திருப்புகழ் 1300 புத்தகத்து ஏட்டில் (பொதுப்பாடல்கள்)

தத்தனத் தாத்தத் தாத்த ...... தனதான
புத்தகத்  தேட்டிற்  றீட்டி  ......  முடியாது 
பொற்புறக்  கூட்டிக்  காட்டி  ......  யருள்ஞான 
வித்தகப்  பேற்றைத்  தேற்றி  ......  யருளாலே 
மெத்தெனக்  கூட்டிக்  காக்க  ......  நினைவாயே 
தத்தைபுக்  கோட்டிக்  காட்டி  ......  லுறைவாளைச் 
சற்கரித்  தேத்திக்  கீர்த்தி  ......  பெறுவோனே 
கைத்தலத்  தீக்குப்  பார்த்து  ......  நுழையாத 
கற்பகத்  தோப்புக்  காத்த  ......  பெருமாளே. 
  • புத்தகத்து ஏட்டில் தீட்டி முடியாது
    புத்தகங்களிலும் ஏட்டிலும் எழுத முடியாத பொருளை,
  • பொற்புறக் கூட்டிக் காட்டி
    அழகு பொருந்தக் கூட்டுவித்துக் காட்டியும்,
  • அருள்ஞான வித்தகப் பேற்றைத் தேற்றி
    அருள்மயமான ஞான நன்மைப் பாக்கியத்தை எனக்குத் தெளிய வைத்தும்,
  • அருளாலே மெத்தெனக் கூட்டிக் காக்க நினைவாயே
    உன் திருவருளால் பக்குவமாக எனக்கு அதைக் கூட்டிவைத்தும் என்னைப் பாதுகாக்க நீ நினைத்தருள வேண்டுகிறேன்.
  • தத்தை புக்கு ஓட்டிக் காட்டில் உறைவாளை
    கிளிகளை அவை தினைப்புனத்தில் இருக்கும் இடம் தேடிச் சென்று விரட்டி அந்தக் காட்டில் வசித்தவளாம் வள்ளியை
  • சற்கரித்து ஏத்திக் கீர்த்தி பெறுவோனே
    உபசரித்து, பாராட்டி, பேரும் புகழும் பெற்றவனே,
  • கைத்தலத்து ஈக் குப்பு ஆர்த்து நுழையாத
    ஈக்கள், வண்டுகளின் கும்பல் ஆரவாரத்துடன் ஒலி செய்து உள்ளே புகமுடியாதபடி நெருக்கமான
  • கற்பகத் தோப்புக் காத்த பெருமாளே.
    கற்பகத் தோட்டங்கள் நிறைந்த தேவலோகத்தைக் காத்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com