்  கோவெனக்  குவடுகட்  டூள்படத் 
திருடர்கெட்  டோடவிட்  ......  டிடும்வேலா 
பரிமளப்  பாகலிற்  கனிகளைப்  பீறிநற் 
படியினிட்  டேகுரக்  ......  கினமாடும் 
பழநியிற்  சீருறப்  புகழ்குறப்  பாவையைப் 
பரிவுறச்  சேர்மணப்  ......  பெருமாளே. 
  • கரி இணைக் கோடு எனத் தனம் அசைத்து ஆடி நல் கயல் விழிப் பார்வையில் பொருள் பேசி
    யானைகளின் இரு கொம்புகள் என்னும்படி உள்ள மார்பகங்களை அசைத்து ஆடி, நல்ல கயல் மீன் போன்ற கண்களின் பார்வை கொண்டே (தமக்குக் கொடுக்க வேண்டிய) பொருள் அளவைப் பேசி,
  • கலை இழுத்தே குலுக்கென நகைத்தே மயல் கலதி இட்டே அழைத்து அணை ஊடே செருமி
    ஆடையை இழுத்துவிட்டும், குலுக் என்ற ஒலியுடன் சிரித்து மயக்கமாகிய குழப்பத்தினைத் தந்தும், (வந்தவரை) அழைத்துப் படுக்கையில் நெருங்கியும்,
  • வித்தார சிற்றிடை துடித்து ஆட மல் திறம் அளித்தே பொருள் பறி மாதர் செயல் இழுக்காமல் இக் கலி யுகத்தே புகழ்ச் சிவ பதத்தே பதித்து அருள்வாயே
    அலங்கரித்த சிற்றிடை துடித்து அசைய, நிரம்பத் தங்கள் திறமைகளைக் காட்டி, பொருளைப் பறிக்கின்ற விலைமாதர்களின் சூழ்ச்சிகள் என்னைக் கவராத வண்ணம், இந்தக் கலி யுகத்தில் புகழப்படுகின்ற சிவ பதவியில் என்னைப் பொருந்த வைத்து அருள்வாயாக.
  • திரி புரக் கோல வெற்பு அழல் கொளச் சீர் நகை சிறிது அருள் தே(வு) அருள் புதல்வோனே
    திரிபுரம் எனப்படும் அழகிய மலை போன்ற நகரங்கள் எரியும்படி, அருமையான புன்னகையைச் சிறிது அருளிய தேவராகிய சிவபெருமான் பெற்ற மகனே,
  • திரை கடல் கோ எனக் குவடுகள் தூள்படத் திருடர் கெட்டு ஓட விட்டிடும் வேலா
    அலைகடல் கோவென்று கதற, கிரவுஞ்ச மலையும் குலமலைகள் ஏழும் தூளாகும்படியும், கள்வர்களாகிய அசுரர்கள் அழிந்து எங்கெங்கும் ஓடும்படியும் வேலை விட்டு எய்த வேலனே,
  • பரிமளப் பாகலின் கனிகளைப் பீறி நல் படியினில் இட்டே குரக்கினம் ஆடும்
    வாசனை வீசும் பலாப் பழங்களைக் கீறி, நல்ல (மலைப்) படிகளில் போட்டு குரங்கின் கூட்டங்கள் விளையாடும்
  • பழநியில் சீர் உறப் புகழ் குறப் பாவையை பரிவு உறச் சேர் மணப் பெருமாளே.
    பழனியில் சிறப்பாக விளங்கி, புகழப்படும் குறப் பெண்ணாகிய வள்ளியை அன்புடன் தழுவிய மணவாளப் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com