திருப்புகழ் 1184 மங்காதிங் காக்கு (பொதுப்பாடல்கள்)

தந்தானந் தாத்தந் தனதன
தந்தானந் தாத்தந் தனதன
தந்தானந் தாத்தந் தனதன ...... தனதான
மங்காதிங்  காக்குஞ்  சிறுவரு 
முண்டேயிங்  காற்றுந்  துணைவியும் 
வம்பாருந்  தேக்குண்  டிடவறி  ......  தெணும்வாதை 
வந்தேபொன்  தேட்டங்  கொடுமன 
நொந்தேயிங்  காட்டம்  பெரிதெழ 
வண்போதன்  தீட்டுந்  தொடரது  ......  படியேமன் 
சங்காரம்  போர்ச்சங்  கையிலுடல் 
வெங்கானம்  போய்த்தங்  குயிர்கொள 
சந்தேகந்  தீர்க்குந்  தனுவுட  ......  னணுகாமுன் 
சந்தாரஞ்  சாத்தும்  புயவியல் 
கந்தாஎன்  றேத்தும்  படியென 
சந்தாபந்  தீர்த்தென்  றடியிணை  ......  தருவாயே 
கங்காளன்  பார்த்தன்  கையிலடி 
யுண்டேதிண்  டாட்டங்  கொளுநெடு 
கன்சாபஞ்  சார்த்துங்  கரதல  ......  னெருதேறி 
கந்தாவஞ்  சேர்த்தண்  புதுமல 
ரம்பான்வெந்  தார்ப்பொன்  றிடவிழி 
கண்டான்வெங்  காட்டங்  கனலுற  ......  நடமாடி 
அங்காலங்  கோத்தெண்  டிசைபுவி 
மங்காதுண்  டாற்கொன்  றதிபதி 
அந்தாபந்  தீர்த்தம்  பொருளினை  ......  யருள்வோனே 
அன்பாலந்  தாட்கும்  பிடுமவர் 
தம்பாவந்  தீர்த்தம்  புவியிடை 
அஞ்சாநெஞ்  சாக்கந்  தரவல  ......  பெருமாளே. 
  • மங்காது இங்கு ஆக்கும் சிறுவரும் உண்டே இங்கு ஆற்றும் துணைவியும் வம்ப(பா)ரும் தேக்கு உண்டிட
    பெருமைகள் குறைவு படாமல் இவ்வுலகில் உதவும் மக்களும் அமைந்து, இவ்வாழ்வில் கூட இருந்து துணை புரியும் மனைவியும், புதிய உறவினரும் சேர்ந்து செல்வத்தை வைத்து உண்டு வாழ்ந்திருக்கும்போது,
  • வறிது எ(ண்)ணும் வாதை வந்தே பொன் தேட்டம் கொடு மன(ம்) நொந்தே இங்கு ஆட்டம் பெரிது எழ
    தரித்திரம் என்று எண்ணப்படுகின்ற துன்பம் வந்து சேர, பொன் சேர்த்து வைக்க வேண்டிய கவலையால் மனம் வருந்தி, இவ்வாழ்க்கையில் அலைச்சல் நிரம்ப உண்டாக,
  • வண் போதன் தீட்டும் தொடர் அது படி ஏமன் சங்காரம் போர்ச் சங்கையில் உடல் வெம் கானம் போய்த் தங்கு உயிர் கொள்ள சந்தேகம் தீர்க்கும் தனு உடன் அணுகா முன்
    செழிப்புள்ள தாமரை மலரில் இருக்கும் பிரமன் எழுதி வைத்த எழுத்து வரிசையின்படி யமன் (என் உயிரை அழிப்பதற்குச்) செய்யும் போரின் அச்சத்துடன் உடல் சுடுகாட்டுக்குப் போய்ச் சேரும்படி உயிரைக் கவர, (இந்த உயிர் பிழக்குமோ, பிழைக்காதோ என்னும்) சந்தேகம் தீரும்படி வில் முதலான ஆயுதங்களுடன் என்னை அணுகுவதற்கு முன்,
  • சந்து ஆரம் சாத்தும் புய இயல் கந்தா என்று ஏத்தும் படி என சந்தாபம் தீர்த்து என்று அடியிணை தருவாயே
    சந்தனமும் கடப்ப மாலையும் அணிந்துள்ள திருப்புயங்களை உடையவனே, இயற்றமிழ் ஆகிய (முத்தமிழ் வல்ல) கந்தப் பெருமானே என்று நான் உன்னைப் போற்றும்படி, என்னுடைய மனத் துன்பத்தைத் தீர்த்து எப்பொழுது உன் திருவடி இணைகளைத் தந்து அருள்வாய்?
  • கங்காளன் பார்த்தன் கையில் அடி உண்டே திண்டாட்டம் கொ(ள்)ளும் நெடு கல் சாபம் சார்த்தும் கரதலன் எருது ஏறி
    எலும்பு மாலையை அணிந்தவன், அர்ச்சுனன்* கை வில்லால் அடியுண்டு திண்டாட்டம் கொண்டவன், பெரிய மேரு மலையாகிய வில்லைச் சார வைத்துள்ள திருக் கரத்தை உடையவன், (நந்தி என்னும்) ரிஷப வாகனன்,
  • கந்த ஆவம் சேர்த் தண் புது மலர் அம்பால் வெந்து ஆர்ப்பு ஒன்றிட விழி கண்டான் வெம் காட்டு அங்கு அனல் உற நடமாடி
    பற்றுக் கோடாக வைத்துள்ள அம்புக் கூட்டில் குளிர்ந்த புதிய மலர்ப் பாணங்களை உடைய மன்மதன் வெந்து கூச்சலிடும்படி (நெற்றிக்) கண் கொண்டு பார்த்தவன், கொடிய சுடு காட்டில் நெருப்பை ஏந்தி நடனம் ஆடுபவன்,
  • அங்கு ஆலம் கோத்து எண் திசை புவி மங்காது உண்டாற்கு ஒன்று அதிபதி அம் தாபம் தீர்த்து அம் பொருளினை அருள்வோனே
    அந்தப் பாற்கடலில் ஆலகால விஷத்தை ஒன்று சேர்த்து, எட்டுத் திசைகளைக் கொண்ட பூமியில் உள்ளவர்கள் அழிவுறாமல் இருக்க தானே உண்டவனாகிய சிவபெருமானுக்கு, பொருந்திய உபதேசத் தலைவனாய் (பிரணவ மந்திரத்தை அறிய வேண்டும் என்னும்) அந்த நல்ல தாகத்தைத் தீர்த்து அழகிய அந்த ஞானப் பொருளை உபதேசித்தவனே,
  • அன்பால் அம் தாள் கும்பிடும் அவர் தம் பாவம் தீர்த்து அம் புவி இடை அஞ்சா நெஞ்சு ஆக்கம் தர வல்ல பெருமாளே.
    அன்புடன் அழகிய உனது திருவடியை வணங்கும் அடியார்களுடைய பாவத்தைத் தீர்த்து, அழகிய இப்பூமியில் எதற்கும் பயப்படாத மனதையும் செல்வத்தையும் கொடுக்க வல்ல பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com