தனன தனதன தனத்தத் தாத்தன
தனன தனதன தனத்தத் தாத்தன
தனன தனதன தனத்தத் தாத்தன ...... தனதான
பொருத கயல்விழி புரட்டிக் காட்டுவர்
புளக தனவட மசைத்துக் காட்டுவர்
புயலி னளகமும் விரித்துக் காட்டுவர் ...... பொதுமாதர்
புனித விதழ்மது நகைத்துக் காட்டுவர்
பொலிவி னிடைதுகில் குலைத்துக் காட்டுவர்
புதிய பரிபுர நடித்துக் காட்டுவ ...... ரிளைஞோரை
உருக அணைதனி லணைத்துக் காட்டுவர்
உடைமை யடையவெ பறித்துத் தாழ்க்கவெ
உததி யமுதென நிகழ்த்திக் கேட்பவர் ...... பொடிமாயம்
உதர மெரிதர மருத்திட் டாட்டிகள்
உயிரி னிலைகளை விரித்துச் சேர்ப்பவர்
உறவு கலவியை விடுத்திட் டாட்கொள ...... நினையாதோ
மருது பொடிபட வுதைத்திட் டாய்ச்செரி
மகளி ருறிகளை யுடைத்துப் போட்டவர்
மறுக வொருகயி றடித்திட் டார்ப்புற ...... அழுதூறும்
வளரு நெடுமுகி லெதிர்த்துக் காட்டென
அசட னிரணிய னுரத்தைப் பேர்த்தவன்
மழையி னிரைமலை யெடுத்துக் காத்தவன் ...... மருகோனே
விருது பலபல பிடித்துச் சூர்க்கிளை
விகட தடமுடி பறித்துத் தோட்களை
விழவு முறியவு மடித்துத் தாக்கிய ...... அயில்வீரா
வெகுதி சலதியை யெரித்துத் தூட்பட
வினைசெ யசுரர்கள் பதிக்குட் பாய்ச்சிய
விபுத மலரடி விரித்துப் போற்றினர் ...... பெருமாளே.
- பொருத கயல் விழி புரட்டிக் காட்டுவர் புளக தன வடம்
அசைத்துக் காட்டுவர் புயலின் அளகமும் விரித்துக்
காட்டுவர்
சண்டை செய்த கயல் மீன் போன்ற கண்களை புரட்டிக் காட்டுவர். புளகாங்கிதம் கொண்ட மார்பின் மீதுள்ள மாலையை அசைத்துக் காட்டுவர். மேகம் போன்ற கூந்தலையும் விரித்துக் காட்டுவர். - பொதுமாதர் புனித இதழ் மது நகைத்துக் காட்டுவர்
பொலிவின் இடை துகில் குலைத்துக் காட்டுவர் புதிய
பரிபுரம் நடித்துக் காட்டுவர்
இத்தகைய விலைமாதர்கள் தங்கள் தூய வாயிதழ் ஊறலாகிய தேனை சிரிப்புடன் காட்டுவர். பளபளப்பாயுள்ள இடுப்பில் ஆடையைக் கலைத்துக் காட்டுவர். புதிதாய் அணிந்துள்ள காலில் உள்ள சிலம்பை நடனம் செய்து காட்டுவர். - இளைஞோரை உருக அணை தனில் அணைத்துக்
காட்டுவர் உடைமை அடையவே பறித்துத் தாழ்க்கவே உததி
அமுது என நிகழ்த்திக் கேட்பவர்
வாலிபர்களை (அவர்கள்) மனம் உருகும்படி படுக்கையில் அணைத்துக் காட்டுவர். அவர்களுடைய சொத்து முழுமையாக அபகரித்து வறிஞராகத் தாழும்படிச் செய்ய, கடலினின்றும் தோன்றிய அமுதம் போல இனிமையுடன் பேசிப் பொருளைக் கேட்பார்கள். - பொடி மாயம் உதரம் எரி தர மருந்திட்டு ஆட்டிகள்
உயிரின் நிலைகளை விரித்துச் சேர்ப்பவர் உறவு கலவியை
விடுத்திட்டு ஆட் கொள நினையாதோ
மாயப் பொடியை வயிற்றில் எரிச்சல் உண்டாகும்படி மருந்தை இட்டு ஆட்டி வைப்பார்கள். உயிர் நிலைகளை (தங்கள் கொடு மொழிகளால்) பிரித்தும் கூட்டியும் வைப்பார்கள். இத்தகைய விலைமாதர்களின் சேர்க்கையை நான் விட்டொழியச் செய்து, என்னை ஆண்டு கொண்டருள உன் திரு உள்ளம் நினைக்காதோ? - மருது பொடிபட உதைத்திட்டு ஆய்ச் சேரி மகளிர்
உறிகளை உடைத்துப் போட்டவர் மறுக ஒரு கயிறு
அடித்திட்டு ஆர்ப்புற அழுது ஊறும் வளரு(ம்) நெடு முகில்
மருத மரமாகிய சகடைப் பொடிபடுமாறு உதைத்தவர். ஆயர் சேரியில் இருந்த மகளிருடைய உறிகளை உடைத்துப் போட்டவர். கலங்கும்படி ஒரு கயிற்றினால் அடிபட்டு கட்டுண்டு அழுதவர். பெருகி (திரிவிக்ரமராய்) பேருருவம் எடுத்த நெடிய மேக நிறத்தினர். - எதிர்த்துக் காட்டு என அசடன் இரணியன் உரத்தைப்
பேர்த்தவன் மழையில் நிரை மலை எடுத்துக் காத்தவன்
மருகோனே
எதிரில் காட்டு பார்க்கலாம் என்று (பிரகலாதனைக்) கேட்ட முட்டாள் இரணியனுடைய மார்பைப் பிளந்தவர். மழை பொழிந்த போது பசுக் கூட்டங்களைக் காக்க கோவர்த்தன கிரியைக் குடையாக எடுத்துப் பிடித்து காத்தவராகிய திருமாலின் மருகனே, - விருது பல பல பிடித்துச் சூர் கிளை விகட தட முடி
பறித்துத் தோள்களை விழவும் முறியவும் அடித்துத் தாக்கிய
அயில் வீரா
வீரச் சின்னங்கள் பல ஒலிக்க, சூரனுடைய கூட்டங்களின் பயங்கரமான தலைகளை பறித்தெறிந்து, அவர்களின் தோள்களை விழும்படி முறித்து அடித்துத் தாக்கிய வேல் வீரனே, - வெகு தீ சலதியை எரித்துத் தூள் பட வினை செய்
அசுரர்கள் பதிக்கு உள் பாய்ச்சிய விபுத மலர் அடி விரித்துப்
போற்றினர் பெருமாளே.
பெரிய நெருப்பால் கடலை எரித்துத் தூளாக அழியும்படி தீவினைகளைச் செய்த அசுரர்கள் வாழ்ந்த மகேந்திர நகரில் (அக்கடல் நீரைப்) பாய்வித்து அழித்த தேவனே, மலர்களை உனது திருவடியில் விரியத் தூவிபோற்றிப் பரவும் அடியார்களின் பெருமாளே.