தானன தத்தன தத்த தத்தன
தானன தத்தன தத்த தத்தன
தானன தத்தன தத்த தத்தன ...... தந்ததான
ஓலைத ரித்தகு ழைக்கு மப்புற
மோடிநி றத்தும தர்த்து நெய்த்தற
லோதிநி ழற்குள ளிக்கு லத்துட ...... னொன்றிஞானம்
ஓதிமி குத்தத வத்த வர்க்கிட
ரோகைசெ லுத்திவ டுப்ப டுத்தகி
யூடுவி டத்தையி ருத்தி வைத்தக ...... ணம்பினாலே
மாலைம யக்கைவி ளைத்து நற்பொருள்
வாசமு லைக்குள கப்ப டுத்தியில்
வாவென முற்றிந டத்தி யுட்புகு ...... மந்தமாதர்
மாயம யக்கையொ ழித்து மெத்தென
வானவ ருக்கரு ளுற்ற அக்ஷர
வாய்மையெ னக்குமி னித்த ளித்தருள் ...... தந்திடாதோ
வேலைய டைக்கஅ ரிக்கு லத்தொடு
வேணுமெ னச்சொலு மக்க ணத்தினில்
வேகமொ டப்பும லைக்கு லத்தைந ...... ளன்கைமேலே
வீசஅ வற்றினை யொப்ப மிட்டணை
மேவிய ரக்கர்ப திக்குள் முற்பட
வீடண னுக்கருள் வைத்த வற்றமை ...... யன்கள்மாளக்
காலயி லக்கணை தொட்ட ருட்கன
மாலமை திக்கரை யிற்ற ரித்துல
காளஅ ளித்தப்ர புத்வ ருட்கடல் ...... தந்தகாமன்
காயமொ ழித்தவர் பெற்ற கொற்றவ
நானில வித்ததி னைப்பு னத்தொரு
காதல்மி குத்துமி கப்ர மித்தருள் ...... தம்பிரானே.
- ஓலை தரித்த குழைக்கும் அப்புறம் ஓடி
காதோலை அணிந்த குண்டலத்தைத் தாண்டி அப்புறம் ஓடி, - நிறத்து மதர்த்து நெய்த்த அறல் ஓதி நிழற்குள் அளி
குலத்துடன் ஒன்றி
ஒளிவிட்டு, செழிப்புற்று, வாசனையான எண்ணெய் தடவப் பெற்று, கரிய மணல் போன்ற கூந்தலின் நிழலில் மொய்க்கும் வண்டுகளின் கூட்டத்துடன் பொருந்தி, - ஞானம் ஓதி மிகுத்த தவத்தவர்க்கு இடர் ஓகை செலுத்தி
வடுப்படுத்து
ஞான நூல்களைப் படித்துள்ள பெரிய தவசிகளுக்கு துன்பத்தையும் இன்பத்தையும் கொடுத்து, தனது அடையாளத்தை அவர்கள் மனதில் தழும்புபடச் செய்து, - அகி ஊடு விடத்தை இருத்தி வைத்த கண் அம்பினாலே
பாம்பினிடத்திலுள்ள விஷத்தைத் தங்கும்படி செய்து, கண்களாகிய அம்பைக் கொண்டு, - மாலை மயக்கை விளைத்து நல் பொருள் வாச முலைக்குள்
அகப்படுத்தி
காம மயக்கத்தை உண்டாக்கி, நல்ல செல்வப் பொருளை நறு மணம் கொண்ட மார்பகங்களின் சக்தியால் கைப்பற்றிக் கொண்டு, - இல் வா என முற்றி நடத்தி உள் புகும் அந்த மாதர்
வீட்டுக்கு வா என்று அழைத்து முழுவதும் வசப் படுத்திக் கூட்டிச் சென்று உள்ளே புகுகின்ற விலைமாதர்களின் - மாய மயக்கை ஒழித்து மெத்தென வானவருக்கு அருள் உற்ற
அக்ஷர வாய்மை எனக்கும் இனித்து அளித்து அருள்
தந்திடாதோ
காம இச்சையை ஒழித்து, பக்குவமாக தேவர்களுக்கு அருள் செய்த (சரவணபவ என்னும்) ஷடாக்ஷர எழுத்து உண்மையை எனக்கும் மகிழ்ச்சியுடன் திருவருள் செய்திடக் கூடாதா? - வேலை அடைக்க அரி குலத்தொடு வேணும் என சொ(ல்)லும்
அக்கணத்தினில்
கடலினை அணையிட்டு குரங்குக் கூட்டத்துடன் அடைக்க வேண்டும் என்று சொல்லி, அதைக் கேட்ட அந்த நொடியிலேயே, - வேகமொடு அப்பு மலை குலத்தை நளன் கை மேலே வீச
அவற்றினை ஒப்பம் இட்டு அணை மேவி அரக்கர் பதிக்குள்
முற்பட
மிக விரைவாக அந்தக் கடல் நீரில் மலைக் குவியல்களை நளன் என்னும் வானரத் தச்சன் கைகளால் மேலும் மேலும் வீசி எறிய, அவைகளை இணைத்து அமைத்து அணையாகக் கட்டி, அரக்கர்கள் வசமிருந்த இலங்கைப் பகுதியில் முன்பட்டுச் சேர்ந்து, - வீடணனுக்கு அருள் வைத்து அவன் தமையன்கள் மாள
(அங்கு ராமபிரான்) விபீஷணனுக்கு அருள் புரிந்து, அவனுடைய அண்ணன்களான கும்பகர்ணனும் ராவணனும் இறந்து ஒழிய, - கால் அயில் அக் கணை தொட்ட அருள் கனமால் அமைதிக்
கரையில் தரித்து உலகு ஆள அளித்த ப்ரபுத்வ அருள் கடல்
தந்த காமன்
கூர்மையைக் காட்டும் அம்புகளை விடுத்த திருவருள் வீரம் நிறைந்தவரும், பொறுமைக் கரையில் நிலையாக நின்று உலகை ஆளும்படி (விபீஷணனுக்குக்) கொடுத்த பெருந்தன்மை வாய்ந்தவருமாகிய அருட் கடலாகிய திருமால் பெற்ற மன்மதனுடைய - காயம் ஒழித்தவர் பெற்ற கொற்றவ
உடலை எரித்து ஒழித்த சிவபெருமான் ஈன்ற வீரனே, - நானில வித்த தினைப் புனத்து ஒரு காதல் மிகுத்து மிக
ப்ரமித்து அருள் தம்பிரானே.
(வள்ளிமலையின்) பூமியில் விதைக்கப்பட்டு விளைந்த தினைப்புனத்தில் ஒப்பற்ற ஆசை மிகுந்து, வெகுவாக மயங்கி வள்ளிக்கு அருள் செய்த தம்பிரானே.