திருப்புகழ் 123 ஒருபொழுதும் இருசரண (பழநி)

தனதனன தனதனன தானத் தானத் ...... தனதான
தனதனன தனதனன தானத் தானத் ...... தனதான
ஒருபொழுது  மிருசரண  நேசத்  தேவைத்  ......  துணரேனே 
உனதுபழ  நிமலையெனு  மூரைச்  சேவித்  ......  தறியேனே 
பெருபுவியி  லுயர்வரிய  வாழ்வைத்  தீரக்  ......  குறியேனே 
பிறவியற  நினைகுவனெ  னாசைப்  பாடைத்  ......  தவிரேனோ 
துரிதமிடு  நிருதர்புர  சூறைக்  காரப்  ......  பெருமாளே 
தொழுதுவழி  படுமடியர்  காவற்  காரப்  ......  பெருமாளே 
விருதுகவி  விதரணவி  நோதக்  காரப்  ......  பெருமாளே 
விறன்மறவர்  சிறுமிதிரு  வேளைக்  காரப்  ......  பெருமாளே. 
  • ஒருபொழுதும்
    ஒரு வேளை கூட
  • இருசரண
    உனது இரண்டு திருவடிகளிலும்
  • நேசத் தேவைத்து
    அன்பையே வைத்து
  • உணரேனே
    அறிய மாட்டேன்.
  • உனது பழநி மலையெனும் ஊரை
    உன் பழநிமலை என்னும் பதியினை
  • சேவித் தறியேனே
    வணங்கி அறியமாட்டேன்.
  • பெருபுவியில் உயர்வரிய
    இப்பெரிய பூமியில் உயர்ந்ததும், அருமையானதுமான
  • வாழ்வைத் தீரக்
    வாழ்க்கையை முற்றுமாக
  • குறியேனே
    யான் குறிக்கொள்ளவில்லை.
  • பிறவியற நினைகுவன்
    (இவ்வளவு குறைகளிருந்தும்) பிறவி ஒழியவேண்டும் என்று நினைக்கிறேன்.
  • என்ஆசைப் பாடைத் தவிரேனோ
    என் ஆசைப்பாடுகளை ஒழிக்க மாட்டேனோ?
  • துரிதமிடு
    பாவத் தொழில்களையே செய்யும்
  • நிருதர்புர
    அசுரர்களின் ஊர்களை
  • சூறைக் காரப் பெருமாளே
    சூறாவளி போல் வீசியடித்த பெருமாளே,
  • தொழுதுவழி படுமடியர்
    உனை வணங்கி வழிபடுகின்ற அடியார்களுக்கு
  • காவற் காரப் பெருமாளே
    காவற்காரனாக இருந்து உதவும் பெருமாளே,
  • விருதுகவி விதரண
    வெற்றிக் கவிகளை உலகுக்கு உதவிய
  • விநோதக் காரப் பெருமாளே
    அற்புத மூர்த்தியாகிய (ஞானசம்பந்தப்)* பெருமாளே,
  • விறன் மறவர் சிறுமி
    வீரம் வாய்ந்த குறவர்களின் மகள் வள்ளிக்கு
  • திருவேளைக் காரப் பெருமாளே.
    தக்க சமயத்தில் காவலாயிருந்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com