திருப்புகழ் · 1123மெய்க்கூணைத் தேடி (பொதுப்பாடல்கள்)meykkUNaiththEdi
தத்தா தத்தா தத்தா தத்தா
தத்தா தத்தத் ...... தனதான
தினம் ஒரு திருப்புகழ் Dinam oru Thiruppugazh
மெய்க்கூ ணைத்தே டிப்பூ மிக்கே
வித்தா ரத்திற் ...... பலகாலும்
வெட்கா மற்சே ரிச்சோ ரர்க்கே
வித்தா சைச்சொற் ...... களையோதிக்
கைக்கா ணிக்கோ ணற்போ தத்தா
ரைப்போ லக்கற் ...... பழியாதுன்
கற்பூ டுற்றே நற்றா ளைப்பா
டற்கே நற்சொற் ...... றருவாயே
பொய்க்கோ ணத்தாழ் மெய்க்கோ ணிப்போய்
முற்பால் வெற்பிற் ...... புனமானைப்
பொற்றோ ளிற்சேர் கைக்கா கப்பா
தத்தாள் பற்றிப் ...... புகல்வோனே
முக்கோ ணத்தா னத்தா ளைப்பால்
வைத்தார் முத்தச் ...... சிறியோனே
முத்தா முத்தீ யத்தா சுத்தா
முத்தா முத்திப் ...... பெருமாளே.
பத உரைword meanings
- மெய்க்கு ஊணைத் தேடிப் பூமிக்கே வித்தாரத்தில் பல காலும்
வெட்காமல் சேரிச் சோரர்க்கே வித்து ஆசைச் சொற்களை
ஓதி
இந்த உடல்பசிக்கு உணவை நாடி பூமியில் அதிகமாகப் பல முறையும் நாணம் என்பதே இல்லாமல் பரத்தையர் சேரியில் உள்ள கள்ள மனம் உடைய வேசியரைத் தேடி, ஆசையை அடிப்படையாகக் கொண்ட பேச்சுக்களைப் பேசி, - கைக்காணிக் கோணல் போதத்தாரை போலக் கற்பு
அழியாது
அந்தப் பரத்தையர்களுக்குக் காணிக்கையாகப் பொருள் கொடுக்கும் கோணல் வழியில் செல்லும் அறிவீனரைப் போல நான் ஒழுக்கத்தைக் கைவிடாமல், - உன் கற்பு ஊடுற்றே நல் தாளைப் பாடற்கே நல் சொல்
தருவாயே
உன்னுடைய பெருங் குணங்களைக் கற்கும் நெறியில் நின்று, உன் சிறந்த திருவடிகளைப் பாடுவதற்காக செஞ்சொற்களைத் தந்தருளுக. - பொய்க் கோள் நத்து ஆழ் மெய்க் கோணிப் போய்
(வேடன், வேங்கை, செட்டி, கிழவன் ஆகிய) பொய்யான வேஷங்களைக் கொள்ளுதலை விரும்பி, ஆழ்ந்து நாணத்தால் உடலும் கூனலுற்றுச் சென்று, - முற்பால் வெற்பில் புன மானைப் பொன் தோளில்
சேர்க்கைக்காகப் பாதத் தாள் பற்றிப் புகல்வோனே
பழம்பெரும் பொருளாகிய வள்ளி மலையில் தினைப்புனத்தில் இருந்த மான் போன்ற வள்ளியின் அழகிய தோள்களில் சேரும் பொருட்டு, அவள் பாதமாகிய திருவடியைப் பிடித்து வணங்கி ஆசை மொழிகளைச் சொன்னவனே, - முக்கோண தானத்தாளைப் பால் வைத்தார் முத்தச்
சிறியோனே
மூன்று மூலைக் கோண வடிவமான மந்திர சக்கரத்தில் அமைந்து விளங்கும் பார்வதியை தமது இடது பாகத்தில் வைத்த சிவபெருமான் முத்தமிடும் குழந்தையே, - முத்தா முத்தீ அத்தா சுத்தா முத்தா முத்தி பெருமாளே.
முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான* அக்கினி வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி அளிக்கும் பெருமாளே.
குறிப்புகள் · notes
- * மூன்று வகையான அக்கினிகள் பின்வருமாறு: யாகவனீயம் - வேதத்தை வழங்கச் செய்வது. தக்ஷிணாக்கினி - தேவர்களுக்குக் காணிக்கை கொடுக்கச் செய்வது. காருகபத்தியம் - பூலோகத்தை ரக்ஷிக்கச் செய்வது. ... திருமுருகாற்றுப்படை.
- இந்த முடிவுள்ள மற்ற 10 திருப்புகழ் பாடல்கள் பின்வருமாறு: 341 - கொத்தார் பற் கால், 595 - மெய்ச் சார்வு அற்றே, 768 - கட்காமக்ரோத, 1116 - உற்பாதம் பூ, 1117 - எற்றா வற்றா, 1118 - செட்டாகத் தேனை, 1119 - பட்டு ஆடைக்கே, 1120 - பத்து ஏழு எட்டு, 1121 - பொற்கோ வைக்கே, 1122 - பொற் பூவை, ... என்று தொடங்கும் பாடல்கள்.
- * Three kinds of holy fires as per the ancient Tamil Text ThirumurugAtRuppadai: YAgavaneeyam - Fire for offering sacrifices to obtain the VEdAs; DakshinAgni - Fire for offering sacrifices to the celestials; Karukapathyam - Fire for offering sacrifices for the prosperity of the earth.
- The following are 10 other songs from Thiruppugazh having the same last line as this: 0341 - koththAr paR kAl, 0595 - meych chArvu atRE, 0768 - katkAmakrOtha, 1116 - uRtpAtham pU, 1117 - etRA vatRA, 1118 - settAgath thEnai, 1119 - pattu AdaikkE, 1120 - paththu Ezhu ettu, 1121 - poRtkO vaikkE, and 1122 - poRt pUvai
