திருப்புகழ் 1187 மாடமதிட் சுற்று (பொதுப்பாடல்கள்)

தானதனத் தத்த தத்த தத்தன
தானதனத் தத்த தத்த தத்தன
தானதனத் தத்த தத்த தத்தன ...... தனதான
மாடமதிட்  சுற்று  மொக்க  வைத்திட 
வீடுகனக்  கத்த  னத்தி  லச்சுறு 
மாலிபமொத்  துப்ர  புத்த  னத்தினி  ......  லடைவாக 
மாதர்பெருக்  கத்த  ருக்க  மற்றவர் 
சூழவிருக்  கத்த  ரிக்க  இப்படி 
வாழ்க்கையில்மத்  தப்ர  மத்த  சித்திகொள்  ......  கடைநாளிற் 
பாடையினிற்  கட்டி  விட்டு  நட்டவர் 
கூடஅரற்  றிப்பு  டைத்து  றுப்புள 
பாவையெடுத்  துத்த  ழற்கி  ரைப்பட  ......  விடலாய 
பாடுதொலைத்  துக்க  ழிக்க  அக்ருபை 
தேடுமெனைத்  தற்பு  ரக்க  வுற்றிரு 
பாதுகையைப்  பற்றி  நிற்க  வைத்தெனை  ......  யருளாதோ 
ஆடகவெற்  பைப்பெ  ருத்த  மத்தென 
நாகவடத்  தைப்பி  ணித்து  ரத்தம 
ரார்கள்பிடித்  துத்தி  ரித்தி  டப்புகை  ......  யனலாக 
ஆழிகொதித்  துக்க  தற்றி  விட்டிமை 
யோர்களொளிக்  கக்க  ளித்த  உக்கிர 
ஆலவிடத்  தைத்த  ரித்த  அற்புதர்  ......  குமரேசா 
வேடர்சிறுக்  கிக்கி  லச்சை  யற்றெழு 
பாரும்வெறுத்  துச்சி  ரிப்ப  நட்பொடு 
வேளையெனப்  புக்கு  நிற்கும்  வித்தக  ......  இளையோனே 
வேகமிகுத்  துக்க  திக்கும்  விக்ரம 
சூரர்சிரத்  தைத்து  ணித்த  டக்குதல் 
வீரமெனத்  தத்து  வத்து  மெச்சிய  ......  பெருமாளே. 
  • மாடம் மதிள் சுற்றும் ஒக்க வைத்திட வீடு கனக்கத் தனத்தில் அச்சுறும்
    வீட்டைச் சுற்றிலும் மதிள் ஒரு சேர வைத்துக் கட்டப்பட்ட அந்த வீடு நிறையும்படி பொருள் சேகரித்து, (அந்தப் பொருள் கொள்ளை போகாமல் இருக்க வேண்டுமென்று) பயம் கொள்பவனாய்,
  • மால் இபம் ஒத்து ப்ரபுத் தனத்தினில் அடைவாக மாதர் பெருக்கத் தருக்கம் அற்றவர் சூழ இருக்கத் தரிக்க
    மயக்கம் கொண்ட யானை போன்ற அதிகார நிலையில் தகுதியுடன் இருந்து, பெண்கள் கூட்டம் பெருத்திருக்க, தன்னோடு எதிர்த்துத் தர்க்கம் பேசாதவர்கள் சூழ்ந்திருந்து ஆதரிக்க,
  • இப்படி வாழ்கையில் மத்தப் ப்ரமத்த சித்தி கொள் கடை நாளில் பாடையினில் கட்டி விட்டு நட்டவர் கூட அரற்றிப் புடைத்து உறுப்பு(ள்)ள பாவை எடுத்துத் தழற்கு இரைப்பட விடல் ஆய
    இங்ஙனம் வாழும் போது பெரு மயக்கம் என்னும் இறப்பு வந்து சேர, இறுதி நாளில் பாடையில் கட்டிவிட்டு நண்பானவர்கள் (பிண ஊர்வலத்துடன்) கூட அழுது அடித்துக் கொண்டு, அவயவங்கள் அத்தனையும் கூடிய பிண்டமாகிய உருவத்தை எடுத்து நெருப்புக்கு இரையாகும்படி விட்டு விடுவதான,
  • பாடு தொலைத்துக் கழிக்க அக்ருபை தேடும் எனைத் தன் புரக்க உற்ற இரு பாதுகையைப் பற்றி நிற்க வைத்து எனை அருளாதோ
    வேதனையை ஒழித்து விடுவதான அந்த அருட் பேற்றினைத் தேடுகின்ற என்னை நான் காத்துக் கொள்ளும் வகைக்கு வைத்து, உனது இரண்டு பாதுகைகளைச் சிக்கெனப் பற்றி நிற்கும்படியாகச் செய்து எனக்கு அருள் பாலிக்க மாட்டாயோ?
  • ஆடக வெற்பைப் பெருத்த மத்து என நாக வடத்தைப் பிணித்து உரத்து அமரார்கள் பிடித்துத் திரித்திட
    பொன் மலை மேருவை பெரிய மத்தாக அமைத்து (வாசுகியாகிய) பாம்பைக் கயிறாகக் கட்டி, பலமுடன் தேவர்கள் பிடித்து (பாற்கடலைக்) கடைய,
  • புகை அனலாக ஆழி கொதித்துக் கதற்றி விட்டு இமையோர்கள் ஒளிக்கக் களித்த உக்கிர ஆல விடத்தைத் தரித்த அற்புதர் குமரேசா
    புகையும் நெருப்புமாக கடல் கொதிப்புற்று யாவரையும் கதற வைத்து, தேவர்கள் ஓடி ஒளிய, மதர்ப்புடன் எழுந்த, கொடுமை கொண்ட, ஆலகால விஷத்தை (தம் கண்டத்தில்) தரித்து நிறுத்திய) அற்புதராகிய சிவபெருமானின் குமார ஈசனே,
  • வேட(ர்) சிறுக்கிக்கு லச்சை அற்று எழு பாரும் வெறுத்துச் சிரிப்ப நட்பொடு வேளை எனப் புக்கு நிற்கும் வித்தக இளையோனே
    வேடர்கள் பெண்ணாகிய வள்ளியினிடத்தில் நாணம் இன்றி, ஏழு உலகில் உள்ளோரும் பரிகசித்துச் சிரிக்க, நட்புப் பாராட்டி இது நல்ல சமயம் என்று சென்று அவளருகில் நின்ற பேரறிவு கொண்ட இளையோனே,
  • வேகம் மிகுத்துக் கதிக்கும் விக்ரம சூரர் சிரத்தைத் துணித்து அடக்குதல் வீரம் எனத் தத்துவத்து மெச்சிய பெருமாளே.
    கோபம் மிக உண்டாகும் வலிமை கொண்ட சூரர்களுடைய தலைகளை அறுத்து அவர்களை அடக்குதல் வீரமாகும் என்ற அவ்வுண்மையைக் கொண்டாடி அனுஷ்டித்த பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com