திருப்புகழ் · 1232கள்ள மீனச் சுறவு (பொதுப்பாடல்கள்)

தய்யனா தத்ததன தய்யனா தத்ததன
தய்யனா தத்ததன ...... தனதான

Nangalappa Sharanam

கள்ளமீ னச்சுறவு கொள்ளுமீ னற்பெரிய
கல்விவீ றக்கரிய ...... மனமாகுங்
கல்விடா துற்றதிசை சொல்விசா ரத்திசைய
மெய்கள்தோ ணிப்பிறவி ...... யலைவேலை
மெள்ளஏ றிக்குரவு வெள்ளிலார் வெட்சிதண
முல்லைவே ருற்பலமு ...... ளரிநீபம்
வில்லநீள் பொற்கனக வல்லிமே லிட்டுனது
சொல்லையோ திப்பணிவ ...... தொருநாளே
துள்ளுமா னித்தமுனி புள்ளிமான் வெற்புதவு
வள்ளிமா னுக்குமயல் ...... மொழிவோனே
தொல்வியா ளத்துவளர் செல்வர்யா கத்தரையன்
எல்லைகா ணற்கரியர் ...... குருநாதா
தெள்ளுநா தச்சுருதி வள்ளல்மோ லிப்புடைகொள்
செல்வனே முத்தமிணர் ...... பெருவாழ்வே
தெய்வயா னைக்கிளைய வெள்ளையா னைத்தலைவ
தெய்வயா னைக்கினிய ...... பெருமாளே.

பத உரை

  • கள்ள மீனச் சுறவு கொள்ளும் மீனம் பெரிய கல்வி வீற
    கள்ளத் தந்திரத்தை உடைய சுறாமீன் பல மீன்களை உண்ணும். (அதுபோல) பெரிய புலவர்களை வெல்லக் கூடிய நல்ல பெரிய கல்வி ஞானமானது எனக்கு மேம்பட்டு விளங்குவதற்காக,
  • கரிய மனமாகும் கல் விடாது உற்ற திசை சொல் விசாரத்து இசைய
    அஞ்ஞான மனமாகிய கல்லை அது போகும் வழியில் விடாது ஒரு நிலைப்படுத்தி, நாலு திசைகளிலும் பொருந்தி உள்ள பெரியோர்கள் சொல்லியுள்ள ஆராய்ச்சியின் பயனை அடையச் செய்ய,
  • மெய்கள் தோணிப் பிறவி அலை வேலை மெள்ள ஏறி
    உண்மைப் பொருள்கள் தோன்றி விளங்க, பிறவியாகிய அலை கடலை மெதுவாகக் கடந்து செல்ல (என்ன செய்யவேண்டும் என்றால்),
  • குரவு வெள்ளில் ஆர் வெட்சி தண் அ(ம்) முல்லை வேர் உற்பலம் முளரி நீபம் வில்ல(ம்)
    குராமலர், விளா இலை, ஆத்தி, வெட்சி, குளிர்ச்சி பொருந்திய முல்லை, குறு வேர், நீலோற்பல மலர், தாமரை, கடம்பு, வில்வம் முதலியவற்றை
  • நீள் பொன் கனகம் அல்லி மேல் இட்டு உனது சொல்லை ஓதிப் பணிவது ஒரு நாளே
    பெரியதும், அழகுள்ளதும், பொன் போல் ஒளி வீசுவதுமான, அல்லிமலர் போன்ற உனது திருவடியின் மீது இட்டு, உனது புகழை உரைத்து உன்னைப் பணிவதுமான ஒரு நாள் எனக்குக் கிடைக்குமா?
  • துள்ளும் மால் நித்த முனி புள்ளி மான் வெற்பு உதவு வள்ளி மானுக்கு மயல் மொழிவோனே
    வீறிட்டு எழும் ஆசைகளை ஒழித்த சிவ முனிவர் தமக்கும் புள்ளி மானுக்கும் வள்ளி மலையில் பிறந்த மான் போன்ற வள்ளி நாயகியிடம் காதல் மொழிகளைப் பேசியவனே,
  • தொல் வியாளத்து வளர் செல்வர் யாகத்து அரையன் எல்லை காணற்கு அரியர் குருநாதா
    பழமையான பாம்பாகிய ஆதிசேஷன் மீது கண் வளரும் செல்வராகிய திருமாலும், வேள்வி நாயகனான மகபதி இந்திரனும் எல்லையே காண முடியாதவராகி நின்ற சிவபெருமானுக்கு குரு நாதனே,
  • தெள்ளு நாதச் சுருதி வள்ளல் மோலிப் புடை கொள் செல்வனே முத்தமி(ழ்)ணர் பெரு வாழ்வே
    தெளிவான நாதத்துடன் வேதங்களை ஓதும் பிரமனுடைய தலையைக் குட்டிய செல்வனே, முத்தமிழும் வல்ல புலவர்களின் பெருவாழ்வே,
  • தெய்வ யானைக்கு இளைய வெள்ளை யானைத் தலைவ தெய்வ யானைக்கு இனிய பெருமாளே.
    தெய்வ யானையாகிய விநாயகப் பெருமானுக்கு இளையவனே, வெள்ளை யானையாகிய ஐராவதத்துக்குத் தலைவனே, தேவயானைக்கு இன்பம் தரும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout