திருப்புகழ் 1236 குறைவது இன்றி (பொதுப்பாடல்கள்)

தனன தந்த தத்த தனன தந்த தத்த
தனன தந்த தத்த ...... தனதான
குறைவ  தின்றி  மிக்க  சலமெ  லும்பு  துற்ற 
குடிலி  லொன்றி  நிற்கு  ......  முயிர்மாயம் 
குலைகு  லைந்து  தெர்ப்பை  யிடைநி  னைந்து  நிற்ப 
கொடிய  கொண்ட  லொத்த  ......  வுருவாகி 
மறலி  வந்து  துட்ட  வினைகள்  கொண்ட  லைத்து 
மரண  மென்ற  துக்க  ......  மணுகாமுன் 
மனமி  டைஞ்ச  லற்று  னடிநி  னைந்து  நிற்க 
மயிலில்  வந்து  முத்தி  ......  தரவேணும் 
அறுகு  மிந்து  மத்த  மலையெ  றிந்த  அப்பு 
மளிசி  றந்த  புட்ப  ......  மதுசூடி 
அருந  டஞ்செ  யப்ப  ரருளி  ரங்கு  கைக்கு 
அரிய  இன்சொல்  செப்பு  ......  முருகோனே 
சிறுகு  லந்த  னக்கு  ளறிவு  வந்து  தித்த 
சிறுமி  தன்த  னத்தை  ......  யணைமார்பா 
திசைமு  கன்தி  கைக்க  அசுர  ரன்ற  டைத்த 
சிறைதி  றந்து  விட்ட  ......  பெருமாளே. 
  • குறைவது இன்றி மிக்க சலம் எலும்பு (அ)து உற்ற குடிலில் ஒன்றி நிற்கும் உயிர் மாயம்
    குறைவு இல்லா வகையில், நிறைய நீர், எலும்பு முதலியவை நெருங்கிய வீடாகிய உடலில் பொருந்தி இருக்கும் உயிர் என்கின்ற மாயப் பொருள்,
  • குலை குலைந்து தெர்ப்பை இடை நினைந்து நிற்ப
    நிலை கெட்டு, தெர்ப்பைப் படுக்கையில் (சுடுகாட்டுக்கு அனுப்புவதற்காக) கிடத்த வேண்டும் என்று (உறவினர்கள்) நினைத்து நிற்கும் போது,
  • கொடிய கொண்டல் ஒத்த உருவாகி மறலி வந்து துட்ட வினைகள் கொண்டு அலைத்து
    பொல்லாதவனாய் கரு மேகம் நிகரான உருவத்துடன் யமன் வந்து கொடிய செயல்களைச் செய்து வருத்தி,
  • மரணம் என்ற துக்கம் அணுகா முன்
    இறப்பு என்ற துயரம் என்னைக் கூடுவதற்கு முன்பாக,
  • மனம் இடைஞ்சல் அற்று உன் அடி நினைந்து நிற்க மயிலில் வந்து முத்தி தர வேணும்
    நான் மன வேதனைகள் இல்லாமல் உனது திருவடியைத் தியானித்து நிற்க, மயிலின் மீது ஏறி வந்து வீட்டுப் பேற்றைத் தர வேண்டும்.
  • அறுகும் இந்து மத்தம் அலை எறிந்த அப்பும் அளி சிறந்த புட்பம் அது சூடி
    அறுகு, பிறைச் சந்திரன், ஊமத்த மலர், அலைகள் வீசும் கங்கை நீர், வண்டுகள் நிரம்பி மொய்க்கும் மலர்கள் இவைகளைச் சூடிக் கொண்டு,
  • அரு நடம் செய் அப்பர் அருள் இரங்குகைக்கு அரிய இன் சொல் செப்பு முருகோனே
    அருமையான ஊழிக் கூத்தாம் நடனத்தைச் செய்த தந்தையாகிய சிவ பெருமான் உபதேசப் பொருளை அருள்வாயாக என்று உன்னை வேண்டி இரங்கவும், (அதற்கு இசைந்து) அருமையான இனிய பிரணவ மந்திரத்தை அவருக்கு உபதேசித்த முருகனே,
  • சிறு குலம் தனக்குள் அறிவு வந்து உதித்த சிறுமி தன் தனத்தை அணை மார்பா
    கீழான குறக் குலத்தில் ஞான நிலை கூடித் தோன்றிய சிறுமியாகிய குறப் பெண்ணின் மார்புகளை அணைந்த திருமார்பனே,
  • திசை முகன் திகைக்க அசுரர் அன்று அடைத்த சிறை திறந்து விட்ட பெருமாளே.
    பிரமதேவன் திகைக்குமாறு அசுரர்கள் அந்நாளில் தேவர்களை அடைத்துவைத்த சிறைகளைத் திறந்துவிட்டு, தேவர்களை விடுவித்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com