தனனானத் தனந்த தந்தன
தனனானத் தனந்த தந்தன
தனனானத் தனந்த தந்தன ...... தனதான
முலைமேலிற் கலிங்க மொன்றிட
முதல்வானிற் பிறந்த மின்பிறை
நுதல்மேல்முத் தரும்ப புந்தியி ...... லிதமார
முகநேசித் திலங்க வும்பல
வினைமூசிப் புரண்ட வண்கடல்
முரணோசைக் கமைந்த வன்சர ...... மெனமூவா
மலர்போலச் சிவந்த செங்கணில்
மருள்கூர்கைக் கிருண்ட அஞ்சனம்
வழுவாமற் புனைந்து திண்கய ...... மெனநாடி
வருமாதர்க் கிரங்கி நெஞ்சமு
மயலாகிப் பரந்து நின்செயல்
மருவாமற் கலங்கும் வஞ்சக ...... மொழியாதோ
தொலையாநற் றவங்க ணின்றுனை
நிலையாகப் புகழ்ந்து கொண்டுள
அடியாருட் டுலங்கி நின்றருள் ...... துணைவேளே
துடிநேரொத் திலங்கு மென்கொடி
யிடைதோகைக் கிசைந்த வொண்டொடி
சுரர்வாழப் பிறந்த சுந்தரி ...... மணவாளா
மலைமாளப் பிளந்த செங்கையில்
வடிவேலைக் கொடந்த வஞ்சக
வடிவாகக் கரந்து வந்தமர் ...... பொருசூரன்
வலிமாளத் துரந்த வன்திறல்
முருகாமற் பொருந்து திண்புய
வடிவாமற் றநந்த மிந்திரர் ...... பெருமாளே.
- முலை மேலில் கலிங்கம் ஒன்றிட வானில் முதல் பிறந்த மின்
பிறை நுதல் மேல் முத்து அரும்ப புந்தியில் இதம் ஆர
தனங்களின் மேல் ஆடை பொருந்த, வானில் அப்போது தோன்றிய ஒளி வீசும் பிறைச் சந்திரன் போன்ற நெற்றியின் மேல் முத்துப் போல வேர்வை அரும்ப, இதயமெல்லாம் இன்பம் நிரம்ப, - முகம் நேசித்து இலங்கவும் பல வினை மூசிப் புரண்ட வண்
கடல் முரண் ஓசைக்கு அமைந்தவன் சரம் என மூவா மலர்
போலச் சிவந்த செம் க(ண்)ணில்
முகத்தில் நேசத் தன்மை விளங்கவும், பல வஞ்சக எண்ணங்கள் நிறைந்தும், அலைகள் புரளும் வளப்பமுள்ள கடலின் வலிய ஓசைக்கு பொருந்தி (மன்மதன் வீசும்) வலிய பாணங்கள் என்று சொல்லும்படியும், வாடாத பூக்களைப் போலச் சிவந்தும் இருந்த செவ்விய கண்களில், - மருள் கூர்கைக்கு இருண்ட அஞ்சனம் வழுவாமல் புனைந்து
திண் கயம் என நாடி வரும் மாதர்க்கு இரங்கி நெஞ்சமும்
மயலாகிப் பரந்து நின் செயல் மருவாமல் கலங்கும் வஞ்சகம்
ஒழியாதோ
மயக்கம் மிகக் கொள்ளுவதற்கு கரிய மையை தவறாமல் அணிந்து, திண்ணிய யானை போல மதத்துடன் தேடி வருகின்ற பெண்கள்பால் இரக்கம் வைத்து, மனமும் காம மயக்கம் பெருகி, உனக்குச் செய்ய வேண்டிய தொண்டுகளில் ஈடுபடாமல் கலங்குகின்ற மோக நிலை என்னை விட்டு அகலாதோ? - தொலையா நல் தவங்கள் நின்று உ(ன்)னை நிலையாகப்
புகழ்ந்து கொண்டு உ(ள்)ள அடியார் உள் துலங்கி நின்று
அருள் துணை வேளே
கெடாத நல்ல தவ நிலைகளில் இருந்து உன்னை நிலைத்த புத்தியுடன் புகழ்ந்து கொண்டிருக்கும் அடியார்களின் உள்ளத்தே விளக்கத்துடன் இருந்து துணை புரிகின்ற செவ்வேளே, - துடி நேர் ஒத்து இலங்கு மென் கொடி இடை தோகைக்கு
இசைந்த ஒண் தொடி சுரர் வாழப் பிறந்த சுந்தரி மணவாளா
உடுக்கைக்கு நேர் ஒப்பாக நின்று நன்கு விளங்குவதும் மெல்லிய கொடி போன்றதுமான இடையை உடையவளும், மயில் போன்றவளும், ஒளி பொருந்திய கை வளையை அணிந்தவளும், தேவர்கள் வாழப் பிறந்தவளுமாகிய அழகி தேவயானையின் கணவனே, - மலை மாளப் பிளந்த செம் கையில் வடி வேலைக் கொ(ண்)டு
அந்த வஞ்சக வடிவாகக் கரந்து வந்து அமர் பொரு சூரன்
வலி மாளத் துரந்த வன் திறல் முருகா
கிரவுஞ்ச மலை மாளும்படி அதைப் பிளந்து எறிந்த, செவ்விய கையில் உள்ள கூர்மையான வேலைக் கொண்டு, அந்த வஞ்சக வடிவுடன் ஒளித்து வந்து சண்டை செய்த சூரனுடைய வலிமை அழியும்படி நீக்கிய வன்மையைக் கொண்ட வீர முருகனே, - மல் பொருந்து திண் புய வடிவா மற்று அநந்தம் இந்திரர்
பெருமாளே.
மற் போருக்குத் தகுதியான வலிய திருப்புயங்களை உடையவனே, அழகனே, மேலும் அளவற்ற இந்திரர்களுக்குப் பெருமாளே.