திருப்புகழ் 1146 ஓது வித்தவர் (பொதுப்பாடல்கள்)

தான தத்தன தானன தானன
தான தத்தன தானன தானன
தான தத்தன தானன தானன ...... தனதான
ஓது  வித்தவர்  கூலிகொ  டாதவர் 
மாத  வர்க்கதி  பாதக  மானவர் 
ஊச  லிற்கன  லாயெரி  காளையர்  ......  மறையோர்கள் 
ஊர்த  னக்கிட  ரேசெயு  மேழைகள் 
ஆர்த  னக்குமு  தாசின  தாரிகள் 
ஓடி  யுத்தம  ரூதிய  நாடின  ......  ரிரவோருக் 
கேது  மித்தனை  தானமி  டாதவர் 
பூத  லத்தினி  லோரம  தானவர் 
ஈசர்  விஷ்ணுவை  சேவைசெய்  வோர்தமை  ......  யிகழ்வோர்கள் 
ஏக  சித்ததி  யானமி  லாதவர் 
மோக  முற்றிடு  போகித  மூறினர் 
ஈன  ரித்தனை  பேர்களு  மேழ்நர  ......  குழல்வாரே 
தாத  தத்தத  தாதத  தாதத 
தூது  துத்துது  தூதுது  தூதுது 
சாச  சச்சச  சாசச  சாசச  ......  சசசாச 
தாட  டட்டட  டாடட  டாடட 
டூடு  டுட்டுடு  டூடுடு  டூடுடு 
தாடி  டிட்டிடி  டீடிடி  டீடிடி  ......  டிடிடீடீ 
தீதி  தித்திதி  தீதிதி  தீதிதி 
தோதி  குத்திகு  தோதிகு  தோதிகு 
சேகு  செக்குகு  சேகுகு  சேகுகு  ......  செகுசேகு 
சேயெ  னப்பல  ராடிட  மாகலை 
ஆயு  முத்தமர்  கூறிடும்  வாசக 
சேகு  சித்திர  மாக  நிணாடிய  ......  பெருமாளே. 
  • ஓது வித்தவர் கூலி கொடாதவர்
    கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கு அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய கூலியைக் கொடுக்காதவர்கள்,
  • மாதவர்க்கு அதி பாதகம் ஆனவர்
    சிறந்த தவசிகளுக்கு மிக்க இடையூறுகளை விளைவித்தவர்கள்,
  • ஊசலில் கனலாய் எரி காளையர்
    காமத்தின் வசத்தால் நெருப்புப் போல் கொதித்து வேதனை உறும் காளைப் பருவத்தினர்,
  • மறையோர்கள் ஊர் தனக்கு இடரே செயும் ஏழைகள்
    வேதம் ஓதுபவர்கள் இருக்கும் ஊர்களுக்கு துன்பம் விளைவிக்கின்ற அறிவிலிகள்,
  • ஆர் தனக்கும் உதாசின தாரிகள்
    யாவரிடத்தும் அலட்சியமாக நடந்து கொள்ளுபவர்கள்,
  • ஓடி உத்தமர் ஊதியம் நாடினர்
    வேகமாக வந்து, நல்லவர்களிடத்து (ஏமாற்றி) இலாபம் அடைய விரும்புவர்கள்,
  • இரவோருக்கு ஏதும் இத்தனை தானம் இடாதவர்
    இரந்து கேட்போருக்கு கொஞ்சம் கூட தானம் செய்யாதவர்கள்,
  • பூதலத்தினில் ஓரம தானவர்
    உலகில் ஒருதலைப்பட (பாரபட்சமாகப்) பேசுபவர்கள்,
  • ஈசர் விஷ்ணுவை சேவை செய்வோர் தமை இகழ்வோர்கள்
    சிவபெருமானையும், திருமாலையும் வழிபடுவர்களை தாழ்மையாகப் பேசுபவர்கள்,
  • ஏக சித்த தியானம் இலாதவர்
    ஒரு முகப்பட்ட மனதுடன் தியானம் செய்யாதவர்கள்,
  • மோகம் உற்றிடு போகிதம் ஊறினர்
    மிகுந்த காமத்துடன் இன்ப நிலையில் மூழ்கி இருப்பவர்கள்,
  • ஈனர் இத்தனை பேர்களும் ஏழ் நரகு உழல்வாரே
    இழி குணம் படைத்தவர்கள், இவ்வளவு பேர்களும் ஏழு நரகங்களில் வீழ்ந்து அலைச்சல் உறுவார்கள்.
  • தாத தத்தத தாதத தாதத தூது துத்துது தூதுது தூதுது சாச சச்சச சாசச சாசச ...... சசசாச தாட டட்டட டாடட டாடட டூடு டுட்டுடு டூடுடு டூடுடு தாடி டிட்டிடி டீடிடி டீடிடி ...... டிடிடீடீ தீதி தித்திதி தீதிதி தீதிதி தோதி குத்திகு தோதிகு தோதிகு சேகு செக்குகு சேகுகு சேகுகு ...... செகுசேகு சே எனப் பலர் ஆடிட
    (இதே தாள ஒலிகளுடன்) பல மக்கள் கூத்தாட,
  • மா கலை ஆயும் உத்தமர் கூறிடும் வாசக
    சிறந்த கலைகளை ஆய்ந்துள்ள நற்குணம் உடையவர்கள் புகழ்ந்து போற்றிடும் தேவாரப் பாக்களைச் (சம்பந்தராக வந்து) அருளியவனே,
  • சேகு சித்திரமாக நின்று ஆடிய பெருமாளே.
    சிவந்த நிறத்துடன் அழகாக நின்று கூத்து** ஆடிய பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com