தத்தத்தத் தத்தத் தனதன
தத்தத்தத் தத்தத் தனதன
தத்தத்தத் தத்தத் தனதன ...... தனதான
மைக்குக்கைப் புக்கக் கயல்விழி
யெற்றிக்கொட் டிட்டுச் சிலைமதன்
வர்க்கத்தைக் கற்பித் திடுதிற ...... மொழியாலே
மட்டிட்டுத் துட்டக் கெருவித
மிட்டிட்டுச் சுற்றிப் பரிமள
மச்சப்பொற் கட்டிற் செறிமல ...... ரணைமீதே
புக்குக்கைக் கொக்கப் புகுமொரு
அற்பச்சிற் றிற்பத் தெரிவையர்
பொய்க்குற்றுச் சுற்றித் திரிகிற ...... புலையேனைப்
பொற்பித்துக் கற்பித் துனதடி
அர்ச்சிக்கச் சற்றுக் க்ருபைசெய
புத்திக்குச் சித்தித் தருளுவ ...... தொருநாளே
திக்குக்குத் திக்குத் திகுதிகு
டுட்டுட்டுட் டுட்டுட் டுடுடுடு
தித்தித்தித் தித்தித் திதியென ...... நடமாடுஞ்
சித்தர்க்குச் சுத்தப் பரமநல்
முத்தர்க்குச் சித்தக் க்ருபையுள
சித்தர்க்குப் பத்தர்க் கருளிய ...... குருநாதா
ஒக்கத்தக் கிட்டுத் திரியசுர்
முட்டக்கொட் டற்றுத் திரிபுர
மொக்கக்கெட் டிட்டுத் திகுதிகு ...... வெனவேக
உற்பித்துக் கற்பித் தமரரை
முற்பட்டக் கட்டச் சிறைவிடு
மொட்குக்டக் கொற்றக் கொடியுள ...... பெருமாளே.
- மைக்குக் கைப் புக்கக் கயல்விழி எற்றிக் கொட்டிட்டுச்
சிலைமதன் வர்க்கத்தைக் கற்பித்திடு திறமொழியாலே
மட்டிட்டு
மையைக் கயல்மீன் போன்ற கண்களில் கொட்டிப் பரப்பி பூசிக்கொண்டு, கரும்புவில் ஏந்திய மன்மதனின் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட ஆண்களுக்கு காமபாடம் சொல்லிக் கொடுக்கும் சாமர்த்தியமான பேச்சாலே தேன் போல இனிக்கச் செய்து, - துட்டக் கெருவிதம் இட்டிட்டுச் சுற்றிப் பரிமள மச்சப் பொற்
கட்டில் செறிமலர் அணைமீதே புக்குக் கைக்கு ஒக்கப்
புகுமொரு அற்பச் சிற்றிற்பத் தெரிவையர்
துஷ்டத்தனமும், கர்வமும் கலந்த பேச்சுக்களை இடையிடையே பேசிப்பேசி, சுற்றி வளைத்துக் கட்டிக்கொண்டு, நறுமணம் மிக்க மஞ்சம் எனப்படும் அழகிய கட்டிலின் மேல் நிறைந்த மலர்ப் படுக்கையின் மீது, கையிலிருந்த பொருளுக்குத் தக்கபடி மனத்தைச் செலுத்தும், இழிவான சிற்றின்பப் போகத்தைத் தரும் விலைமாதர்களின் - பொய்க்குற்றுச் சுற்றித் திரிகிற புலையேனைப் பொற்பித்துக்
கற்பித்து உனதடி அர்ச்சிக்கச் சற்றுக் க்ருபை செய புத்திக்குச்
சித்தித்து அருளுவது ஒருநாளே
பொய்யில் அகப்பட்டு, சுற்றித் திரிகின்ற சண்டாளனாகிய என்னைப் பொலிவு உண்டாக்கி உபதேச மொழிகளைப் போதித்து, உனது திருவடியை அர்ச்சித்துப் பூஜிக்க, சற்று கிருபை செய்வதும், என் புத்தியில் அந்த உபதேசம் நன்றாகச் சித்தித்துப் பயன் தருவதான ஒரு பாக்கிய நாள் எனக்குக் கிடைக்குமோ? - திக்குக்குத் திக்குத் திகுதிகு டுட்டுட்டுட் டுட்டுட் டுடுடுடு
தித்தித்தித் தித்தித் திதியென நடமாடுஞ் சித்தர்க்கு
திக்குக்குத் திக்குத் திகுதிகு டுட்டுட்டுட் டுட்டுட் டுடுடுடு தித்தித்தித் தித்தித் திதியென்று நடனமாடுகின்ற சித்த மூர்த்தியாம் சிவபெருமானுக்கும், - சுத்தப் பரம நல் முத்தர்க்குச் சித்தக் க்ருபையுள சித்தர்க்குப்
பத்தர்க்கு அருளிய குருநாதா
பரிசுத்தமுள்ள, மேலான, நல்ல ஜீவன் முக்தர்களுக்கும், உள்ளத்தில் கருணையுள்ள சித்த புருஷர்களுக்கும், பக்தர்களுக்கும் அருள் பாலித்த குருநாதனே, - ஒக்கத் தக்கிட்டுத் திரியசுர் முட்டக் கொட்டற்றுத் திரிபுரம்
ஒக்கக் கெட்டிட்டுத் திகுதிகு எனவேக உற்பித்துக் கற்பித்து
ஒருசேர நிலைபெற்றதாய் திரிந்து கொண்டிருந்த முப்புரத்து அசுரர்கள் எல்லாருடைய ஆர்ப்பாட்டமும் அடங்கி, திரிபுரங்கள் மூன்றும் ஒன்றாய் அழிந்து போய், திகுதிகு என்று வேகும்படிச் செய்தவராகிய சிவபிரானுக்கு (பிரணவ மந்திரத்தை) உபதேசம் செய்து, - அமரரை முற்பட்டக் கட்டச் சிறைவிடும் ஒள் குக்(கு)டக்
கொற்றக் கொடியுள பெருமாளே.
தேவர்களை முன்பு பட்ட கஷ்டங்கள் கொண்ட சிறையினின்றும் விடுவித்தவனே, ஒளி வீசும் கோழிக் கொடியாம் வெற்றிக் கொடியை உடைய பெருமாளே.