திருப்புகழ் 1140 உறவின்முறை கதறி (பொதுப்பாடல்கள்)

தனதனன தனதனன தானான தானதன
தனதனன தனதனன தானான தானதன
தனதனன தனதனன தானான தானதன ...... தந்ததான
உறவின்முறை  கதறியழ  ஊராரு  மாசையற 
பறைதிமிலை  முழவினிசை  யாகாச  மீதுமுற 
உலகிலுள  பலரரிசி  வாய்மீதி  லேசொரியு  ......  மந்தநாளில் 
உனதுமுக  கருணைமல  ரோராறு  மாறிருகை 
திரள்புயமு  மெழில்பணிகொள்  வார்காது  நீள்விழியும் 
உபயபத  மிசைகுலவு  சீரேறு  நூபுரமும்  ......  அந்தமார்பும் 
மறையறைய  அமரர்தரு  பூமாரி  யேசொரிய 
மதுவொழுகு  தரவில்மணி  மீதேமு  நூலொளிர 
மயிலின்மிசை  யழகுபொலி  யாளாய்மு  னாரடியர்  ......  வந்துகூட 
மறலிபடை  யமபுரமு  மீதோட  வேபொருது 
விருதுபல  முறைமுறையி  லேயூதி  வாதுசெய்து 
மதலையொரு  குதலையடி  நாயேனை  யாளஇஙன்  ......  வந்திடாயோ 
பிறையெயிறு  முரணசுரர்  பேராது  பாரில்விழ 
அதிரஎழு  புவியுலக  மீரேழு  மோலமிட 
பிடிகளிறி  னடல்நிரைகள்  பாழாக  வேதிசையில்  ......  நின்றநாகம் 
பிரியநெடு  மலையிடிய  மாவாரி  தூளியெழ 
பெரியதொரு  வயிறுடைய  மாகாளி  கூளியொடு 
பிணநிணமு  முணவுசெய்து  பேயோடு  மாடல்செய  ......  வென்றதீரா 
குறமறவர்  கொடியடிகள்  கூசாது  போய்வருட 
கரடிபுலி  திரிகடிய  வாரான  கானில்மிகு 
குளிர்கணியி  னிளமரம  தேயாகி  நீடியுயர்  ......  குன்றுலாவி 
கொடியதொரு  முயலகனின்  மீதாடு  வாருடைய 
வொருபுறம  துறவளரு  மாதாபெ  றாவருள்செய் 
குமரகுரு  பரஅமரர்  வானாடர்  பேணஅருள்  ......  தம்பிரானே. 
  • உறவின் முறை கதறி அழ ஊராரும் ஆசை அற
    உறவு முறையைச் சொல்லி சுற்றத்தினர் வாய்விட்டுக் கதறி அழ, ஊரில் உள்ளவர்களும் என்னைப் பிழைக்கவைக்கலாம் என்ற ஆசையைக் கைவிட,
  • பறை திமிலை முழவின் இசை ஆகாச(ம்) மீது உற
    பறை, திமிலை, முரசு ஆகிய வாத்தியங்களின் ஒலி ஆகாய முகடு வரை எழ,
  • உலகில் உள பலர் அரிசி வாய் மீதிலே சொரியும் அந்த நாளில்
    உலகில் உள்ள பலரும் வாய்க்கரிசி இடும் அந்தக் கடைசி நாளில்,
  • உனது முக கருணை மலர் ஓராறும்
    உன்னுடைய கருணைத் திருமுக மலர்கள் ஒரு ஆறும்,
  • ஆறு இரு கை திரள் புயமும் எழில் பணி கொள் வார் காது நீள் விழியும்
    பன்னிரண்டு திருக்கரங்களுடன் கூடிய திரண்ட தோள்களும், அழகிய அணிகளை அணிந்துள்ள வரிசையான காதுகளும், நீண்ட கண்களும்,
  • உபய பதம் மிசை குலவு(ம்) சீர் ஏறு நூபுரமும் அந்த மார்பும்
    இரண்டு திருவடிகளின் மீதும் விளங்கும் சிறப்பு மிக்க சதங்கையும், அழகு மிகுந்த அந்த மார்பும்,
  • மறை அறைய அமரர் தரு பூமாரியே சொரிய
    வேதங்கள் ஒலிக்க, தேவர்கள் கற்பக மலர் மழை சொரிய,
  • மது ஒழுகு தரவில் மணி மீதே முன்னூல் ஒளிர
    தேன் ஒழுகும் ஒப்பற்ற மணி மாலையின்மேல் பூணூலும் விளங்க,
  • மயிலின் மிசை அழகு பொலி ஆளாய் முன் ஆர் அடியர் வந்து கூட
    மயிலின் மேல் அழகு விளங்கும் நம்பியாக, முன்பு நிறைந்த அடியார்கள் உடன் வந்து கூட,
  • மறலி படை யமபுரமும் மீது ஓடவே பொருது
    யமனுடைய படைகள் அஞ்சி யமபுரத்தை நோக்கி ஓட்டம் பிடிக்கும்படி அவர்களுடன் போர் புரிந்து,
  • விருது பல முறை முறையிலே ஊதி வாது செய்து
    பல வெற்றிச் சின்னங்களை வரிசை வரிசையாக ஊதி, உன்னுடன் வாது செய்பவர்களைத் தர்க்கித்து வென்று,
  • மதலை ஒரு குதலை அடி நாயேனை ஆள இ(ங்)ஙன் வந்திடாயோ
    குழந்தை அன்பு கொண்டவனான ஒரு மழலைச் சொல் பேச்சுள்ள அடி நாயேனை ஆட்கொள்ள இவவிடம் வந்து உதவ மாட்டாயோ?
