தன்னன தனதன தன்னன தனதன
தன்னன தனதன ...... தனதான
கன்னியர் கடுவிட மன்னிய கயலன
கண்ணிலு மிருகன ...... தனமீதுங்
கன்மைகள் மருவிய மன்மத னுருவிலி
மென்மைகொ ளுருவிலு ...... மயலாகி
இன்னல்செய் குடிலுட னின்னமு முலகினி
லிந்நிலை பெறவிங ...... னுதியாதே
யெண்ணுமு னடியவர் நண்ணிய பதமிசை
யென்னையும் வழிபட ...... விடவேணும்
பொன்னவ மணிபயில் மன்னவ புனமற
மின்முலை தழுவிய ...... புயவீரா
புண்ணிய முளபல விண்ணவர் தொழுமுதல்
எண்மலை யொடுபொரு ...... கதிர்வேலா
தன்னிறை சடையிறை யென்முனி பரவரு
இன்னிசை யுறுதமிழ் ...... தெரிவோனே
தண்ணளி தருமொரு பன்னிரு விழிபயில்
சண்முக மழகிய ...... பெருமாளே.
- கன்னியர் கடு விட(ம்) மன்னிய கயல் அன கண்ணிலும் இரு
கன தனம் மீதும்
பெண்களின் கடுமையான விஷம் பொருந்திய, கயல் மீன் போன்ற கண்களிலும், இரு மார்பகங்கள் மீதும், - கன்மைகள் மருவிய மன்மதன் உருவு இலி மென்மை கொள்
உருவிலும் மயலாகி
கல் போன்று உறுதியான வேலைத் திறம் பொருந்திய மன்மதன், உருவம் இல்லாதவன், (மலரம்பை எய்வதானால்) மென்மை சேர்ந்த அப்பெண்களின் உருவத்தின் மீதும் காம மயக்கம் கொண்டு, - இன்னல் செய் குடிலுடன் இன்னமும் உலகினில் இந்நிலை
பெற இ(ங்)ஙன் உதியாதே
துன்பம் ஏற்படுகின்ற வீடாகிய இந்த உடலுடன் இன்னமும் இந்த உலகிடையே இதே அவல நிலையை அடையும்படி, இவ்வாறு நான் பிறவாமல், - எண்ணும் உன் அடியவர் நண்ணிய பதம் மிசை என்னையும்
வழி பட விடவேணும்
உன்னைத் தியானிக்கும் அடியார்கள் அடைந்துள்ள உனது திருவடியின் மீது வழிபாடு செய்யுமாறு என்னையும் அந்த நன்னெறியில் செலுத்த வேண்டுகிறேன். - பொன் நவ மணி பயில் மன்னவ புன மற மின் முலை தழுவிய
புயவீரா
பொன்னாலாகிய நவ மணி* ஆபரணங்களை அணிந்துள்ள அரசே, தினைப் புனத்தில் உள்ள வேட்டுவக் குலத்து ஒளி தரும் (வள்ளியின்) மார்பைத் தழுவிய புயங்களைக் கொண்ட வீரனே, - புண்ணியம் உள பல விண்ணவர் தொழும் முதல் எண்
மலையொடு பொரு கதிர்வேலா
புண்ணியம் செய்து சுவர்க்கத்தில் வாழும் பல தேவர்கள் தொழுது நிற்கும் முதல்வனே, கிரவுஞ்ச கிரி, (அசுரருக்கு அரணான) எழு கிரி ஆக எட்டு மலைகளுடன் சண்டை செய்த, ஒளி வீசும் வேலை உடையவனே, - தன் இறை சடை இறை என் முனி பரவ அரு இன்னிசை உறு
தமிழ் தெரிவோனே
தனக்குத் தானே தலைவனான, சடையை உடைய சிவபெருமான் என்று சொல்லப்படும் கடவுளைத் துதிப்பதற்கு அருமையான இனிய இசை அமைந்த தமிழ் மறையை (தேவாரத்தை, திருஞானசம்பந்தராக வந்து) உலகோர் தெரியச் சொன்னவனே, - தண் அளி தரும் ஒரு பன்னிரு விழிபயில் சண்முகம் அழகிய
பெருமாளே.
குளிர்ந்த கருணையைப் பாலிக்கின்ற ஒப்பற்ற பன்னிரண்டு கண்களைக் கொண்ட ஆறு திருமுகனே, அழகு வாய்ந்த பெருமாளே.