திருப்புகழ் 1188 மாண்டார் எலும்பு (பொதுப்பாடல்கள்)

தாந்தான தந்தன தந்தன
தாந்தான தந்தன தந்தன
தாந்தான தந்தன தந்தன ...... தனதான
மாண்டாரெ  லும்பணி  யுஞ்சடை 
யாண்டாரி  றைஞ்ச  மொழிந்ததை 
வான்பூத  லம்பவ  னங்கனல்  ......  புனலான 
வான்பூத  முங்கர  ணங்களு 
நான்போயொ  டுங்கஅ  டங்கலு 
மாய்ந்தால்வி  ளங்கும  தொன்றினை  ......  யருளாயேல் 
வேண்டாமை  யொன்றைய  டைந்துள 
மீண்டாறி  நின்சர  ணங்களில் 
வீழந்தாவல்  கொண்டுரு  கன்பினை  ......  யுடையேனாய் 
வேந்தாக  டம்புபு  னைந்தருள் 
சேந்தாச  ரண்சர  ணென்பது 
வீண்போம  தொன்றல  என்பதை  ......  யுணராதோ 
ஆண்டார்த  லங்கள  ளந்திட 
நீண்டார்மு  குந்தர்த  டந்தனில் 
ஆண்டாவி  துஞ்சிய  தென்றுமு  ......  தலைவாயுற் 
றாங்கோர்சி  லம்புபு  லம்பிட 
ஞான்றூது  துங்கச  லஞ்சலம் 
ஆம்பூமு  ழங்கிய  டங்கும  ......  ளவில்நேசம் 
பூண்டாழி  கொண்டுவ  னங்களி 
லேய்ந்தாள  வென்றுவெ  றுந்தனி 
போந்தோல  மென்றுத  வும்புயல்  ......  மருகோனே 
பூம்பாளை  யெங்கும  ணங்கமழ் 
தேங்காவில்  நின்றதொர்  குன்றவர் 
பூந்தோகை  கொங்கைவி  ரும்பிய  ......  பெருமாளே. 
  • மாண்டார் எலும்பு அணியும் சடை ஆண்டார்
    (தக்ஷயாகத்துக்குப் பின்) இறந்து பட்ட திருமால், பிரமன் முதலோருடைய எலும்பை அணிந்தவரும், ஜடாமுடிகொண்ட தலைவரும் ஆகிய சிவபெருமான்
  • இறைஞ்ச மொழிந்ததை
    உன்னை வணங்க, நீ உபதேசித்த பிரணவப் பொருளை,
  • வான் பூதலம் பவனம் கனல் புனல் ஆன
    விண், பூமி, காற்று, நெருப்பு, நீர் ஆகிய
  • வான் பூதமும் கரணங்களும்
    பெரிய ஐம்பூதங்களும், (மனம், புத்தி, சித்தம், அகங்காரம்) எனப்படும் நான்கு கரணங்களும்,
  • நான் போய் ஒடுங்க அடங்கலும் மாய்ந்தால்
    நான், எனது - என்னும் அகங்கார மமகாரமும் நீங்கி ஒடுங்க, இங்ஙனம் எல்லாம் இறந்துபட்டால்
  • விளங்கும் அது ஒன்றினை அருளாயேல்
    விளங்குவதான அந்த ஒப்பற்ற ஒரு பொருளை நீ எனக்கு அருளாவிட்டால் (அதற்குப் பதிலாக)
  • வேண்டாமை ஒன்றை அடைந்து உ(ள்)ளம்
    வேண்டாமை என்னும் ஆசை நீக்கமான மன நிலை ஒன்றை நான் அடைந்து,
  • மீண்டு ஆறி நின் சரணங்களில் வீழ்ந்து
    என் மனம் மீண்டும் பல திசைகளில் ஓடாது அமைதிபெற்று உனது திருவடிகளில் விழுந்து
  • ஆவல் கொண்டு உருக அன்பினை உடையேனாய்
    ஆசையுடனே உள்ளம் உருகும்படியான அன்பு நிலையை நான் உடையவனாகி,
  • வேந்தா கடம்பு புனைந்து அருள் சேந்தா சரண் சரண் என்பது
    அரசே, கடப்ப மாலை அணிந்த காரணனே, உன் திருவடியே சரணம் என்னும் அந்த வழிபாடு
  • வீண் போம் அது ஒன்று அ(ல்)ல என்பதை உணராதோ
    வீணாகப் போகும்படியான ஒன்று அன்று என்பதை உணரமாட்டேனோ?
  • ஆண்டார் தலங்கள் அளந்திட நீண்டார் முகுந்தர்
    உலகத்தை எல்லாம் ஆள்பவர், மூவுலகையும் தமது திருவடி இரண்டினால் அளக்கவேண்டி நீண்ட உருவம் (விஸ்வரூபம்) எடுத்தவர், முகுந்தர்,
  • தடம் தனில் ஆண்டு ஆவி துஞ்சியது என்று முதலை வாய் உற்று
    மடுவில் அன்றொரு நாள் உயிரே போய்விட்டது என்று முதலையின் வாயில் அகப்பட்டு,
  • ஆங்கு ஓர் சிலம்பு புலம்பிட
    அங்கே ஒரு மலைபோன்ற (கஜேந்திரன் என்னும்) யானை (ஆதிமூலமே என்று) கூச்சலிட,
  • ஞான்று ஊது துங்க சலஞ்சலம் ஆம் பூ முழங்கி அடங்கும் அளவில்
    அப்பொழுது ஊதின பரிசுத்தமான பாஞ்ச ஜன்யம் என்னும் சங்கை, மலரை ஒத்த வாயில் முழக்கம் செய்து சங்கின் ஓசை அடங்குவதற்குள்
  • நேசம் பூண்டு ஆழி கொண்டு வனங்களில் ஏய்ந்து
    அளவில்லாத அன்பு பூண்டு சுதர் ன சக்கரத்தை ஏந்தி (மடு இருந்த) வனத்தை அடைந்து
  • ஆள வென்று வெறும் தனி போந்து ஓலம் என்று உதவும் புயல் மருகோனே
    (அந்த யானையை) ஆண்டருள தான் மாத்திரம் தனியே வந்து அபயம் தந்தோம் என்று உதவிய மேக நிறம் கொண்ட திருமாலின் மருகனே,
  • பூம்பாளை எங்கும் மணம் கமழ்
    அழகிய தென்னம்பாளை எங்கும் நறு மணம் வீசுகின்ற
  • தேம் காவில் நின்றது ஓர் குன்றவர் பூம் தோகை
    இனிய பூஞ்சோலையில் இருந்த ஒப்பற்ற (வள்ளி) மலை வேடர்களின் அழகிய மயில் போன்ற வள்ளியின்
  • கொங்கை விரும்பிய பெருமாளே.
    மார்பகங்களை விரும்பிய பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com