  • பிறை எயிறு முரண் அசுரர் பேராது பாரில் விழ
    பிறைச் சந்திரன் போன்ற பற்களும், முரட்டு வலிமையும் கொண்ட அசுரர்கள் திரும்ப முடியாமல் மண்ணில் மாண்டு விழவும்,
  • அதிர எழு புவி உலகம் ஈரேழும் ஓலம் இட
    ஏழு தீவுகளுடன் கூடிய இப் பூமண்டலம் நடுங்கவும், பதினான்கு உலகத்தினரும் அபயக் கூச்சலிடவும்,
  • பிடி களிறின் அடல் நிரைகள் பாழாகவே
    பெண் யானை, ஆண் யானை (இவற்றின்) வலிமை பொருந்திய கூட்டங்கள் பாழ்பட்டு அழியவும்,
  • திசையில் நின்ற நாகம் பிரிய நெடு மலை இடிய மா வாரி தூளி எழ
    அஷ்ட திக்குகளைக் காத்து நின்ற கஜங்கள் இடம் விட்டு ஓட்டம் கொள்ளவும், நீண்ட மலைகள் இடிந்து விழவும், பெரிய கடல் வற்றிப் புழுதி கிளம்பவும்,
  • பெரியது ஒரு வயிறுடைய மா காளி கூளியொடு
    பெரிய வயிற்றை உடைய மகா காளி பூதங்களோடு
  • பிண நிணமும் உணவு செய்து பேயோடும் ஆடல் செய வென்ற தீரா
    பிணத்தின் கொழுப்பையும் மாமிசத்தையும் உண்டு, அந்தப் பேய்களோடு கூத்தாடவும், போர் செய்து வெற்றிகொண்ட தீரனே,
  • குற மறவர் கொடி அடிகள் கூசாது போய் வருட
    குறக்குல மலை வேடர்களின் கொடி போன்ற வள்ளியின் திருவடிகளை வெட்கம் இல்லாமல் (நீ) சென்று பற்றி அருளும்பொருட்டு,
  • கரடி புலி திரி கடிய வாரான கானில் மிகு
    கரடியும், புலியும் திரிகின்ற கடுமையான நீண்ட காட்டில் விளங்கி எழுந்த
  • குளிர் கணியின் இள மரமதே ஆகி நீடி உயர் குன்று உலாவி
    வேங்கையின் இள மர வடிவம் எடுத்து நின்று, பின்பு, நீண்டு உயர்ந்திருந்த வள்ளி மலையில் உலவியவனே,
  • கொடியது ஒரு முயலகனின் மீது ஆடுவாருடைய
    பொல்லாதவனாகிய முயலகன் என்னும் பூதத்தின் மீது நடனம் புரிகின்ற சிவபெருமானுடைய
  • ஒரு புறம் அது உற வளரும் மாதா பெறா அருள் செய் குமர குருபர
    ஒரு பாகத்தில் பொருந்தி விளங்கும் தாய் பார்வதி பெற்றருளிய குமரனே, குருமூர்த்தியே,
  • அமரர் வான் நாடர் பேண அருள் தம்பிரானே.
    இறவாத தன்மைபெற்ற விண்ணோர்கள் விரும்பிப் போற்ற அவர்களுக்கு அருள் செய்த தம்பிரானே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com