திருப்புகழ் · 1127ஆராதனர் ஆடம்பர (பொதுப்பாடல்கள்)ArAdhanarAdambara
தானாதன தானந் தனத்த தானாதன தானந் தனத்த
தானாதன தானந் தனத்த ...... தனதான
Thiruppugazh Anbargal
ஆராதன ராடம் பரத்து மாறாதுச வாலம் பனத்து
மாவாகன மாமந் திரத்து ...... மடலாலும்
ஆறார்தெச மாமண் டபத்தும் வேதாகம மோதுந் தலத்து
மாமாறெரி தாமிந் தனத்து ...... மருளாதே
நீராளக நீர்மஞ் சனத்த நீடாரக வேதண்ட மத்த
நீநானற வேறின்றி நிற்க ...... நியமாக
நீவாவென நீயிங் கழைத்து பாராவர வாநந்த சித்தி
நேரேபர மாநந்த முத்தி ...... தரவேணும்
வீராகர சாமுண்டி சக்ர பாராகண பூதங் களிக்க
வேதாளச மூகம் பிழைக்க ...... அமராடி
வேதாமுறை யோவென் றரற்ற ஆகாசக பாலம் பிளக்க
வேர்மாமர மூலந் தறித்து ...... வடவாலும்
வாராகர மேழுங் குடித்து மாசூரொடு போரம் பறுத்து
வாணாசன மேலுந் துணித்த ...... கதிர்வேலா
வானாடர சாளும் படிக்கு வாவாவென வாவென் றழைத்து
வானோர்பரி தாபந் தவிர்த்த ...... பெருமாளே.
பத உரைword meanings
- ஆராதனர் ஆடம் பரத்து
பூஜை செய்வோரது ஆடம்பரத் தோற்றத்தைக் கண்டும், - மாறாது சவாலம் பனத்தும்
இடைவிடாது செய்யும் ஜபத்திலுள்ள ஆசையினாலும், - ஆவாகன மாமந் திரத்து மடலாலும்
தெய்வம் எழுந்தருள வேண்டிச் செய்யும் சிறந்த தகட்டு யந்திரங்களைக் கண்டும், - ஆறார்தெச மாமண் டபத்தும்
(ஆறும் பத்தும் கூடிய) பதினாறு கால்கள் கொண்ட பெரிய மண்டபக் காட்சியாலும், - வேதாகம மோதுந் தலத்தும்
வேதம், ஆகமம் இவை முழங்கும் இடத்தைக் கண்டும், - ஆமாறு எரி தாம் இந்தனத்து மருளாதே
யாகங்களுக்கு வேண்டிய நெருப்பில் இடும் சமித்துக்களைக் கண்டும் பிரமித்து அவற்றில் மயங்காமல், - நீராளக நீர்மஞ்சனத்த
(அடியார்களின்) கண்ணீர் பெரிதாகப் பெருகும் அபிஷேகத்தைக் கொள்பவனே, - நீள் தாரக
சிறப்புமிக்க ஓம் என்னும் தாரக மந்திரத்துக்கு உரியவனே, - வேதண்ட மத்த
மலைகளுக்கு உரியவனே, - நீநானற வேறின்றி நிற்க
நீ என்றும் நான் என்றும் உள்ள த்வைத பாவம் நீங்க அத்வைத நிலையைப் பெற - நியமாக நீவாவென நீயிங் கழைத்து
அன்னியம் இல்லாமல் உறவோடு நீ வா என்று இங்கு நீ என்னை அழைத்து - பாராவர ஆநந்த சித்தி
கடல் போன்று பெரிதான ஆனந்த நிலையையும், - நேரேபரமாநந்த முத்தி தரவேணும்
உடனே பரமானந்தமாகிய முக்தி நிலையையும் தந்தருள வேண்டுகிறேன். - வீராகர
வீரத்துக்கு இருப்பிடமானவனே, - சாமுண்டி சக்ர பாராகண பூதங் களிக்க
துர்க்கையும், சக்ர வியூகமாக வகுக்கப்பட்டு நிற்கும் காவல் கணங்களான பூதங்களும் மகிழ, - வேதாளசமூகம் பிழைக்க அமராடி
பேய்க் கூட்டங்கள் பிணங்களை உண்டு பிழைக்கும்படியும், போர் புரிந்து, - வேதாமுறை யோவென்றரற்ற
பிரமன் அபயம் என்று முறையிட்டுக் கூச்சலிட, - ஆகாசகபாலம் பிளக்க
அண்ட கூடம் பிளவுபட, - வேர்மாமர மூலந் தறித்து
சூரன் மாயமாக நின்ற மாமரத்தின் அடிவேரையே வெட்டி, - வடவாலும் வாராகர மேழுங் குடித்து
வடவாக்கினியையும்*, நிலைத்த சமுத்திரங்கள் ஏழையும் குடித்து, - மாசூரொடு போரம் பறுத்து
பெரிய சூரனோடு செய்த போரிலே அவன் செலுத்திய அம்புகளை அறுத்தெறிந்து, - வாணாசன மேலுந் துணித்த கதிர்வேலா
பாணங்கள் தங்கும் இடமான வில்லையும் கூடவே வெட்டித் தள்ளிய ஒளி வேலனே, - வானாடர சாளும் படிக்கு வாவாவென வாவென் றழைத்து
தேவலோகத்தை அரசாளும்படிக்கு வாருங்கள், வாருங்கள், வாருங்கள் என்று அழைத்து, - வானோர்பரிதாபந் தவிர்த்த பெருமாளே.
தேவர்களின் பரிதபிக்கத்தக்க துக்கநிலையை நீக்கிய பெருமாளே.
குறிப்புகள் · notes
- * பிரளய காலத்தில் உலகம் அழியுமுன் வட துருவத்திலிருந்து வரும் நெருப்பு அலையை 'வடவாக்கினி' என்பர்.
- * vadavAgni is the avalanche of fire supposed to come from the north pole to devour the entire world at the time of final destruction.
