திருப்புகழ் 1139 உலகத்தினில் (பொதுப்பாடல்கள்)

தனதத்தன தானன தந்தன
தனதத்தன தானன தந்தன
தனதத்தன தானன தந்தன ...... தனதான
உலகத்தினில்  மாதரு  மைந்தரும் 
உறுசுற்றமும்  வாழ்வொடு  றுங்கிளை 
உயர்துக்கமு  மோடுற  வென்றுற  ......  வருகாலன் 
உதிரத்துட  னேசல  மென்பொடு 
உறுதிப்பட  வேவள  ருங்குடில் 
உதிரக்கனல்  மீதுற  என்றனை  ......  யொழியாமுன் 
கலகக்கலை  நூல்பல  கொண்டெதிர் 
கதறிப்பத  றாவுரை  வென்றுயர் 
கயவர்க்குள  னாய்வினை  நெஞ்சொடு  ......  களிகூருங் 
கவலைப்புல  மோடுற  என்துயர் 
கழிவித்துன  தாளிணை  யன்பொடு 
கருதித்தொழும்  வாழ்வது  தந்திட  ......  நினைவாயே 
இலகப்பதி  னாலுல  கங்களும் 
இருளைக்கடி  வானெழு  மம்புலி 
யெழில்மிக்கிட  வேணியில்  வந்துற  ......  எருதேறி 
இருகைத்தல  மான்மழு  வும்புனை 
யிறையப்பதி  யாகிய  இன்சொலன் 
இசையப்பரி  வோடினி  தன்றரு  ......  ளிளையோனே 
மலைபட்டிரு  கூறெழ  வன்கடல் 
நிலைகெட்டபி  தாவென  அஞ்சகர் 
வலியற்றசு  ரேசரு  மங்கிட  ......  வடிவேலால் 
மலைவித்தக  வானவ  ரிந்திரர் 
மலர்கைக்கொடு  மாதவ  ருந்தொழ 
வடிவுற்றொரு  தோகையில்  வந்தருள்  ......  பெருமாளே. 
  • உலகத்தினில் மாதரும் மைந்தரும்
    உலகில் மனைவி முதலிய பெண்களும், புதல்வர்களும்,
  • உறு சுற்றமும் வாழ்வொடு உறும் கிளை
    நெருங்கிய சுற்றத்தாரும், நல்ல வாழ்வுடன் வாழும் மற்ற உறவினர்களும்,
  • உயர் துக்கமுமோடு உறவு என்றுற வரும் காலன்
    மிக்க துயரத்தோடு பந்துக்கள் என்று வந்து கூடும்படியாக வருகின்ற யமன்,
  • உதிரத்துடனே சலம் என்பொடு
    இரத்தத்துடன் நீர், எலும்பு இவைகளுடன்
  • உறுதிப்படவே வளரும் குடில் உதிர
    நல்ல உறுதியாக வளர்ந்துள்ள இந்த உடல் அழிய
  • கனல் மீது உற என்று எனை ஒழியா முன்
    நெருப்பில் சேரும்படி என்னை இந்த வாழ்க்கையை விட்டு (அந்த யமன்) நீக்குதற்கு முன்பாக,
  • கலக கலை நூல் பல கொண்டு எதிர் கதறி பதறா
    கலகத்துக்கு இடம் தரும் சமய நூல்கள் பலவற்றைக் கற்று எதிர் வாதம் பேசியும், பதறியும்,
  • உரை வென்று உயர் கயவர்க்கு உளனாய்
    பேச்சில் வல்லவனாய் வென்று, கீழ் மக்களுக்கு உள்ள புத்தியைக் கொண்டவனாய்,
  • வினைநெஞ்சொடு களி கூரும்
    தீவினைக்கு உரிய எண்ணத்துடன் செருக்கு மிகும்
  • கவலை புலமோடு உற என் துயர் கழிவித்து
    சஞ்சலம் உறும் அறிவுடன் நான் இருக்க, நீ என் துக்கத்தை நீக்கி
  • உன தாள் இணை அன்பொடு கருதி
    உனது இரண்டு திருவடிகளை அன்புடன் நான் தியானித்து
  • தொழும் வாழ்வது தந்திட நினைவாயே
    வணங்கும் நல் வாழ்வை தந்திட நினைத்தருள்வாயாக.
  • இலக பதினாலு உலகங்களும்
    விளங்கும்படி பதினான்கு உலகங்களிலும்
  • இருளை கடிவான் எழும் அம்புலி
    இருட்டை விலக்கி ஒழிப்பதற்காக வானில் எழுகின்ற சந்திரன்
  • எழில் மிக்கிட வேணியில் வந்து உற எருது ஏறி
    அழகு மிகுந்து பொலிய சடையில் வந்து பொருந்த, ரிஷப வாகனத்தின் மேல் ஏறி,
  • இரு கைத்தலம் மான் மழுவும் புனை இறை
    இரண்டு கைகளிலும் மானும், மழுவும் விளங்குகின்ற கடவுள்,
  • அப்பதியாகிய இன் சொலன்
    அந்தத் தலைவராகிய இனிய சொற்களைக் கொண்ட சிவபெருமானுடைய
  • இசைய பரிவோடு இனிது அன்று அருள் இளையோனே
    மனதிற்குப் பொருந்தும்படி அன்புடன் இன்பகரமாக முன்பு உபதேசித்த இளையோனே.
  • மலை பட்டு இரு கூறு எழ
    கிரெளஞ்ச மலை தாக்கப்பட்டு இரண்டு பிளவு உண்டாக,
  • வன் கடல் நிலை கெட்டு
    வலிய கடல் நிலை குலைந்து,
  • அபிதா என அம் சகர்
    அழகிய உலகத்தில் உள்ளவர்கள் அடைக்கலம் என்று முறையிட,
  • வலி அற்ற அசுரேசரும் மங்கிட
    வலிமை நீங்கிய அசுரத் தலைவர்களும் பொலிவு இழந்திட,
  • வடிவேலால் மலை வித்தக
    கூரிய வேலினால் மலைக்கும்படியாக போர் செய்த ஞானியே,
  • வானவர் இந்திரர் மலர் கைகொடு மாதவரும் தொழ
    தேவர்களும், இந்திரர்களும், மலர் ஏந்திய கரங்களோடு சிறந்த தவசிகளும், வணங்கி நிற்க,
  • வடிவுற்ற ஒரு தோகையில் வந்து அருள் பெருமாளே.
    அழகு பொருந்திய ஒப்பற்ற மயிலின் மீது வந்து அருளும் பெருமாளே.

kaumaram.com மற்றும் திரு கோபால சுந்தரம் அவர்களுக்கு நன்றி 🙏

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com