திருப்புகழ் 122 உலகபசு பாச (பழநி)

தனதனன தான தந்த ...... தனதான
தனதனன தான தந்த ...... தனதான
உலகபசு  பாச  தொந்த  ......  மதுவான 
உறவுகிளை  தாயர்  தந்தை  ......  மனைபாலர் 
மலசலசு  வாச  சஞ்ச  ......  லமதாலென் 
மதிநிலைகெ  டாம  லுன்ற  ......  னருள்தாராய் 
சலமறுகு  பூளை  தும்பை  ......  யணிசேயே 
சரவணப  வாமு  குந்தன்  ......  மருகோனே 
பலகலைசி  வாக  மங்கள்  ......  பயில்வோனே 
பழநிமலை  வாழ  வந்த  ......  பெருமாளே. 
  • உலகபசு பாச தொந்தம் அதுவான
    உலகத்தில் உயிர், பாசம் இவை சம்பந்தப்பட்ட
  • உறவுகிளை தாயர் தந்தை மனைபாலர்
    உற்றோரும், சுற்றத்தாரும், தாய், தந்தை, மனைவி, மக்கள்,
  • மலசல சுவாச சஞ்சலம் அதால்
    மல, மூத்திர, மூச்சு முதலிய உபாதைகளால்
  • என் மதிநிலை கெடாமல்
    எனது புத்திநிலை கெடாதவாறு
  • உன்றன் அருள்தாராய்
    உனது திருவருளைத் தந்தருள்வாயாக.
  • சலம் அறுகு பூளை தும்பை
    கங்கை நீர், அறுகம்புல், பூளைச்செடியின் பூ, தும்பைப் பூ
  • அணிசேயே
    இவைகளை அணியும் சிவபெருமானின் குமாரனே,
  • சரவணபவா முகுந்தன் மருகோனே
    சரவணபவனே, திருமாலின் மருமகனே,
  • பலகலை சிவாகமங்கள் பயில்வோனே
    பல கலைகளாலும், சிவாகமங்களாலும் புகழப்படுவோனே,
  • பழநிமலை வாழ வந்த பெருமாளே.
    பழனிமலையில் வீற்றிருக்கும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com