திருப்புகழ் 1237 கோகனகமுகிழ்த்த (பொதுப்பாடல்கள்)

தான தனன தத்த தான தனன தத்த
தான தனன தத்த ...... தனதான
கோக  னகமு  கிழ்த்த  போக  புளகி  தத்த 
கோடு  தலைகு  லைத்த  ......  முலையாலே 
கூட  வரவ  ழைக்கு  மாடு  குழைய  டர்த்த 
நீடி  யகுவ  ளைக்கண்  ......  மடமானார் 
ஆக  முறவ  ணைத்து  காசை  யபக  ரித்து 
மீள  விதழ்க  டிப்ப  ......  தறியாதே 
ஆசை  யதுகொ  ளுத்து  மால  மதுகு  டித்த 
சேலில்  பரித  விப்ப  ......  தினியேனோ 
மாக  நதிம  திப்ர  தாப  மவுலி  யர்க்கு 
சாவி  யதுவோ  ரர்த்த  ......  மொழிவோனே 
வாகு  வலைய  சித்ர  ஆறி  ருபுய  வெற்பில் 
வாழ்வு  பெறுகு  றத்தி  ......  மணவாளா 
வேக  வுரக  ரத்ந  நாக  சயன  சக்ர 
மேவி  மரக  தத்தின்  ......  மருகோனே 
வீசு  திரைய  லைத்த  வேலை  சுவற  வெற்றி 
வேலை  யுருவ  விட்ட  ......  பெருமாளே. 
  • கோகனகம் முகிழ்த்த போக(ம்) புளகிதத்த கோடு தலை குலைத்த முலையாலே
    தாமரை மொட்டு மலர்ந்தது போன்றதாய், காம இன்பத்தினால் புளகாங்கிதம் கொண்டதாய், மலையின் சிகரத்தையும் வென்ற மார்பகத்தால்,
  • கூட வர அழைக்கு(ம்) மாடு குழை அடர்த்த நீடிய குவளைக் கண் மடமானார்
    தங்களுடன் இணைவதற்கு அழைப்பு விடுப்பவை போன்றுள்ளவையும், பொன்னாலாகிய குண்டலத்தை மோதும்படி நெருங்கி நீண்டுள்ளவையும், குவளை மலர் போன்றவையுமான கண்களை உடைய இளம் பொது மகளிருடைய
  • ஆகம் உற அணைத்து காசை அபகரித்து மீள இதழ் கடிப்பது அறியாதே
    உடலை இறுக்கி அணைத்தும், பொருளை அபகரித்தும், மீண்டும் வாயிதழைக் கடிக்கும் வஞ்சக எண்ணத்தைத் தெரிந்து கொள்ளாமல்,
  • ஆசை அது கொளுத்தும் ஆலம் அது குடித்த சேலில் பரிதவிப்பது இனி ஏனோ
    காம இச்சையை மிக்க எழுப்பும் ஆலகால விஷத்தை உண்ட சேல் மீன் போல வருந்துவது இன்னமும் வேண்டுமோ? (போதும் போதும் என்றபடி)
  • மாக நதி மதி ப்ரதாப மவுலியர்க்கு உசாவியது ஓர் அர்த்தம் மொழிவோனே
    ஆகாய நதியாகிய கங்கை, சந்திரன், (இவற்றை அணிந்துள்ள) புகழைக் கொண்ட சிவபெருமானுக்கு, அவர் கேட்டறிந்த ஒப்பற்ற ஒரு பொருளை (பிரணவ மந்திரத்தை) உபதேசித்தவனே,
  • வாகுவலைய(ம்) சித்ர ஆறு இரு புய வெற்பில் வாழ்வு பெறு குறத்தி மணவாளா
    தோளணி பூண்டதும், அழகிய பன்னிரண்டு மலை போன்றதுமான உனது தோள்களில் வாழ்வின் இன்பத்தைப் பெற்ற குறப்பெண்ணாகிய வள்ளியின் கணவனே,
  • வேக உரக ரத்ந நாக சயன சக்ரம் ஏவி மரகதத்தின் மருகோனே
    விஷமுள்ள சர்ப்பமாகிய, ரத்தின மணி கொண்ட ஆதிசேஷன் மீது பள்ளி கொள்பவரும், சக்ராயுதம் ஏந்தியவரும் ஆன பச்சை நிறம் கொண்ட திருமாலின் மருகோனே,
  • வீசு திரை அலைத்த வேலை சுவற வெற்றி வேலை உருவ விட்ட பெருமாளே.
    வீசுகின்ற அலைகள் அலைக்கும் கடல் வற்றும்படி வெற்றி வேலை ஊடுருவச் செல்ல விட்ட பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com